ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2018

அரசு நடத்தும் நிலைகளில் குறைகளைக் கண்டால் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டும் என்று “எந்த ஞானியும் சொல்லவில்லை…!”


யார் ஆட்சி செய்தாலும் அது யாராக இருந்தாலும் சில குறைபாடுகள் வந்தால் நாம் பொறுமையும் சாந்தமும் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர
1.உடனே போலிஸ் ஸ்டேசனைப் போய்த் தாக்குவதும்
2.அரசாங்க ஊழியர்களைத் தாக்குவதும்
3.அரசாங்க பஸ்களை அடித்து நொறுக்குவதும்
4.மற்ற பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால்
5.நமக்கு வரிச் சுமையே மீண்டும் வரும் என்ற நிலையை யாரும் மறந்து விட வேண்டாம்.
6.அவ்வளவு நஷ்டமும் நமக்கே தான் வரும்.

நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள் வெள்ளம் அடித்துச் சென்றாலோ தீப்பிடித்தாலோ நாம் என்ன அவஸ்தைப்படுகின்றோம்...?

அரசு நடத்துவோர் நம்மிடம் வசூல் செய்து தான் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்கின்றார்கள். மக்கள் பயணிக்கும் பஸ்களை அடித்து நொறுக்கிவிட்டால் அவர்கள் போகும் இடத்திற்குச் செல்ல முடியாது.

இன்றைக்கு நாம் அந்தப் பஸ்ஸிலே செல்லவில்லை என்றாலும் நாளை அங்கே செல்ல வேண்டும் என்றால் எதிலே செல்வோம்...? சிந்தித்துப் பாருங்கள்…!

வேலை பார்க்கும் மில்லில் ஏதாவது சிக்கல் அல்லது ஒரு இடத்தில் ஒருவருக்கொருவர் அடித்து பெரிய காயமோ அல்லது இறந்து விட்டாலோ “எல்லாப் பஸ்ஸையும் நொறுக்குடா...” என்கின்றார்கள்.

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் கடைகளையும் பஸ்ஸையும் நொறுக்கினோம் என்றால் சரியாகப் போய்விடும் என்று செய்கின்றார்கள்.

தவறு செய்பவரைப் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு போனால் அங்கே என்ன செய்கின்றனர்...?

(தப்பு செய்கின்றவனை) என் ஆளை நீ விடுகிறாயா... இல்லையா...? விடவில்லை என்றால் போலீஸ் ஸ்டேசனை நொறுக்குவேன் என்கிறார்கள். நியாயத்தை எங்கே கேட்க முடியும்...?

அரசாங்கம் நியமிக்கும் நிலைகளை நாம் மதித்துப் பழக வேண்டும். அவர்கள் குறை செய்தால்
1.அந்தக் குறையை அவர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்…
2.அரசாங்கக் கடமைகளைச் சரியாக அந்த அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று
3.காந்திஜி செய்த வழிகளில் நீங்கள் ஊக்கமாகச் செய்ய அங்கங்கே அமருங்கள்
4.ரோட்டை மறிக்காதீர்கள்... யாருக்கும் இடைஞ்சல் செய்யாதீர்கள்…!
5.ஒரு பத்துப் பேர் இருக்கிறீர்கள் என்றால் அந்தப் பத்து பேரும் உட்காருங்கள்
6.அங்கே நடக்கும் உண்மை நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

இந்த உணர்வை நாம் வளர்க்க வேண்டுமே தவிர தவறான செயல்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்க அலுவல்களையும் மற்ற அன்றாடக் கடமைகள் செய்யப்படும் போது அதைத் தடைபடுத்தினால் எந்த நல்ல பலனும் அடைய முடியாது.

அரசாங்க உத்தியோகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர்கள் அனைவரும் காந்திஜியை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். உங்கள் சேவைக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கின்றது.

அதை விடுத்துவிட்டு கைக் கூலியாக இலஞ்சம் வாங்கி தவறான வழியில் செயல் படுத்த வேண்டாம் என்று எல்லோருக்கும் எச்சரிக்கை செய்கின்றேன்.
1.தவறான நிலையில் நீங்கள் பணம் வாங்கிச் சென்றாலும்
2.அவர் இடும் சாபங்களில் இருந்து நீங்கள் தப்ப முடியாது.

ஏனென்றால் ஒவ்வொரு வரும் மனம் வெந்து வெறுத்து அந்தப் பணத்தைக் கொடுக்கப்படும் போது அந்தப் பணம் உங்களுக்கும் உதவாது...! உங்கள் சந்ததிகளுக்கும் இது உதவாது...!

கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்...!

ஆகவே ஒவ்வொரு அரசாங்க அதிகாரிகளும் தவறு செய்வதில் இருந்து விடுபட வேண்டும்.

யாருக்கோ.. எதோ… என்னமோ…! என்ற நிலைகளில் செயல்பட்டால் உங்களுடைய பிள்ளையும் இதே நிலைக்கு வரப்படும் போது அதே நிலையில் தள்ளப்படும். உங்களுடைய பிள்ளைகளும் அதிலிருந்து தப்ப முடியாது.

1.என் பிள்ளையைக் காக்கத்தான் நான் பொருளை ஈட்டுகின்றேன் என்று செயல்பட்டாலும்
2.அவன் தவறான வழியில் சென்று மிகக் கொடடிய தவறுகள் செய்வான்.
3.நீங்கள் சம்பாரித்த பணத்தை அவன் சரியான நிலையில் அனுபவிக்க மாட்டான்.
4.அவன் தவறு செய்யும் போது அவனுக்கும் கடைசியில் அதே சிக்கல் தான் வரும்.

நாமெல்லாம் கூட்டமைப்பாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் காந்திஜி சுதந்திரத்திற்காகப் போராடினார். ஒருவருக்கொருவர் குறைகளை நீக்கி உயர்ந்த குணங்கள் பெற வேண்டும் என்று தான் அதைச் செய்தார்.

அதை யாரும் பின்பற்றாதபடி
1.தன்னை நியாயப்படுத்திக் கொண்டு
2.மற்றோர் மீது குற்றம் சுமத்திக் கொண்டே போனால்
3.குற்றங்கள் வளரத்தான் செய்யுமே தவிர குற்றம் குறையவே குறையாது.

அரசாங்கப் பொருள்களை நாம் சேதப்படுத்தினால் அந்த விரயம் நமக்குத் தான் என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும்.

ரோட்டிலே உள்ள மரங்களை வீழ்த்துவதும் அரசாங்க பொருள்களை நொறுக்குவதும் தீ வைத்துக் கொளுத்துவதும் நமக்கு நாமே தீ வைப்பது போன்றது தான் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே காந்திஜியின் நினைவை நாம் கொண்டு வர வேண்டும். நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள்...! நாம் ஒரு அரசாங்கத்தின் கீழ் ஒரு குடும்பமாக வாழுகின்றோம் என்பதை மறக்கக் கூடாது.

வாதிடும் வக்கீல்களும் சற்று சிந்திக்க வேண்டும். வாதிடப்படும் போது தர்மத்தின் எல்லைகள் வைத்துக் கற்ற கல்வியை ஏழ்மையில் உள்ளோருக்கு உண்மையை எடுத்து சொல்லும் தன்மை கொண்டு வர வேண்டும்.

நீதிபதிகளும் நீதியைச் சரியான நிலையில் நினைவுபடுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.  தவறு செய்வோர் நிலைகளை உணர்ந்தறிந்த பின் அதைத் தெளிவாக்கும் நிலைகள் வந்தால் தான் அந்த உணர்வு நமக்குள் வரும்.
1.நீதி தவறப்படும் பொழுது மக்களின் சாப அலைகள் உங்களை அங்கே சாடும்.
2.நீதிபதியின் பிள்ளைகளுக்கும் அதே நிலைகள் உருவாகும்.
3.இதிலிருந்து யாரும் தப்புவதில்லை.

அநீதிகளை அணுகாது அருள் ஞானிகள் காட்டிய வழி நடந்து உலகம் முழுவதும் போற்றும் நிலைகளுக்கு உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைகளுக்கும் காந்திஜி செய்தார்.

உங்கள் வாழ்க்கையில் எந்த நிலை வந்தாலும் காந்திஜி காட்டிய அருள் வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அப்பொழுது தவறு செய்வோர் எந்த அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் “அவரும் சிந்திக்கத் தொடங்குவார்….!” அந்தச் சிந்தனையின் உணர்வுகள் வளர வளர நாம் இடும் மூச்சலைகளும் இந்த நாட்டிலே பரவத்தான் செய்யும்.
1.நாட்டில் நடக்கும் தவறுகளைத் தடுக்க முடியும்.
2.மகிழ்ந்து வாழ முடியும்.