3/12/2018

நமக்குள் எந்த உணர்வு ஆழமாகப் பதிவாகின்றதோ அந்த உணர்வு தான் நம்மை இயக்கும் – மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கினால் மகரிஷியாக ஆவோம்…!


ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையில் எல்லோரும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தான் வாழ்கின்றோம்.

உதாரணமாக கடைவீதிக்குச் சென்று ஒரு கடையில் சரக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தக் கடைக்காரர் தெரிந்தவராக இருக்கலாம்... அல்லது தெரியாதவராகவும் இருக்கலாம். நாம் கடைக்காரரிடம் சரக்குக் கேட்கும் சமயம் நம்மை போல் மற்றவர்களும் கேட்பார்கள்.

அதில் ஒருவர் கொஞ்சம் முரட்டு பலம் உள்ளவராக இருந்தால் நாம் கேட்கும் சமயம் நம்மைத் தட்டி விட்டு விட்டு அவருக்கு வேண்டியதைக் கேட்பார்கள். அடிக்கடி எரிந்து விழுவார்கள்.

நீங்கள் ஏன் இந்த மாதிரிக் கேட்கின்றீர்கள் என்று நாம் சொன்னால் உடனே அவருக்குக் கோபம் வரும்.

முதலில் வந்த நாம் நமக்கு வேண்டியதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
1.ஆனால் இந்த ஆளுக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறது என்று
2.நாம் அதைப் பதிவாக்கி விடுகின்றோம்.
3.அந்தப் பதிவின் உணர்வு நமக்குள் ரெகார்டு (RECORD) ஆகிவிடுகின்றது.
4.அதாவது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது.

ரெகார்டு ஆனவுடனே நாம் என்ன சொல்கிறோம்...! என்னை இப்படிப் பேசினானே... என்னை இப்படிப் பேசினானே... என்னை இப்படிப் பேசினானே...! என்ற இந்த நினைவு வருகின்றது.

ஆனால் எப்பொழுது... “எதனால் வருகின்றது...?”
1.அவன் செய்த தவறான உணர்வுகளை
2.ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்யப்படும் போது
3.நாம் நுகர்ந்த உணர்வுகளை அத்தகைய அணுவாக உருவாகும் கருவாக
4.நமது உயிர் உருவாக்கி விடுகின்றது.
5.அதற்கப்புறம் தான் அவனைப் பற்றிய எண்ணங்களும் நினைவுகளும் நமக்கு அதிகமாக வருகின்றது.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

“விஷ்ணு வரம் கொடுக்கின்றான்...” என்று அதை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றது.
1.அந்த விஷ்ணு எந்த ரூபத்தில் இருக்கின்றான்...?
2.எப்படி இருக்கின்றான்..?
3.எப்படி நம்மை இயக்குகின்றான்...?
4.எப்படி அவன் வரம் கொடுக்கின்றான்...? என்ற நிலையை
5.ரூபம் அமைத்து அருவ உணர்ச்சிகள் நம்மை எப்படி இயக்குகின்றது...? என்பதனை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

கடையில் நாம் கேட்கும் பொழுது அவன் பட்ட கோபமான உணர்ச்சிகளை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.. அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

உயிரின் துடிப்பால் வெப்பமாவதும் வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் கவரும் சக்தி கொண்டு இந்த வெப்பத்துடன் இணைக்கப்படும் போது நாம் சுவாசித்த உணர்வுகள் உணர்ச்சிகளாக
1.அந்தச் சப்தங்கள் வருகின்றது.
2.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
3.அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

அதைத்தான் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான். உள்ளுக்குள் போனவுடனே அதனுடைய வேலைகளைச் செய்கின்றது என்பதனைத் தெளிவாகக் கொடுக்கின்றனர்.

அதாவது நமது உயிர் வெப்பம் “விஷ்ணு...” அதனுடன் சேர்ந்த ஈர்க்கும் காந்தம் “இலட்சுமி...” என்று தெளிவாகக் கூறுகின்றனர்.

ஆனால் கடையில் சரக்கு வாங்க வந்தவன் கோபமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் அவன் உணர்வினை நம் கரு விழி ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து விடுகின்றது.

அவனிடமிருந்து வெளி வந்த உணர்வலைகளை நாம் சுவாசித்து உயிரில் பட்ட பின் அந்த உணர்வின் சப்தங்கள் வெளிவந்த பின் அதே உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலுகின்றது.

அதனால் தான் விஷ்ணு சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். சங்கை ஊதினால் அந்தச் சப்தங்கள் வருகின்றது. சங்கை ஊதுவதற்குத் தகுந்த மாதிரி நமக்குள் உணர்ச்சிகள் தோன்றுகிறது.

இனிமையாக இருந்தால் நம்மை அறியாமலே உடலுக்குள் மகிழ்ச்சி வருகின்றது. சரியாக ஊதவில்லை...  சப்தம் சரியாக இல்லை என்றால் நாம் கேட்ட பின் "உச்..." என்று உடலே சோர்வடையும் தன்மை வருகின்றது.

இப்படி இயங்குவதைத் தான் நம் உயிரை “விஷ்ணு - சங்கு சக்கரதாரி” என்று காட்டினார்கள் ஞானிகள். அதில் ஈர்க்கும் காந்தத்தை விஷ்ணுவுடன் இணைந்து வாழும் சக்தியை “இலட்சுமி” என்றார்கள்.

அதாவது காந்தம் இழுத்து அரவணைக்கவில்லை என்றால் எந்த உணர்வையும் அறிய முடியாது. எந்த உணர்ச்சியும் நம்மை இயக்காது. ஆகவே இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு
1.நம் உயிரின் இயக்க பாகங்கள் எப்படி இருக்கின்றது…?
2.அதனுடைய செயலாக்கங்கள் எப்படி…? என்பதனைத் தான்
3.விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

உள்ளுக்குள் (உயிரில் பட்டு உடலுக்குள்) போய் விட்டது என்றால் வரம் கொடுத்து விடுகின்றான். உள்ளுக்குள் போய் விடுகிறது. அந்த உணர்வுகளை நமக்குள் அறிய முடிகின்றது.

1.ஆனால் அறியத்தான் முடிகின்றதே தவிர
2.ஒரு மனிதன் கோபமாக பேசிய கார உணர்வுகளைப் பார்க்க முடிகின்றதா…?

இந்த உடலிலிருந்து தான் கோபமான (காரமான) உணர்வுகள் வந்தது என்று அந்த மனிதனை நாம் பார்க்கின்றோம். படமாக்கிய பின் அந்தக் கார உணர்வுகள் எந்த மனித உடலில் இருந்து வந்தததோ அதை எண்ணியவுடனே அந்த மனிதனின் ரூபம் நமக்குத் தெரிகின்றது.

அதாவது நாம் கூர்ந்து கவனித்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குவதனால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுவாக உருவாகின்றது.
1.அணுவாக உருவாக்கி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.
2.கோபமான உணர்வுகள் தான் அதற்கு உணவு.
3.காற்றிலிருந்து அந்தக் காரமான உணர்வுகளை எடுத்து
4.கோபத்தை வளர்க்கும் அணுக்களாகத் தன் இனத்தை வளர்க்கத் தொடங்கும்.

இதை நாம் தெரிந்து கொண்டால் வாழ்க்கயில் நாம் எதைப் பதிவாக்க வேண்டும். எதை வளர்க்க வேண்டும் என்ற ஞானம் தன்னாலே வரும்.

உங்களுக்குள் திரும்பத் திரும்ப உபதேசிப்பதன் நோக்கமே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்காகத்தான்…!

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கிக் கொண்டால் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகி அந்த ஞானிகளின் உணர்வை உணவாக எடுத்து வளர்த்து நம்மை ஞானியாக ஆக்கும்.

“இது ஒன்றும் சிரமமில்லை…!”