ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2018

“காலையில் எவன் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை...,” என்று நாள் முழுவதும் சொல்லி வேதனைப்படுகின்றோம் – ஏன்...?


காலையில் எப்படி உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைத்  துவைத்து அழுக்கைப் போக்குகின்றோமோ அதைப் போன்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

துணியில் உள்ள அழுக்கு போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரை ஏற்றி அழுக்கை நீக்குகின்றோம்.

அதைப்போல அருள் மகரிஷிகளின் உணர்வை உள்ளுக்குள் சேர்த்து  நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வின் அழுக்கை நாம் வெளியேற்ற வேண்டும்.

எல்லோரும் இது மாதிரி எண்ணினால் என்ன ஆகும்...?

காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் வந்து விடுகின்றது. நாம் ஒதுக்கித் தள்ளிய தீமையான உணர்வுகளை அது கவர்ந்து மேலே சென்று கடலுக்குள் சென்று அமிழ்த்தி விடுகின்றது.

நமது ஆன்மா தூய்மையாகி விடுகின்றது. இந்தப் பரமாத்மாவும் தூய்மை அடைகின்றது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

உதாரணமாக என் பிள்ளையைப் பார்க்கிறேன். அவன் சேட்டை பண்ணினால் நான் திட்டி இருப்பேன். அப்பொழுது அவன் குறும்புத்தனத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆனால் அவன் நல்லவனாக வேண்டும் என்று நினைக்க முடிகின்றதா...? என்றால் இல்லை.

அதிகாலையில் எழுந்தவுடன் மகரிஷிகளின் உணர்வை எடுத்து
1.என் குழந்தை அருள் ஞானம் பேற வேண்டும்
2.அவன் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.பிறர் போற்றும் தன்மை அவனுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே போல் மனைவியை எண்ணும் பொழுது
1.மனைவியின் உடலில் அறியாது சேர்ந்த நிலைகள் இருள் நீங்க வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேணடும்
3.பண்பும் பரிவும் வளர வேண்டும்
4.குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதே போல மனைவியும் தன் கணவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் என்று இரண்டு பேருமே சேர்த்து அந்தந்தக் குடும்பங்களில் எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளியை நமக்குள் சேர்த்து பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழும் நிலை வேண்டும்.

இந்த மாதிரிச் சுத்தப்படுத்தும் நிலை இல்லை என்றால்
1.சிறு குறை வந்துவிட்டது என்றால்
2.பெரும் குறையாக மாற்றிக் கொண்டே போகும்
3.அதை நீங்கள் நீக்க முடியுமா..! என்று நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஏனென்றால் சந்தோஷமாக இருப்பவர்கள் எல்லோருடைய வீட்டிலும் பாருங்கள். நேற்று வரை நன்றாக இருந்திருப்பார்கள். சந்தர்ப்பத்தில் ஏதாவது கொஞ்சம் போல் குறை வந்தால்
1.நீதான் செய்தாய் தப்பு...!
2.இல்லை இல்லை நீதான் தப்பு செய்தாய்...!
3.”உன்னால் நான் அழிந்தேன்...” என்ற பகைமை வந்துவிடுகின்றது
4.அப்பொழுது பற்றும் பாசமும் அந்த இடத்திலே போய் விடுகின்றது.

இந்த மாதிரி ஆன பின்...
1.ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் பொழுது நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நாம் நினைக்கின்றோமா...?
2.அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமா...?

“எனக்குத் துரோகம் செய்தான் பாவி...!” என்று காலையில் எழுந்திரித்தவுடனே இப்படித்தான் எண்ணுகின்றோம்.
1.இன்று எவன் முகத்தில் விழித்தோமா...! தெரியவில்லை...!
2.”இந்த மாதிரி ஆகிவிட்டது...! என்போம்.

இந்த வேதனையுடன் தொழிலுக்குச் செல்லும் போது தொழில் சரியாக நடப்பது இல்லை. வேதனையுடன் கணக்கெழுதும் போது கணக்கு தப்பாகி விடுகின்றது.

வேதனையுடன் நாம் இருக்கும் போது வரும் நண்பர்களுடன் பேசும் போது நம் சொல் தடுமாறிவிடுகின்றது. அதனால் பகைமையாகி விடுகின்றது.

இதையெல்லாம் எதனால் வருகின்றது...? என்று சிந்திக்கின்றோமா...!

அதற்குத்தான் ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் காலையில் படுக்கையில் விழித்தவுடன்
1.”ஈஸ்வரா.....” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.நான் பார்க்கின்ற குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
6.எங்கள் சொல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
7.இதைக் கொஞ்ச நேரமாவது நினைக்கலாம் அல்லவா...!

யாராவது காலையிலே படுக்கையில் விழித்தவுடன் நாம் இப்படி நினைக்கின்றோமா...? பிரார்த்தனை செய்கின்றோமா...? எண்ணுகின்றோமா...?

இதைத் செய்வதற்குத்தான் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கோவிலில் வைத்துக் காட்டியிருக்கிறார்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அரச மரத்தைப் பார்த்தவுடனே நமக்கு எந்த நினைவு வர வேண்டும்..?

இந்த பிரபஞ்சத்திற்கே அரசாக இருந்து ஒளியின் சரீரமாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும்.

வேப்ப மரத்தைப் பார்த்தவுடனே எதை எண்ண வேண்டும்...?

பிறருடைய கஷ்டங்களை எண்ணும் போதெல்லாம் நமது வாழ்க்கை கசக்கின்றது. ஆகவே அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அந்த அருளொளியைப் பெற வேண்டும்... இருளை நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.. என்ற உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழகுவதற்காக வேண்டி அரசையும் வேம்பையும் விநாயகருக்கு அருகில் வைத்திருக்கின்றார்கள்.

வேதனை என்ற உணர்வுகள் வந்தால் அடுத்த நிமிடமே அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள்ளுக்குள்ளே செலுத்த வேண்டும்.

ஒரு வித்தை வேகவைத்தால் அதை மீண்டும் நிலத்தில் ஊன்றினால் முளைக்குமா...? அதைப் போல நமக்குள் தீய வினைகள் வரும் சமயம் அதைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உடனடியாக வேக வைக்க வேண்டும்.

அப்பொழுது அந்தத் தீமை நமக்குள் வளராது. தீமை நம்மை இயக்காது. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சாதாரணமானதல்ல. செய்து பாருங்கள்.

மகிழ்ச்சியும் செல்வமும் நம்மைத் தேடி வரும்...!