ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2018

நம்முடைய அவசர புத்தி என்ன செய்யும்…? அது எதனால் எப்படி வருகின்றது…? – மாற்றும் வழி என்ன…?


பய உணர்வுகள் இருப்போரைப் பார்த்தால் தெரியும். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் “சீக்கிரம் முடித்து விட வேண்டும்… என்று பட…பட…வென செய்வார்கள்…!”

பயமாகும் போது எவ்வளவு வேகத் தொடர்கள் ஏற்படுகின்றதோ இந்த உணர்வுகள் நாம் எண்ணும் எண்ணத்துடன் இயக்கி அது வேகமாக இயக்கச் செய்யும்.
1.ஆனால் வேகமாக வரும் போது – இடைமறித்து
2.அது சிந்திக்கும் தன்மையே இல்லாது போய் விடுகின்றது.

உதாரணமாக நம் போகும் பாதையில் ஒரு பஸ் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அதனுடைய வேகத் தொடரின் எண்ண அலைகளை நமக்குள் பதித்து விட்டால் இந்தப் பக்கம் வேகமாக நகர்ந்து செல்ல வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அந்தப் பக்கம் பள்ளம் இருக்கிறது என்று அறியாது.

1.காத்துக் கொள்ளும் வேகத்தின் உணர்ச்சிகள் வேகமாகத் தள்ளிய பின்
2.முள் இருக்கின்றதா… அல்லது வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா…? என்று சிந்திக்க விடாது.
3.இதை உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

பின் அதிலிருந்து நகர்ந்தபின் முள் குத்தினால் ஐய்யயோ…! முள் குத்தி விட்டதே என்று எண்ணுகின்றோம். அடுத்து அங்கே அசூசை இருந்தால் ஐய்யய்யோ மிதித்து விட்டோமே…! என்று அப்புறம் தான் சிந்திக்கின்றோம்.

ஆனால் நாம் சிந்தித்து வேகமாக வரவும் முடியாது. ஏனென்றால் அந்த நேரம் அப்படி…! சிந்திக்கும் திறனற்ற உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் விளையும் சந்தர்ப்பமாக அது அமைந்து விடுகின்றது.

நாம் எண்ணிய இத்தகைய உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று விட்டால் இதே பய உணர்வு எல்லா எண்ணங்களிலும் அடுத்து இயக்கும்.
1.எங்கேயாவது ஊருக்குப் போக வேண்டும் என்றால்
2.அவசர அவசரமாகச் செயல்படுத்தச் செய்யும்.
3.இந்த உணர்வின் வேகம்.

(அப்படி அவசரத்தில் இருக்கும் பொழுது) நமக்கு முன்னாடியே பொருள் இருக்கும். இதைத் தூக்கி எறிந்து விடுவோம்.

பின்… நாம் தேடும் அதே பொருள்… “எங்கே இருக்கிறது…!” என்று தெரியாதபடி மற்றவர்களைக் கூப்பிட்டுக் கேட்போம்.

அங்கே தான் இருக்கிறது என்று மனைவியோ பிள்ளைகளோ சொன்னால்
1.எங்கே இருக்கிறது…?
2.நான் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே… என்று
3.அங்கே சண்டைக்கு போகச் சொல்லும்.

நாம் தவறே செய்ய வேண்டாம்…!
1.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது…?
2.உணர்வின் உணர்ச்சிகள் எவ்வாறு நமக்குள் இணைகின்றது…?
3.என்ற நிலையை வியாசகர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

உதாரணமாக ஒரு இடத்தில் பஸ்ஸோ காரோ வேகமாக வருகிறது என்றால் அதிலிருந்து நம்மைக் காக்க அவசரம் பயம் போன்ற உணர்வுகளை எடுத்து நம்மைக் காத்துக் கொள்கின்றோம்.

ஆகவே நாம் சந்திக்கும் அந்தச் சந்தர்ப்பத்தின் நிலைகளில் நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்ட பின் இயக்கிப் பிரம்மமாக நமக்குள் சிருஷ்டித்து விடுகின்றது.

சிருஷ்டித்த உணர்வுகள் தன் இனத்தை மற்றதுடன் கலந்தே இயக்கும். காக்கும் நிலையாக நாம் செயல்படும் போதெல்லாம்
1.அந்த உணர்ச்சியின் வேகங்கள் அதிகமாகி
2.நம் நல்ல குணங்களுக்குள்ளும் இந்த அவசர உணர்வுகள் ஊட்டி
3.சிந்தித்துச் செயல்படும் நல்ல குணங்களைத் தடைபடுத்துகின்றது?

அந்த அவசர உணர்வுகள் தான் முதலில் விபத்தில் இருந்து நம்மைக் காத்தது. ஆனாலும் விபத்திலிருந்து காத்த உணர்ச்சியின் வேகங்களும் பய அலைகளும் நமக்குள் இரண்டறக் கலந்து விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?

ஒரு ஊருக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்றால் அந்த அவசர உணர்ச்சிகளைத் தூண்டும்.

அரை மணி நேரம் இருக்கும். ஆனால் அதற்குள்…
1.பஸ்ஸிற்கு நேரமாகிவிட்டது…!
2.முன்னாடியே போக வேண்டும் என்று
3.இந்த அவசரம் – அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.தூண்டும் பொழுது அதனின் வேகத் தொடரிலேயே இருப்போம்.

துணிமணிகளை எடுத்து வைக்க வேண்டும் என்றால் கையில் எடுத்துப் பார்த்து அப்புறம் அதை முன்னாடியே போட்டு வைத்திருப்போம்.

ஆனால் என் துணிகளை இங்கே வைத்தேனே அதை எங்கே காணோம்…! யார் எடுத்தார்கள்…? என்ன ஆனது…! ஏது ஆனது…! என்று அங்கே வீட்டில் பெண்களைக் கோபிப்போம்.

அந்த அவசரத்தில் சிந்தித்துக் கேட்கும் (அறிவு) உணர்ச்சியின் நிலைகள் இயங்காது எப்படிக் கேட்போம்…!

எங்கே வைத்தீர்கள்.. அங்கே பாருங்கள்…! என்பார்கள்.

இல்லை.. இல்லை…! “இங்கே தான் வைத்தேன்… நான் தான் பார்க்கின்றேனே… நீயே வந்து பார்…!” என்று கோபமாகவே சொல்வோம்.

அவர்கள் வந்து கண்ணுக்கு முன்னாடிதான் இருக்கிறது என்று எடுத்துக் கொடுப்பார்கள். (இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம்)

ஏனென்றால் அங்கே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது. கணவனும் மனைவிக்குள்ளும் பயந்த அலைகள் அவசர நிலைகளாக இயக்கிவிடும்.

இப்படிப் பயத்தை ஊட்டிய பின் “இப்படிப் பேசுகின்றாரே..! கணவர்… என்று அங்கே பய உணர்வை ஊட்டும். சிந்திக்கும் திறன் இழக்கும் போது குற்றமாக அங்கே சுமத்தப்படுகின்றது.

குற்றத்தின் உணர்வு ஆனவுடனே மனைவியோ பயப்படுகின்றது.

அல்லது மகனோ மகளோ இதைப் போன்று அங்கே இருந்தால் அவசரத்தில் அந்தப் பொருள் அங்கே இல்லை என்று அவர்கள் சொல்லி விட்டால் இந்தக் கோப உணர்வுடன் “அம்மாவைக் கூப்பிடு…!” என்று கடுமையான உணர்வாகும்.

அதற்கு அடுத்து எதை எடுத்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று வெறுப்பின் உணர்வு இங்கே வளரத் தொடங்கும். பையனோ குழந்தையோ இந்த வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்த பின் “அப்பா கோபிக்கின்றார்…!” என்ற உணர்வுகள் அவருக்குள்ளும் படுகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொல்லப்பட்டுள்ளது.

வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு அதனின் செயலாகவே சொல்லும் செயலும் இங்கே அமைகின்றது. அதே உணர்வுகள் நமக்குள் விளைந்தது. தீமை விளைவிக்கும் விளைவாக மாறுகின்றது.

ஆரம்பத்தில் விபத்திலிருந்து நாம் காத்துக் கொண்டோம்.
1.ஆனால் காத்த உணர்வுகள் நமக்குள் விளைந்த பின்
2.அதனின் தொடர் வரிசையில் எல்லாவற்றையும் கலந்து
3.அந்தப் பய உணர்ச்சிகளும் அவசர உணர்ச்சிகளும் நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.
4.சிந்தனை அற்றவனாக மாற்றுகின்றது.

ஒரு முறை பார்த்தது தான்…! மற்றவை அனைத்திலும் இந்த பய உணர்ச்சியின் வேகத் துடிப்புகள் இயக்கிக் கொண்டு வருகின்றது.

ஆபிசில் வேலை பார்த்தால் நாம் ஒரு பொருளைக் கொண்டு வா என்று சொல்லி ஒரு நிமிடம் லேட் ஆகிப் போனதென்றால் அவர் மேலே “கடு..கடு… என்று கோபம் வந்துவிடும்.

ஏம்ப்பா… இவ்வளவு நேரமா…? என்று அவர் மீது கோபிக்கச் சொல்லும். இந்த உணர்வின் வேகம் தொழில் செய்யும் இடங்களிலும் அமைதியைக் கெடுக்கின்றது.

சிந்தித்துச் செயல்படும் நல்ல குணங்களுக்குள் அவசர உணர்வுகள் கலந்த பின் இப்படி எல்லாம் நடக்கின்றது.

ஒரு மான் புலியிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பயத்தால் உணர்வின் வேகம் அதிகமாகி அதையே தொடர்ச்சியாகச் சுவாசிக்கின்றது.
1.அவ்வாறு மான் சுவாசிக்கும் போது
2.மானின் உடலிலே மானின் சாந்த உணர்வு குறைந்து
3.புலியின் உணர்வு அதிகரித்து அதன் வேக உணர்வு இதற்குள் கூடி
4.புலியின் உணர்வுகள் கூடிய பின் இது நோயுற்றுவிடுகின்றது.

புலி மானைக் கொன்று சாப்பிடவில்லை என்றாலும் மான் தப்பி அஞ்சி ஓடினாலும் புலியின் நினைவு கொண்டே வாழ்ந்து புலியின் உணர்வை வளர்த்து மரணமடைந்த பின் மானின் உயிரான்மா புலியின் ஈர்ர்புக்குள் சென்று புலியாக மாறுகின்றது.

இப்படித் தான் நமது உயிர்
1.ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் பயத்திலிருந்து காத்திடும் உணர்வாக
2.அதிகமாகத் துடித்து அதனின் உணர்வைச் சேர்த்து
3.தன்னைப் பாதுகாக்கும் உடல்களாக மாற்றமாகிக் கொண்டே வந்தது.

மனிதனான பின் பயமான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அதிகமாக வளர்த்துக் கொண்டால் மறுபடியும் கீழான உயிரினமாகத்தான் பிறக்க நேரிடும்.

ஏனென்றால் பஸ் என்பது நாம் செய்த இயந்திரம் தான். அதற்குச் சிந்தனை இல்லை.

ஆனால் அது வரும் வேகத்தில் நம்முடைய அதிர்வுகள் வரும் போது பயமாகி அதிர்ச்சியாகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உணர்வுகள் நமக்குள் சேர்த்து வரிசைப்படுத்தி நம்முடைய எல்லா குணங்களிலும் கலக்கின்றது.

இதை நீக்க வேண்டும் அல்லவா…! நன்றாக சற்றுச் சிந்தித்து பாருங்கள்.

இதைப் போன்று நம்மை அறியாமல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடத்தான் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளொய்யாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் உடலுக்குள் சேர்த்து வலிமை பெற்றால் அந்தத் தீமைகளை அது ஒடுக்கச் செய்யும்.
1.தெளிந்த அறிவை ஊட்டும்.
2.சிந்தித்துச் செயல்படும் ஞானம் கிடைக்கும்.
3.மெய் உணர்வுகள் வளரும் – நாம் மெய் ஞானியாக ஆக முடியும்.

“அத்தைகைய சந்தர்ப்பத்தைதான்…” யாம் ஏற்படுத்துகின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!