ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2024

இப்பிறப்பில் நாம் வந்ததுவே “முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்…”

இப்பிறப்பில் நாம் வந்ததுவே “முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்…”


வீடு கட்ட அதற்கு அஸ்திவாரம் பலம் பெறல் வேண்டும். அதைப்போல் சுவர் எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அதற்குகந்த அளவை வைத்துக் கூட்டிச் சுவர் எழுப்பினால்தான் அச்சுவர் உறுதியாய் இருக்கும். அதைப்போல்
1.நம் உடலில் உள்ள அமில நிலைகள் அததற்குகந்த தன்மையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் கொள்ளும்
2.இவ்வுடல் ஆரோக்கியம் பெற்றால் அதுவே எண்ணத்தின் மையக் கோலாகி ஆத்மீகத்தின் ஆத்ம சக்தியைப் பெற முடியும்.
 
நாம் சலிப்பு, சங்கடம், கோபம், பேராசை, அதி உல்லாசம் இப்படி உள்ள நிலையில் வாழும் பொழுது நாம் எடுக்கும் சுவாசமானது கனமாகி
1.நம் உடலில் சேரும் அமிலத்தன்மைகள் கூடியும் குறைந்தும் அவ்வமில சக்தி சுரப்பி அமிலம் சுரக்கும் பொழுது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு
2.எண்ண நிலையும் சோர்வு பூண்டு நம் உடல் என்னும் இக் கூடே பல பிணிகளுக்கு ஆளாகின்றது.
 
சுவர் எழுப்ப அதன் கொள்ளவில் எந்தச் சாமான் அளவு நிலையிலிருந்து மாறுபட்டாலும் அச்சுவருக்குப் பலமில்லை. மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும் சிமெண்ட் அதிகப்பட்டால் வெடிக்கும் தன்மையும் நீர் அதிகம் சேர்ந்தால் அதன் பக்குவ முறைக்குச் செயல்படா வண்ணமும் மனிதனால் எழுப்பப்படும் சுவருக்கே அதன் கலவை குணம் மாறுபடும் பொழுது உரு நிலை கொள்வதில்லை.
 
இம்மனித உடலுக்கும் இம் மனிதனின் உடலில் உள்ள அமில சக்திகள் கூடிக் குறையும் நிலை ஏற்பட்டால் சக்தி நிலை எப்படி வலுப்பெறும்…? வலுப் பெறாது…!
 
காட்சி:-
ஆற்றின் கரையும் ஓடமும் துடுப்பும் இருப்பதைப் போலவும் நாங்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல அவ் ஓடத்தில் ஏறி அவ் ஓடக்காரனால் நீரின் போக்குக்குச் செல்லாமல் நீரை எதிர்த்துத் துடுப்புப் போட்டு ஓடத்தை ஓட்டி அக்கரைக்குச் சென்று இறங்குகின்றோம்.
 
விளக்கம்:-
அதைப் போல் இவ்வுலக பந்தத்தில் பிறந்த நம் ஆத்மாவைக் கரை சேர்க்க இவ்வாழ்க்கை என்ற ஆற்றினைக் கடக்க எதிர்த்து துடுப்புப் போட்டுத் தான் நாம் செல்லும் மார்க்கத்தை இவ்வுலக வாழ்க்கையில் இருந்து மெய் உலக வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும்.
 
1.நாம் செல்லும் ஓடமும் நாம் நம்பி ஏறிய ஓடக்காரனின் திறமையும் நன்றாக அமைந்தால் நாம் செல்லும் வழி எளிதாகின்றது
2.இவ்வுடல் என்ற இக்கூடு ஆரோக்கியமுடன் நல்லெண்ணம் பெற்ற நிலை கொண்ட ஆத்மாவாய் இவ் ஓடம் போல் இருந்தால்
3.அதை ஓட்டுபவனின் திறமையை ஒத்த வாழ்க்கையில் ஒன்றப்பெறும்
4.அவரவர்களுடன் இணையும் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அமைதல் வேண்டும்.
 
நல்ல ஓடமும் திறமை மிக்க ஓடக்காரனும் இருந்தால் செல்லும் வழி எளிதாகின்றது. எதிர்த் துடுப்புச் செலுத்தி நம் வாழ்க்கையில் ஏற்படும் பல நிலைகள் கொண்ட எதிர் நிலைகளை இத்துடுப்புப் போல் எதிர்த் துடுப்புப் போட்டுத்தான் அக்கரைக்குச் செல்ல வேண்டும்.
 
 ஓடம் செல்லும் வழியிலும் நாம் செல்ல முடியாது. நீர் தானாக அவ் ஓடத்தை இழுத்துதான் செல்லும்.
1.நடக்கும்படி நடக்கட்டும் நமக்கு வரும் வினைகள் எல்லாம் ஆண்டவன் அளித்தது அவனே பார்த்துக் கொள்வான் என்ற நிலையில்
2.நீர் போகும் போக்கில் ஓடும் போவதைப் போல் அல்ல.
 
எந்த ஒரு இன்னலான நிலை ஏற்பட்டாலும் அதன் போக்கில் செல்லாமல்
1.இன்னலிலிருந்து மீளும் வலுவான எதிரான துடுப்பைப் போன்ற வலுக்கொண்ட செயல் செய்தால்தான் இன்னலிலிருந்து மீளவும் முடியும்
2.நம் வாழ்க்கைப் பாதையும் நன்றாக அமையும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
நாம் இஜ் ஜென்மப் பிறப்பில் வந்த பயனை வாழ்க்கை என்ற வடிவில் முழுமை எய்தி நாம் அடைய வேண்டிய அக்கரையின் அக்கரையில் என்பதற்குப் பொருள்
1.இப்பிறப்பில் நாம் வந்ததுவே முன்  ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்
2.அதற்காகத்தான் அக்கரை என்னும் ஞான ஒளி மார்க்கத்திற்குச் செல்லும் வழி அறிந்து நாம் செயல்பட வேண்டும்.