ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2024

“தன் பலம்" காணுங்கள்

“தன் பலம்" காணுங்கள்


1.தன் சக்தி நிலை கூடக்கூட ஆத்ம பலம் வலுவேறி
2.தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றித் தன் பலம் என்னும் உண்மை பலத்தை
3.இம் மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.
 
தன் பலம் பெறத்தக்க வழிமுறைகளைப் பல உணர்த்தியுள்ளோம். மண் மணலாகி மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி பாறையாகி மலையாகி வாழவில்லையா…?
 
ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக்கூடி வலுப்பெற்று வளர்ந்து கொண்டேதான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்…” அறிவாற்றல் கொண்டுள்ள மனிதன்
1.தன் ஞானத்தை இவ்வழித்தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற
2.மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி நிலை வளரப் பெறுகிறது.
 
உயிரணுவாய் உயிராத்மாவாய் இச்சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது இயற்கையின் உயர் சக்தி மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி அவ்வுயிராத்மாவை வளர்க்கக் கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால் இம் மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.
 
காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கும் செயலைப்போல் மனிதனாய் வாழும் நாமும் நம் எண்ணத்தை இவ் இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது இவ்வெண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து நம் உயிராத்மா பலம் கொள்கின்றது.
 
இக்காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை எடுக்கின்றார்கள்.
1.இவ்வுலகினில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால்தான் செயல் கொள்ள முடியும்.
 
நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.
 
இப்பூமி பல மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளையும் அம் மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கின்றது என்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகிறது.
 
நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இவ்வுலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவுமும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்துதான் எல்லாமே செயல் கொள்கின்றன.
 
மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர். இவ்வுடலும் மற்ற எல்லாமுமே மின் அலையின் கூட்டுத்தான்.
 
மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்மக்கூட்டை இவ்வுடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துதோடு இல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சிகளுக்கெல்லாம்… நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.
 
பல கோடி கோடி உயிரணுக்களின் துணை கொண்டு உயிர் வாழும் நாம் இவ்வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கையை வாழ்ந்து இம்மனிதனாய் வாழ்ந்த வாழக்கூடிய செயல் பெற்ற நாம்
1.இவ்வெண்ணச் சுழற்சியை எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்…
2.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
3.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
4.பயன் கண்டு இச்சுழற்சி வாழ்க்கையில் வாழ்ந்து மட்டும் எப்பயனை எவ்வாத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆத்மா) கண்டது…?
 
ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை (அடைய) உணர பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.
 
தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அப்பரம்பொருளின் சக்தி அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தை நாம் சேமிக்கலாம்.
 
நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
1.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
2.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறை கூட்டி
3.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
4.அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
5.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
6.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத்தொடரில் ஐக்கியம் கொண்டே வாழக்கூடிய பக்குவம் நாம் பெறுவது தான்
7.நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை.
 
நாக சர்ப்பம் விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாய் இருப்பதினால் அதன் எண்ண நிலை எதன் நிலைக்கும் மாறு கொள்வதில்லை. விஷ ஜெந்துவாய் நாம் காண்கின்றோம். அவ்விஷத்தையே உரமாக்கி வைரமாக்கி மாணிக்கமாய் சேமித்து வளர்த்து ஒரு நிலையில் வாழ்கின்றது‌ அந்நாக சர்ப்பம்…
 
பல நினைவலைகள் பலவும் உள்ளவன் தான் மனிதன்.
1.பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைத் தான் பெறல் வேண்டும்
2.பெற்று தன் பலம் காணுங்கள் என்று உணர்த்துகின்றோம்.
 
இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் குண வட்டத்தில்தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்ந்து வாழுகின்றன. ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ் ஜீவ ஜெந்துக்களின் நிலையில்தான் பல மாற்ற குணங்கள் உண்டு.
 
1.தன் நிலை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் உலக ஞானத்தையும்
2.மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும் அப்பரம்பொருளின் உண்மையையும் உணர முடியும்.