ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2018

“அகஸ்தியரை எண்ணித் தியானித்து…” உங்கள் ஊரில் நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்…!


மக்கள் சங்கடமான நிலைகளில் இருக்கும் பொழுது அந்த ஊர்களில் மழை பெய்யாது. காரணம், சங்கடமான உணர்வின் தன்மை மேகங்களில் கலக்கப்படும் பொழுது மழை மேகங்கள் கலைந்து விடுகின்றன.

பக்கத்து ஊரில் மழை பெய்யும். ஆனால் இங்கே மழை பெய்யாது. இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்குத்தக்க மழை மேகங்கள் கூடும் அல்லது விலகும்.

வேதனையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது மழை பொய்த்து தரித்திரமே வளரும். இவைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால்...
1.நாம் ஒவ்வொருவரும் நமது ஊர் நன்றாக இருக்க வேண்டும்.
2.நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை
3.நாம் முழுமையாகப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நாட்டில் வாழ்வது யார்..? நாம் தானே…!

நாட்டில் ஜாதி மதம் இன பேதங்களை வளர்த்து நாம் சண்டையிடும் பொழுது இதனின் உணர்வுகள் மேகங்களை கலைக்கச் செய்து மழையில்லாமல் செய்து விடுகின்றது.

ஒரு முறை குருநாதர் அகஸ்தியர் தியானம் செய்த மலைப்பகுதிக்கு எம்மைப் (ஞானகுரு) போகச் சொன்னார்.

அகஸ்தியர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் சக்தி பெற்றது. அவருடைய பாதம் பட்ட இடமெல்லாம் மேகத்தைக் கவர்ந்து நீராக மாற்றும் தன்மை வாய்ந்தது.

குருநாதர் போகச் சொன்ன இடத்தில் மலை உச்சியில் தண்ணீர் இருந்தது. ஆனால், மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை.

மலை உச்சியில் தண்ணீர் இருக்கிறதென்றால் காரணம் என்ன...?

குருநாதர் எம்மை ஒரு இடத்தில் அமரச் சொல்லி சங்கடமாக வெறுப்பாக மற்றவர்களை மோசமாக நினைத்துக் கொண்டே இரு…! என்று கூறினார்.

யாமும் குருநாதர் சொல்லியவாறு எண்ணிக் கொண்டிருந்தோம்.

அது சமயம் மேகங்கள் வருகின்றன. வந்த மேகங்கள் பிரிந்து சென்றன. ஈரப்பசையே அற்றுப் போகின்றது. இப்படி மனிதர்க்கு உண்டான உணர்வுகள் மழை மேகங்களை விலக்குகின்றது என்பதை குருநாதர் எமக்கு அங்கே தெளிவாக உணர்த்தினார்.

இவைகளையெல்லாம் யாம் அறிவதற்காகக் காடு மலை என்று பல பகுதிகளுக்கு அலைந்தோம். ஆனால் யாம் பெற்ற பேருண்மைகளை உங்களிடத்தில் எளிதாகப் பதிய வைக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் எந்தெந்த ஊர்களில் இருக்கிறீர்களோ அந்தந்த ஊரில் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

1.நீங்கள் உங்களிடத்தில் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்கி
2.ஊர் மக்கள் அனைவரும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
3.ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இதன் தொடர் கொண்டு உங்கள் ஊரில் மழை சீராக இருக்கும். விவசாயமும் செழித்து வளரும். ஆகவே
1.அகஸ்தியரை எண்ணித் தியானித்து
2.நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்…!