ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2024

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

 

என் குழந்தை திருமணமாகி எந்த வீடு சென்றாலும் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்த சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் அங்கே செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று தாய் தந்தை எண்ண வேண்டும்

அதே போன்று தன் மகனுக்குப் பெண் வேண்டுமென்றால் மகாலட்சுமி போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண்ணாக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எண்ணினால்…
1.அதற்குத்தக்க இடத்திற்கு அழைத்துச் சென்று நல்ல மணமகனையும் நல்ல மணமகளையும் தேர்ந்தெடுக்க முடியும்…
2.அந்த சக்தி உங்களுக்குள் வளரும்.

ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால் அதற்குள் சிக்கி அதற்குத் தான் நீங்கள் அடிமையாக முடியுமே தவிர அதனால் நல்ல நிலை வரப்போவதில்லை… மெய் உணர்வை அறியச் செய்யாது.

ஆகவே அதை விடுத்து விட்டு மனம் ஒத்துச் சென்றால் அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

இருந்தாலும் மனம் ஒன்றி இருக்கிறது…
1.ஜாதகம் ஒன்றி வரவில்லையே…” என்றால்
2.இது ஆழமாகப் பதிவாகி கடைசியில் சோர்வின் தன்மை அடைந்து விடுவீர்கள்.
3.அந்தச் சோர்வுக்குத் தக்க தான் மாப்பிள்ளையோ பெண்ணோ பார்க்கும்படி ஆகிவிடும்.
4.அதன் வழியில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்த பின் “கீரியும் பாம்பும்” போன்று தான்
5.அவருடைய வாழ்க்கை அமையும்… மகிழ்ச்சி பெறும் தன்மை இழக்கப்படுகிறது.

இன்றைய வழக்கில்… ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள்… ஆயுளையுமப்படி நிர்ணையிக்கின்றார்கள். அவர்கள் ஜாதகம் பார்த்த பிரகாரம் நோய் இல்லாது வாழ்கின்றனரா…?

எல்லாப் பொருத்தமும் இருந்தாலும் அவர்களுக்கு நோய் வராது என்பார்கள் ஆனால் நோய் வராது இருக்கிறதா…? ஆகவே ஜாதகப் பொருத்தங்கள் சரியாக அமைவதில்லை…!

1.மனப் பொருத்தம் ஆகி ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் அவருடைய எதிர்காலம் சிந்தித்து செயல்படும் தன்மை பெறும்.
3.அருள் ஞானிகள் வழியில் அருள் ஒளி பெற வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலையினை விட்டுத் தள்ளுங்கள்…!

அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையில் “குடும்பத்தில் அனைவரும் மனம் ஒத்து வாழ வேண்டும்…” என்ற இந்த எண்ணங்களை கூட்டிக்கொண்டு வாருங்கள்.

பெண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவருடைய வாழ்க்கையில் நோயைப் பற்றி விசாரிங்கள்.

ஆண் என்றால் குணத்தை பற்றி விசாரிங்கள். சீரிய பண்பு இல்லை என்றால் இங்கே வந்தாலும் சரியாக வராது… இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றார்களா…? என்று பாருங்கள். அப்படிச் செயல்படும் பொழுது… முறைப்படி தியாநித்தால் அந்த நல்ல ஒழுக்கம் மீண்டும் வளரத் தொடங்குகிறது… திருமணத்திற்குப் பின் அங்கே தவறுகள் ஏற்படாது.

ஆனால் பெண் இப்படி மாப்பிள்ளை இப்படி என்று ஆசையின் நிலைகளில் உணர்ச்சிகளை ஊட்டி விடுவார்கள். அதைக் கேட்டு ஏமாந்து விட்டால் “ஏமாந்து விட்டேனே…” என்று தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளுக்கு வந்து விடுகின்றது.

துருவ தியானத்திலிருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போல வாழ வேண்டும் என்றுதான் எண்ணுதல் வேண்டும்
1.மணப்பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்…
2.மணமகனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள்.

எங்கள் குழந்தை எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் நலமும் வளமும் பெற வேண்டும். அதனுடைய பார்வை குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போல் வீட்டிற்கு வரும் மருமகளும்
1.மகாலட்சுமி போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்… மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வைப் பெற வேண்டும்.
2,அத்தகைய பெண் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து செலுத்துங்கள்

அதற்குண்டான சக்தி கிடைத்து நல்ல பெண்ணும் நல்ல மாப்பிள்ளையும் அமையும்…!.