ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2024

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்


வாழ்க்கை என்ற நிலை அமைதியுடன் செல்லல் வேண்டும். அதுதான் வாழ்க்கையின் முழுமை. ஒருநிலை கொண்ட ஆண்டவனின் ஜெபத்தை மட்டும் ஜெபித்தே ஆண்டவன்பால் செல்வதல்ல வாழ்க்கை. ஒரு நிலை கொள்ள வேண்டும். ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்.
 
எங்குள்ளானப்பா நீங்கள் சொல்லும் ஆண்டவன்…?
 
1.ஒன்றுடன் ஒன்று இணைத்ததுதான் ஆதிசக்தியின் நிலையே
2.காற்றும் நீரும் மோதுண்டால் ஒளி பிறக்கின்றது
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் ஜீவன் பிறக்கின்றது
4.ஜீவன் பிறக்கவே இவ் ஒலி நீர் ஒளி ஏறிய பிறகுதான் அஜ்ஜீவனுக்கு சுவாசத் துடிப்பு கொள்ளுகின்றது.
5.சுவாசத் துடிப்பு பெற்றவுடன் அமில குணத்தை அஜ்ஜீவ அணு
6.தன்னுள் மோதுண்டு மோதுண்டு ஈர்க்கும் பக்குவம் பெற்றுச் சுழலுகின்றது.
 
இப்படியே அதன் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்பை இப்பூமியில் மோதுண்டு அதன் வளர்ச்சி நிலைக்கு அதன் ஈர்ப்பிற்கொப்ப அதன் சுவாசத்திற்கேற்ற வழித்தொடர் பெறுகின்றது.
 
எவ்வுயிர் அணு தோன்றி அதன் குண நிலை பெறுவதும் ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில் ஜீவனே பெறாது. இரண்டு நிலைகள் கொண்ட நிலையின் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழலுவதுதான் ஒவ்வொரு மண்டலமும் மண்டலத்தில் சிக்கியுள்ள எல்லா ஜீவன்களும்.
 
1.தனித்த ஆண்டவன் எங்குள்ளான்…?
2.அமைதி கொண்ட ஒருநிலை கொண்ட ஆண்டவன் ஜெபம் பெற்று செல்லும் நிலை எதுவப்பா…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே. இச்சுழலில் தான் உள்ளது.
 
மோதுண்ட சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் வடிவுகளாகி வழங்கும் மண்டல வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களே…
1.தனித்த ஆண்டவன் இல்லையப்பா
2.எல்லாமில் எல்லாமாய் ஒளிரும் ஆண்டவன்தான்.
 
ஞானவழி பெற்றவர்களுக்கு:-
காட்சி:
-
ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு ஆட்டுவதைப் போலவும் ஆட்டும் நிலையில் ஒரே மாதிரி ஆட்டி வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன் ஒலி கிளம்பி நர நரத்த நிலையுடன் மீண்டும் முதல் நிலையிலேயே அம்மாவு அரைபடும் பக்குவத்தைக் காட்டுகின்றார்.
 
விளக்கம்:-
1.ஞானத்தின் வழி பெற்று நாம் சென்றாலும் நம்மை அறியாமல் சில ஊடுருவல்கள் வந்து மோதும்
2.மோதலின் நிலைக்காக நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல்
3.சுழலும் பொழுது மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து தனித்து நிற்காமல்
4.நம் ஞானவழி மீண்டும் செயல் கொள்ளும்.
 
காட்சி:-
பெரிய ஆலமரம்… அதற்கு அருகில் அடுப்பெரித்து உலை வைத்துச் சமையல் செய்கிறார்கள். அதே சமயத்தில் மற்றோர் இடத்தில் சிறிய ஒரு செடி பகலின் சூரியனின் நேர் உஷ்ணத்தைத் தாங்காமல் வாடி வதங்கி நிற்கின்றது.
 
விளக்கம்:
-
ஆரம்ப ஞானவழிக்குச் சூரியனின் வெப்ப நிலையையே தாக்குப் பெறாத சிறிய செடியின் நிலையில் நாம் இருந்தாலும் ஆலமரத்தின் நிலைக்கொப்ப நம் ஞானத்தின் விழுதுகளை வளர்த்துக் கொண்டால் ஆலமரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் சூரியனின் இயற்கை ஒளியைக் காட்டிலும் செயற்கையாய் எரிக்கப்படும் இவ் ஏரிகள் ஆலமரத்தை எந்த நிலையிலும் தாக்குவதில்லை.
 
ஆலமரம் மட்டுமல்ல வளர்ந்த எம்மரமும் தான். அதைப் போல்
1.தன் நிலையில் உயர்ந்த ஞான வழி பெற்ற ஞானிகளை எந்நிலை கொண்ட சஞ்சலங்களோ மற்ற எதிர்படும் எல்லா நிலைகளும்
2.நன்மை தீமை கொண்ட இரண்டு நிலைகளும் அந்த ஞானியின் நிலையில் ஒட்டாமல் அவர் ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
காட்சி:-
நிலத்திலிருந்து ஓர் ஆத்மலிங்கம் வளர்ந்து வருகிறது. அவ்விலிங்கமே ஓர் மரமாக சப்தரிஷியைப் போல் காட்சியளித்து மேடான நிலையில் நின்று கொண்டு அவர் கையிலிருந்து ஓர் ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றனர்.
 
மேடான இடத்திற்கு கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அவ் ஒளி லிங்கம் அளிக்கப்படும் என்று பலரும் கையேந்தி வேண்டி நிற்கின்றனர்.
 
இவரோ அவ்வொளி லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி அவ்வொளியைப் பாய்ச்சிக் கொண்டே தான் உள்ளாரேயன்றி யாருக்கும் தனித்து அவ்வொளி லிங்கம் அளிக்கப்படவில்லை…!”
 
ஆனால்
1.அவர் உருட்டிய ஒளி அலைகள் பாயப் பெற்ற அவ்வொளியை ஈர்த்து
2.தன் ஒளியை அவ் ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம் அவ் லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
3.மீண்டும் அவர் கையிலிருந்த அவ்வொளியான லிங்கம் முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பரப்பிக் கொண்டே உள்ளது.
 
அவ்விலிங்கமே கிடைக்கும் என்று கையேந்தி நிற்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கிறார்கள். அச்சப்த மகரிஷியும் தான் பெற்ற அவ்வொளி லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.
 
விளக்கம்:-
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாய் நமக்களிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாய் ஒன்றுபோல் தான் ஒளி வீசுகின்றான்.
 
1.அவ்வொளி அருளை நாம் பெற்று அவ்வொளியுடன் ஒன்றும் ஒளியாய்த் தான் நம் செயல் இருக்க வேண்டுமே அன்றி
2.ஆண்டவனே வந்து நமக்கு அளிக்கட்டும் என்றால்… ஏங்கி நிற்கும் நாள் வரை காத்துத்தான் இருக்க வேண்டும்.
3.ஏனென்றால் எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும் அவ்வொளியை ஆண்டவனே வந்து நமக்கு அருளப் போவதில்லை
 
அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியப்படுவது தான் ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி. அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.
 
இதன் நிலையைப் புரிந்து
1.ஆண்டவன் அருளை வேண்டி நிற்காமல்
2.ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்.