ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2024

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி


ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே நம்முள் ள்ள அமில சக்தியை எல்லாம் நம் நிலைக்குகந்த அமில குணத்தை இந்த ஞானத்தின் ஈர்ப்பிற்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்திட்டால் எவ்வமிலத்தை நாம் எவ்வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு மற்ற அமில குணங்களும் இதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
1.அதனதன் குணம் என்றுமே மாறாது.
2.ஆனால் அதனை இதனின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும்.
 
நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
1.நமக்குள் உள்ள இப் பன்னிரண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டிட்டால்
2.அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்
3.இதன் ஈர்ப்பில் அந்த குணத்துக்குடைய இக்காற்றினில் சுற்றிக் கொண்டிருக்கும் உடலை விட்டுப் பிரிந்த
4.மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடு இல்லாமல் இக்குண அமிலதத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
 
இப்படிச் சேரும் ஆவி அமிலங்களில் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல்நிலை அவ் உடலில் உள்ள உயிர் ஆத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் இதன் நிலைக்கே தான் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.
 
பக்தி ஞானம் சித்து என்ற நல்லுணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்‌.
 
இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை அத் தீய அமில சக்தி மென்மேலும் அதனை இழுத்துச் சென்று வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிர் ஆத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இவ்வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது.
 
இவ் வெறி கொண்ட ஆவி உலக ஆவி மனித ஜீவ உடல் கொண்ட அதே குணநிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி மென்மேலும் இவ்வெறி உணர்வு அதிகப்பட்டு உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அவ்வாவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற இரத்தக் காட்டேறிகளாய் அவ் உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.
 
இன்று உலகில் எல்லா பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் எந்த நிலையில்…?
1.இரத்தக்காட்டேறிகளாய் ஆவி உலகில் சூழ்ந்துள்ள இவ்வாத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுக்கத்தான்
2.அவைகள் செய்யும் வெறிச் செயலினால் இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன.
 
இம் மனிதனே தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக்காட்டேறி ஆகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான் தேவனாகவும் செயல்படுகின்றான். எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான். தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.
 
1.ந‍மக்கு எல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அவ்வாதி சக்தி
2.அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்.
3.எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அவ்விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
4.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு காலகட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
5.இக்கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்
6.தனக்குகந்தது எது என்று அவளுக்குத் தெரியும்… மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.
7.மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள்.
 
இதனை உணர்ந்து இரத்தக்காட்டேறிகளாய் அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல் அன்பென்னும் பக்தி நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழிநடத்தி அந்த ஞானத்தின் சித்தடைவோம்.