ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2018

இராவணனின் மகன் “இந்திரஜித்...” மாயமாகச் செயல்படுபவன் என்று இராமாயணம் காட்டுகின்றது - விளக்கம்


ஒரு மனிதன் அவன் வாழும் பொழுது அரக்க உணர்வுடன் செயல்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் உள்ள மற்றவர்கள் “அவன் அப்படிப் பேசுகின்றான்... இப்படிப் பேசுகின்றான்.. பல தகாத செயல்களை எல்லாம் செய்கிறான்...” என்பார்கள்.

ஆனாலும் அவன் உடலை விட்டு உயிர் வெளியில் போன பிற்பாடு அவன் அரக்கத்தனமாகச் செயல்பட்ட உணர்வுகள் அனைத்தும்
1.அந்த வீட்டிற்குள் பரவியிருக்கின்றது.
2.அவனைச் சார்ந்த எல்லோரிடமும் இது பதிவாகி இருக்கின்றது.

அப்படிப் பதிவாகியிருந்தாலும் அவனைப் பற்றி அடிக்கடி எண்ணினால் நம் உடலில் என்ன செய்யும்...? (ஆனால் அவன் இறந்து விடுகின்றான்)

ஒரு அரக்கனைக் கொன்றால் பல ஆயிரம் அசுரர்கள் எழுந்து வருகின்றனர் என்று இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள்.

ஒரு புலி இறந்தது என்றால் என்ன செய்யும்?

அசுர உணர்வு கொண்ட அணுக்கள் தான் புலி உடலை உருவாக்கியது. புலி இறந்தபின்  புலியை உருவாக்கிய ஜீவ அணு இதிலிருந்து வரக்கூடிய சத்தை எடுத்து உயிரணுவாகிப் புழுவாக மாறுகின்றது.

முதலில் அணுவாக இருந்தது. புலியின் உயிர் வெளியில் போனவுடனே இதைச் சாப்பிட்டு உயிரணுவாக மாறுகின்றது. புலி உடலைத் தின்றபின் அதில் உருவான புழுக்கள் பூராம் மடிந்த பிற்பாடு வெளியில் வருகின்றது.

புலி எதையெல்லாம் கொன்று தின்றதோ அந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் இந்த அணுக்கள் போய் உண்ணியாகவும் ஈயாகவும் உருவாகின்றது. நாய்களில் பார்க்கலாம். மாடுகளில் பார்க்கலாம்.

ஒரு ஈ மாதிரி இருக்கும். உள்ளுக்குள் புகுந்து இரத்தத்தை உறிஞ்சி விடுகிறது. மாடுகளில் உண்ணியாக வருகிறது. நம் உடல்களில் பேனாக வரும். அதனால் ஒரு விதமான அரிப்பு வரும். நம் உடலில் கண்ணுக்குத் தெரியாத உண்ணியாக வருகிறது.

அதாவது புலி இறந்தாலும் அந்த உடலிலிருந்து பல உயிரணுக்கள் வெளிப்பட்டு புலியைப் போன்று மற்ற உடல்களில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் உயிரினங்களாக வருகின்றது.

அதே போன்று தான் “ஒரு மனிதன் அவன் செத்துவிட்டான்...!” என்று நினைக்கின்றோம். ஆனால் அவன் உடலில் உருவான தீமையான அணுக்கள் நம் உடல்களில் வந்து பல தீமைகளைச் செய்கிறது.

 இதையெல்லாம் வராமல் தடுக்க வேண்டுமா இல்லையா?

அதைத்தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அரக்கர்கள் எழுகிறார்கள் என்று இராமயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்த்தோமென்றால்
1.இப்படிச் செய்தானே... பாவிப்பயல்... தொலைந்தானா...! என்று நினைத்தார்கள் என்றால்
2.அங்கே பரவி இருக்கும் அவன் உணர்வுகள் உள்ளுக்குள் போய்
3.ஒவ்வொரு உடலிலும் உள்ளுக்குள் போய் நரகவேதனைப் படச் செய்கின்றது.

சில குடும்பங்களில் இடைஞ்சலாக இருப்பவர்கள் தொலைந்து போய் விட்டால்... சரியாகப் போகும்... அப்பொழுது தான் “நிம்மதி...!” என்று நினைப்பார்கள்.
1.ஆனால் போன பிற்பாடு தான்
2.அந்த உணர்வுகள் எல்லோர் உடலிலேயும் பெருகத் தொடங்கி விடும்.
3.ஆகவே அவன் எங்கே இறந்திருக்கின்றான்...?

இதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா!

அதற்குத்தான் அந்த இராமயாணக் காவியத்திலே உயிரின் இயக்கத்தால் வந்த நிலையும் பத்தாவது நிலை அடையக்கூடிய இராவணன் எந்த நிலையில் இருக்கின்றான்? என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலை உயிர் உருவாக்கினாலும்... உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அணுக்கள் அனைத்தும் “மீண்டும் எப்படி அசுர குணங்களை வளர்க்கின்றது...? என்பதைத்தான் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அதாவது அங்கே “இந்திரஜித்” என்ன செய்கின்றான்...? இராவணனின் மகனான இந்திரஜித்
1.அவன் செத்தாலும் கூட யாருக்கும் தெரியாமல்
2.மறைந்திருந்தே செயல்படுவான் என்று சொல்கிறார்கள்.

எப்படி...!

ஒருவன் கொடூரமாகச் சாகின்றான். பழி தீர்க்கும் உணர்வோடு வெளியில் வருகின்றது. ஆனால் தன் உணர்வைச் செயலாக்க இன்னொரு உடலுக்குள் வந்து விட்டது என்றால்
1.இவனுக்குத் தெரியமலேயே அவனை ஆட்டிப் படைக்கின்றான்...
2.பேயாக வந்து ஆட்டுகிறான் அல்லவா!
3.எத்தனை ஆசைப்பட்டானோ அவன் செத்த பிற்பாடு பேயாக வந்து ஆடுகின்றான்.

பார்க்கின்றோம் அல்லவா...!

இவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகள் அவனைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வுகள் மடிந்த பின் இத்தனை வேலையும் செய்கின்றது.

அவனுக்குப் பிறந்த குழந்தையும் அதன் வழியில் வளரப்படும் போது அவனும் இப்படித் தான் வருகின்றான். அதையும் பார்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...? இதற்காகத்தான் குருநாதர் என்னை “நீ கல்யாணராமனை நேசி...! என்றார்.

அதாவது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு
1.தான் பெற்ற சக்தி தன் மனைவி பெறவேண்டும் என்றும்
2.தன் கணவன் பெறவேண்டும் என்றும்
3.அன்பு கலந்த நிலைகளில் ஒருவருக்கொருவர் உயர்த்திடும் நிலையாக
4.இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து
5.”துருவ மகரிஷியாக...!” ஆனார்கள்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி அதைத் தியானித்தால் நம்மை அறியாமல் இயக்கும் கொடூரமான அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபட முடியும்.

எதிர் நிலையான உணர்வுகளை மாற்றி பகைமையை அகற்றி அன்பு கலந்ததாக “நல்ல உணர்வுகளாக இயக்கச் செய்ய முடியும்...!’ என்று தெளிவாக்கினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.