விஞ்ஞான அறிவால் ஒரு இயந்திரத்தை உருவாக்கி (AEROPLANE,
ROCKET) நாம் இங்கிருந்து எப்படிப் பறந்து செல்கின்றோமோ அதைப்போல மெய் ஞான அறிவு கொண்டவர்கள்
1.எங்கே எந்த உடலின் தன்மை கொண்டு எங்கே உணர்வுகள் இருக்கின்றதோ
2.அதனைக் கவர்ந்து அதனின் வலு கொண்டு அவர்கள் அந்த இடத்திற்குச்
செல்ல முடியும்.
விமானங்களில் செல்வது போன்று அன்று மெய் ஞானிகள் எந்தெந்த
உணர்வுகளில் நினைவைச் செலுத்துகின்றனரோ அந்த உணர்வுகளில் வலு செலுத்தினால் அங்கே அவர்கள்
இருப்பார்கள்.
நம் பிரபஞ்சத்தில் எந்தெந்தக் கோள்கள் உண்டோ அங்கேயும் அந்த
உணர்வுகளை வளர்த்துக் கொண்டு அங்கு சென்ற மகா ஞானிகளும் உண்டு.
1.இத்தகைய நிலைகளை அவர்கள் பெற்றாலும்
2.அவர்கள் “உடலுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களா…?” என்றால்
இல்லை.
உடலின் உணர்வின் தன்மை சூட்சும நிலைகள் பெற்று அவர்கள் சூட்சம
ரூபத்திலேயே மற்ற கோள்களுக்குச் சென்று கொண்டு உள்ளார்கள்.
இன்றும் அதே சூட்சம நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலம் அல்லாது
அல்லது அதனுடன் இணைந்தாலும் அதிலே வலு பெற்ற நிலைகள் கொண்டு இந்தச் சூரிய குடும்பத்திற்குள்
உலாவிக் கொண்டு தான் உள்ளார்கள்.
ஆனாலும் விஞ்ஞான அறிவால் நாம் கண்டுணர்ந்த ஆன்மாக்கள் அந்த
ஆன்மாக்கள் இங்கே உலாவிக் கொண்டு தான் உள்ளது.
விஞ்ஞான அறிவு கொண்ட ஒரு ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகுந்து
விட்டால் விஞ்ஞான அறிவை ஊட்டி அதனால் பெரும் விளைவுகளை உண்டாக்கும். அந்த விஞ்ஞான அறிவைத்தான்
ஊட்டும்.
சாங்கிய நிலைகள்படி பல மந்திரங்களைத் தனக்குள் ஜெபித்து பல
மாய ஜாலங்களைச் செய்த ஆன்மாக்களும் இந்தக் காற்று மண்டலத்தில் தான் உள்ளது.
அத்தகைய ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றால் சிறிது காலம்
அந்த மாயாஜால வேலைகளைச் செய்யும். அதனால் பேரழிவின் தன்மையைப் பல தீய அலைகளையும் அது
கவர்ந்து கொள்ளும்.
பின் அதை உடலை அழித்த பின் கடும் பூதங்களாக அது வெளிப்படும்.
பின் அதுவும் தேய்மானமாகிப் புழு பூச்சிகளாகும். அரக்கத்தனமான உயிரினங்களாகப் பிறந்து
அசுர சக்திகளை வளர்த்துவிடும்.
அன்று ஆண்ட அரசர்கள் செய்த போர்களில் மரணமடைந்த உணர்வலைகளும்
அதைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்படுத்திய அரசர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகளும்
மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வுகளும் பலதரப்பட்ட ஆன்மாக்களாக காற்று மண்டலம் முழுவதும்
பரவி உள்ளது.
அந்த உணர்வலைகள் அனைத்தும் மனிதர்களுக்குள் பதிவாகி அதனதன்
வழிகளில் வீரியப்பட்டு
1.மதத்திற்கு மதம் இரக்கமற்றுக் கொன்று குவித்துக் கொண்டு
இருப்பதும்
2.ஒரே மதமாக இருந்தாலும் மதத்திற்குள் இனங்கள் பிரிக்கப்பட்டு
3.என் கடவுள் வேறு… உன் கடவுள் வேறு…! என்று அதிலேயும்
4.ஒருவருக்கொருவர் கொன்று குவித்துக் கொண்டு இருக்கும் உலகமாகத்தான்
இன்று இருக்கின்றது.
இவ்வாறு கொன்று குவித்த உணர்வுகள் படர்ந்து… படர்ந்து… மனிதனுக்குள்
இது புகுந்து மனிதனே இன்று மிருகத்தைப் போல் இரக்கமற்ற செயல்கள் செயல்படுத்தும் நிலைக்கு
வந்துவிட்டான்.
தீமையே உருவாகும் உலகமாக நஞ்சு படர்ந்து இருக்கும் இந்தத்
தருணத்தில் “நம்மைக் காக்க யார் இருக்கின்றார்கள்...!”
"தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி" என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை
ஒளியின் சரீரமாகி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.
அவனைப் பின்பற்றியவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு
வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு இருக்கும் அந்த நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்....
அடைய வேண்டும்...! அவ்வழியில் அனைவரும் செல்ல வேண்டும்…! என்பதற்கே இந்த உபதேசம்.
1.உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று குருநாதர் காட்டிய
வழியில் தியானிக்கின்றேன்.
2.அவன் உருவாக்கிய உங்கள் உடலில் படர வேண்டும் என்று தியானிக்கின்றேன்
பிரார்த்திக்கின்றேன்.
3.நான் (ஞானகுரு) சந்தித்தோர் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர்
உணர்வுகளிலும் உடல்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து
4.உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி மெய்ப் பொருள் கண்டுணர்ந்து
உலகைக் காத்திடும் உணர்வுகள் விளைந்திட வேண்டும் என்று தியானிக்கின்றேன்.
இது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு இட்ட கட்டளை...!
நீங்களும் இதைப்போன்று இரவிலும்.. பகலிலும்... நினைவிலும்...
வெளியே செல்லும் போதும்... உங்களைப் பார்ப்போரெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும்
என்று எண்ணித் தியானித்தாலே போதுமானது.
1.உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கை ஆகின்றது
2.உங்கள் உயிராத்மாவில் பேரருள் பேரொளி பெருகுகின்றது
3.உடலை விட்டுச் செல்லும் பொழுது உயிருடன் ஒன்றி அவனாகி
4.அவனாக ஒளியாக மாறி சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.
5.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் பதினாறு என்ற
நிலையில்
6.இனி ஒரு பிறவி இல்லை…! என்று ஏகாந்தமாக வாழத் தொடங்குகின்றோம்.