ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2018

தாக்கும் உணர்வை விடுத்துக் "காக்கும் உணர்வை வளர்ப்பவர்களே மகரிஷிகள்...!"


காந்திஜி உடலில் வளர்த்துக் கொண்ட பகைமை அகற்றும் உணர்வுகளை இன்றைக்கு அரசியல் நடத்தும் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல குணங்களைச் சுதந்திரமாக அவரவர் உடலில் இயக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை அனைவரும் வளர்த்துக் கொள்தல் வேண்டும். ஏனென்றால்
1.பகைமை கொண்டு ஒருவரை அழித்து விடலாம் என்று எண்ணினால்
2.அழிக்கவே முடியாது. அது வளருமே தவிர குறையாது.

கோட்சே அவரைக் கொல்லும் பொழுது அதைத் தான் காந்திஜி சொன்னார். அவன் என்னுடைய உடலைத்தான் வீழ்த்தினான்.
1.என் உணர்வை வீழ்த்த முடியாது.
2.அவனுக்கு அந்தத் திறன் இல்லை.

ஆனால் இந்த உடலை அவன் வீழ்த்தினாலும் அவன் மற்றவர்களைக் காக்கும்… உயர்ந்த நிலைகள் பெறும் அந்தத் தகுதி பெற வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணினால் தான் நாம் செய்யும் தவறுகளில் இருந்து மீள முடியும் என்று தெளிவாக்கினார் காந்திஜி.

ஒவ்வொரு நிலைகளிலேயும் நமக்குள் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் கடவுள் என்ற நிலை வரப்படும் போது அறிந்து செயல்படும் எண்ணங்களாக அங்கே உருவாகும் என்றார்.

உடலில் ஏதாவது தாங்க முடியாதபடி திடீரென்று ஏற்பட்டால் நாம் ஐயோ… அம்மா…! என்று அலறுவோம்.
ஆனால் தான் சுடப்பட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்தாலும் அந்த உணர்வின் வேகம் அவருக்கு வரவில்லை. அஞ்சிடும் செயல்கள் வரவில்லை.

ஹரே ராம்…! ஹரே ராம்…! என்றார்.

அவனைப் போன்று மற்றவர்கள் யாரும் அவன் செய்யும் தவறான உணர்வை எடுத்து விட வேண்டாம். அவனைத் தண்டிக்க வேண்டாம். அந்த குணத்திலிருந்து அவனை மீட்டும் பக்குவத்தைக் கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னார்.

இதைதான் கடைசி மொழியாக அவர் சொன்னார்.

காந்திஜி குண்டடிபட்டார் என்ற செய்தி வரும் பொழுது நான் (ஞானகுரு) மதுரை மீனாட்சி மில்லில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன்.

என்னுடன் ஒரு முஸ்லீம் பாயும் வேலை பார்த்து கொண்டிருக்கின்றார்.

1.காந்திஜியைக் கொன்று விட்டார்கள்
2.நம்முடைய இனம் தான் அவரைச் சுட்டிருக்கின்றார்கள் என்று சொன்னவுடனே
3.எல்லாம் சேர்ந்து அந்த டிபார்ட்மென்ட்டில் (department) அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மில்லுக்குள்ளேயும் வந்து அடிப்பதற்கு ஆரம்பிக்கின்றார்கள். அப்பொழுது நான் என்ன செய்தேன்…?

காந்திஜியினுடைய கடைசி வாக்கு எதுவோ அதை நிறைவேற்றுவோம். அவரைக் கொன்று விட்டார்கள் என்பதற்காக இங்கே வெறித்தனமாகப் போவது சரியில்லை என்று சொன்னேன்.

அரவணைப்பாக ஒரு இருபது பேரைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு போய் அதற்கென நான்கு பேரை வைத்துத் தாக்காத நிலையில் பாதுகாத்தோம். ஏனென்றால்
1.தவறு செய்வது யாரோ…!
2.அந்த உணர்ச்சியின் வேகம் நாட்டையே கலக்குகின்றது.

நாட்டின் நன்மைக்காக நாம் பாடுபட வேண்டும் என்றார் காந்திஜி. அனைவரும் சகோதரர் என்ற நிலைகளில் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்றார்.

மற்றவர்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார். தவறிலிருந்து விடுபட்டால்தான் உணவாக உட் கொள்வேன் எழுந்து வருவேன் என்று வைராக்கியமாகச் சொன்னார்.
1.தவறான நிலை வரப்படும் போது
2.நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றார் காந்திஜி.

“அந்நியனே வெளியேறு…! என்று சொல்லி அந்நியன் என்று அவனைக் கருதவில்லை.
1.அந்நிய குணங்களாக (இங்கே) அடிமைப்படுத்தும் குணத்திலிருந்து “வெளியேறு…!” என்று தான் அவர் சொன்னார்.
2.”அந்நியமாக்கும் குணங்களில் இருந்து வெளியேறு…” என்ற
3.அந்த எண்ணத்தை தான் அங்கு உருவாக்கினார்.

நாம் ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விட வில்லை. உடல் தான் மடிகின்றது.
1.அவனுக்குள் விளைந்த பழி தீர்க்கும் உணர்வுகள் பரவுகின்றது.
2.அப்படிப் பரவும் உணர்வுகள் மற்றவர்கள் உடலில் சேர்த்தபின்
3.அவனும் தாக்கும் உணர்வு கொண்டு தான் செயல்படத் தொடங்குகின்றான்.
4.ஆகவே எங்கே மடிந்தது…?

இவன் செய்த நிலைகள் இங்கே மீண்டும் அவன் தாக்கப்படும் உணர்விற்கே வளர்க்கப்படுகின்றது. அப்போது நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது…?

1.ஒருவரைத் தாக்குவது என்றால் கோழை.
2.”பதிலுக்கு அவரைத் தாக்கிவிட்டு… மீள்வதும் கோழையே…”
3.இது வீரியம் அல்ல…! வீரமல்ல…!

தாக்குவோர் நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்று வலிமை கொள்வோர் எவரோ அவர்கள் தான் வீரியம் என்றார் மகாத்மா காந்திஜி.

பிறரைத் தாக்கும் உணர்வை விடுத்துவிட்டு மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து அனைவரையும் காக்கும் உணர்வை வளர்ப்பதே நம் ஞானிகள் நமக்கு உரைத்த மெய் உணர்வுகள்.


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி அதுவே..!