ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2018

தீமை செய்யும் அணுக்கள் நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? உயிர் எப்படி அதை வளர்க்கின்றது…? – தெளிவான விளக்கம்


நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.

உதாரணமாகக் கோழி, குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.

அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.

அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.

1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.

கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)

எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.

அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.

அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.

நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.

அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?

வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.

கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?

உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.

இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.

1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை

யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.

அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.

அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த ஆலயத்தில் காட்டிய முறைப்படி தெய்வ குணத்தை நமக்குள் கவர வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…!

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் கருவாக்கி அணுவாக்க வேண்டும். ஒளியான அணுக்கள் நம் உடலில் பெருகினால் நஞ்சான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது அது செயலிழந்துவிடும்.