ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2024

வரும் எதிர்நிலைக்கு அடிமைப்படாமல்… “நல் ஞானத்தின் வழித் தொடரைப் பெறல் வேண்டும்”

வரும் எதிர்நிலைக்கு அடிமைப்படாமல்… “நல் ஞானத்தின் வழித் தொடரைப் பெறல் வேண்டும்”


ஆவியான இவ்வுலகில் ஒலி, ஒளி, நீர் இவற்றின் சக்தியுடனே சகல திரவியங்கள், பிம்பங்கள் பல கோடி நிலைகள் ஏற்படுகின்றன. அதைப் போல் அவற்றுடனே மனித ஆத்மாக்களின் எண்ண நிலையும் கலந்துறவாடி எடுக்கும் சுவாசம் கொண்டு அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
 
ஆவியான ஒலி, ஒளி, நீரில் இருந்து தான் எல்லா ஜீவனுமே.
1.பாலில் நீர் கலந்தாலும் எண்ணெயில் நீர் கலந்தாலும் அந்நீரின் நிலை தன் நிலையைக் காட்டுவதில்லை
2.தனித்து. எதிலும் எதுவாகவும் அந்நீர் எப்படிக் கலக்கின்றதோ அதைப் போல் எல்லாவற்றிலும் எல்லாமாய் ஆண்டவனின் சக்தி கலந்துள்ளது.
 
நம் எண்ணம் எல்லாவற்றுடனும் கலந்திருந்தாலும் எல்லாமில் எல்லாமாய் இருந்தே நம் ஞானத்தை நாம் பெறல் வேண்டும்.
 
ஞானம் பெற்று, நான் என்ற நிலை பெற்றுவிட்டால், நம் ஞானமும் செயல்படாது. ஞானம் என்பதுவே நமக்காக மட்டுமல்ல.
1.நம் ஞானத்தைக் கொண்டு பலர் ஞானங்கள் பெறச் செய்ய
2.நமக்கு ஏற்பட்ட நல் ஞானம் என்றுணர்ந்து நீரைப் போல் ஞான சக்தி இருக்க வேண்டும்.
 
நீர் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை. நீரைப்போல் தான் பெற்ற ஞானத்தை ஞானிகள் வழி நடத்திடல் வேண்டும்.
 
காட்சி:-
இரும்பைப் பழுக்கக் காய்ச்சி தட்டுதல்
 
விளக்கம்:-
எந்த ஒரு பொருளையும் அதனை உருவாக்க எவ்வுருவில் காண உருப்படுத்துகின்றோமோ அதற்குகந்த பக்குவ நிலை ஏற்பட்டால் தான் நாம் காணும் பொருளை நாம் உருவாக்க முடியும்.
 
அதைப் போல் சக்தியின் அருள் ஞானம் பெறவும்
1.நம் எண்ண ஞானத்தைப் பல நிலைகளில் பக்குவம் கொண்டால் தான்
2.நாம் எண்ணிய ஈசனின் ஞானம் பெற முடியும்.
 
காட்சி:-
சிறிய ஊசியில் அதற்குகந்த நூலைக் கோப்பதைப் போலவும் பெரிய ஊசியில் அதற்குகந்த நூலைக் கோப்பதைப் போலவும் காட்சி.
 
விளக்கம்:-
1.தன் ஞானம் என்பது குருவின் ஞானத்திலிருந்து
2.எண்ண நிலை வளர்ச்சி கொள்ளும் நிலைப்படி தான் சேர்க்கப்படுகின்றது.
 
ஊசியில் உள்ள துவார நிலைக்கொப்பத்தான் நூல் கோக்கப்படுமேயன்றி பொருந்தாத நூலைக் கோப்பது எப்படி…?
 
பக்தி, ஞானம் என்ற வழித்தொடர் பெற்று சத்திய முக்தி நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலை பெற்றே ஈசன்பால் செல்லும் பக்குவத்தை பக்தி மார்க்கத்திலிருந்து நல் ஞானம் பெறும் வழிமுறையை அறிதல் வேண்டும்.
1.எண்ணியவுடன் வந்தடைவதல்ல எல்லா சக்தியும்
2.ஏற்கும் முறைப்படி தான் சக்தி நிலை கூடும்.
 
குழந்தைக்கு ஆரம்ப பாட அறிவு தாயே புகட்டுகின்றாள். அம்மா, அப்பா, கடவுள் இப்படிப் பேசும் திறனைப் பழக்கிk கல்விச் சாலைக்கு அனுப்புகின்றாள்.
 
அந்தந்த வயது நிலைக்கொப்ப அறிவின் கல்வி புகட்ட அதற்குகந்த கல்வித்திறன் பெற்ற போதகரினால் அக்குழந்தை போதனைக்குட்பட்டு அதன் வளர்ச்சியின் மூப்பினால் பிறருக்குப் போதிக்கும் பக்குவம் பெற்று விடுகின்றது.
 
அதைப் போல் பக்தி என்ற வழிப்படுத்தி பூஜை முறையில் ஆரம்பத் தாயின் கல்வி அறிவைப் போன்றது தான் பக்தி, பூஜை முறை.
 
பக்தியின் வழித்தொடரில் ஞானம் பெற வேண்டும்.
1.ஞானத்தின் வழியில் சித்தாகி சித்தினால் ரிஷித் தன்மை பெற்றுச் சப்தரிஷி ஆகி
2.அப்பக்தியின் முக்தி கொண்ட நிலை பெற்று மீண்டும் தன் சக்தியைக் கொண்டே பல சக்திகளை ஒளி பெறும் பக்குவம் பெறல் வேண்டும்.
 
காட்சி:-
சாதம் உண்ணுவதைப் போலவும் அதில் ஒரு கல் பட்டு உடம்பு சிலிர்ப்பதைப் போலவும் காட்டுகின்றார்.
 
விளக்கம்:-
1.நல் நிலையில் நல் உணர்வும் நல்ல ஜெபமும் ஆத்மீக ஞான வழி பெற்றாலும்
2.அமுதான உணவைப்போல் உணவு உண்ணும் பொழுது
3.”கூட வந்த கல்லைப் போல் நம் நிலையில் நல்ல உணர்வான சக்தி நிலையில் வாழ்ந்தாலும் நமக்கேற்படும் சில சோதனைகள் வரத்தான் செய்யும்.
4.அந்நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக நாம் உணவையே உண்ணாமல் இருப்பதில்லை.
5.வரும் எதிரான செயலுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் நல் ஞானத் தொடரை வழி பெற்றே செயல் புரிதல் வேண்டும்.