ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2024

பேரண்ட மகரிஷிகள்

பேரண்ட மகரிஷிகள்

 

1.”பேரண்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்…”
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்
3.இதுவரையிலும் யாம் உபதேசித்து வருவதும்… உணர்த்தி வருவதும்.

இதைப் பதிவாக்கி மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது துருவ தியானத்தின் மூலம் அனுதினமும் அதைப் பெற்று அந்த அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞான வித்துக்களைத்தான் ஊன்றுகின்றேன் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் ஏங்கிப் பெறுங்கள்.
1.பேரண்ட மகரிஷிகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நினைவுகள் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையும்படியாக நினைவாற்றலைப் பெருக்குங்கள்.

அதை உங்களுக்குள் பெருக்கினால் கூர்மை அவதாரமாக உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாறுகின்றது. அதுவே மனிதனின் கடைசி எல்லை.
1.மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.. மறவாதீர்கள்…
2.என்னால் சாத்தியமாகுமா…? என்று எண்ணி சோர்வடையச் செய்து விடாதீர்கள்.

யாகங்கள் செய்தோ வேள்விகள் செய்தோ இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

காரணம்…
1.அதிலே மந்திரங்களை ஓதி அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அது “வசியமாகி” விடுகின்றது.
2.இறந்த பின் அதே மந்திரத்தை யார் ஜெபிக்கிறார்களோ அது “கைவல்யம்…”
3.அதை மற்றவர்கள் பயன்படுத்தப்படும் பொழுது “ஏவல்…”

உலக மதங்கள் அனைத்தும் இந்த வழிப்படி தான் சென்று கொண்டிருக்கின்றது. நான் (ஞானகுரு) யாரையும் குறை கூறவில்லை. அரசன் காட்டிய வழிகள் பின் வந்தோர் பதிவு செய்த உணர்வே விளைகின்றது. அதன் வழியிலே இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

“இன்று வாழும் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது…”

மதம் என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது மனிதனைச் சீர்குலைக்கும் நிலையாகப் பகைமை உணர்வுகள் வளர்கின்றது/ மதத்திற்குள் இனம் என்று வரப்படும் பொழுது “என் இனம் பெரிது… இல்லை என் இனம் தான் பெரிது…” என்று ஒன்றை ஒன்று அழித்துக் கொன்று குவித்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று வருகின்றது…

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் ஒளியைப் பெருக்கும் நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. இதை அறிந்து கொண்ட நாம்
1.இனியாவது மகரிஷியின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.
2.மகரிஷிகள் உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்…
3.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

நமது பார்வையில் உலக மக்கள் தன்னைத் தான் அறிந்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று தவமிருப்போம்.

நம்மை உருவாக்கிய அன்னை தந்தையரை மறவாது அவர்களைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய அவர்களைக் கடவுளாக மதித்து… நல்வழி காட்டிய அவர்களை குருவாக மதித்து… அதன் வழியில் எண்ணியதை உருவாக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்.

நாம் எண்ணியதை உயிரே உடலாக்குகின்றது… நினைவாக்கும் பொழுது அதுவே தெய்வமாகச் செயல்படுகின்றது… மீண்டும் அதை எண்ணும்பொழுது அது குருவாக அதன் வழியிலேயே நம்மைச் செயலாக்குகின்றது. ஆகவே
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் குருவாக்குவோம்… அதனை நினைவாக்குவோம்
2.மகரிஷிகள் சென்ற பாதையில் இந்த வாழ்க்கையில் ஒளியின் சரீரம் பெறுவோம்.