ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2018

எந்தச் சாமியும் நம்மைச் சோதிப்பதில்லை…! – உண்மையை அறியாததனால் தான் நாம் அப்படிச் சொல்கிறோம்…!


நம் தேவைக்காக வேண்டி (கோவிலில்) சாமியை இரண்டு மூன்று நாளைக்குத் தேடிப் போவோம். தொழிலில் இலாபம் கிடைத்தால் சந்தோஷப்படுவோம்.

ஆனால் அடுத்து அந்த லாபம் வரவில்லை என்றால் சாமியை மறந்துவிடுவோம். இப்படித்தான் எல்லோரும் இருக்கின்றோம்...! ஏனென்றால்
1.அன்றைக்குச் சாமி கொடுத்தார்
2.ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்டார்
3.இப்படிச் சொல்வதற்குத்தான் தயாராக இருக்கின்றோம்.
4.எதனால்..? என்ற அந்த உண்மையின் உணர்வை நாம் அறிவதற்குத் தயாராக இல்லை.

சாமிக்கு அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்வோம். செல்வம் வந்தது என்றால் சாமிக்குக் கூடக் கொஞ்சம் செய்வோம்.

செல்வம் வரவில்லை என்றால்…
1.எத்தனையோ செய்தும் கூட.. இந்த மாதிரிப் போய்விட்டதே…!
2.தெய்வம் என்னைச் சோதிக்கின்றது…! என்போம்.

அதே மாதிரித்தான் என்னையும் (ஞானகுரு) நினைக்கின்றார்கள். “சாமி என்னைச் சோதிக்கின்றார்…!” என்று சொல்வதற்கு ஆரம்பித்துவிட்டார்கள்.

தவறு நடந்து விடுகின்றது. அதைச் சுத்தப்படுத்தாமல் விட்டுவிடுகின்றார்கள். ஆனால் சாமி சோதிக்கின்றார் என்று என்னைச் சொல்கிறார்கள்.

இது எல்லாம் நம்மை அறியாமல் சொல்லக்கூடிய நிலைகள் தான்.

யாம் கொடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எந்த நேரத்திலும் (எண்ணியவுடன்) நீங்கள் பெற முடியும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை உங்களால் போக்கிக் கொள்ள முடியும்.

1.சாமி தான் செய்வார் என்று எண்ணுவதற்குப் பதில்
2.சாமி சொன்ன அருள் வழியைக் கடைப்பிடித்து…
3.அந்த அருள் சக்தியால் “நான் மகிழ்ச்சியாக வாழ்வேன்…” என்ற நிலைக்கு அனைவரும் வாருங்கள்.

அந்த அருள் ஞானத்தை என்னால் பெற முடியும். அருள் வாழ்க்கை என்னால் வாழ முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.