ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2024

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.