3/06/2018

“அஷ்டமி… நவமி…” அன்று நல்ல காரியம் தொடங்கக் கூடாது என்கிறார்கள் – ஞானிகளின் விளக்கம்


தாவர இனச் சத்தை ஒரு உயிரணு நுகர்ந்தால் அந்த உணர்வின் சத்து உடலாகின்றது. அந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் எண்ணங்களாகின்றது.

நவக்கோள்களின் உணர்வுகளும் சேர்ந்து அந்தச் சத்தின் தன்மை பல விதமான கலவைகளாகி அதற்குத் தக்க தாவர இனங்களாக உருவாகின்றது. அதனின் மணத்தைச் சுவாசிக்கும் பொழுது
1.அந்த உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணங்கள் வருகின்றது.
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அது உடலையும் இயக்குகின்றது.

இருந்தாலும் பல வகையான உணர்வுகள் சேர்த்துக் கொண்ட பின் "பார்க்க வேண்டும்...” என்ற உணர்வு வருகின்றது. அப்பொழுது அந்த எண்ணங்கள் “நவமி” ஆகின்றது.

1.நவமியில் தான் இராமன் பிறந்தான்.
2.ஒன்பது கோளின் உணர்வுகள் உணர்ச்சிகளாகி இராமன் பிறந்தான்.
3.அதாவது எண்ணங்கள் தோன்றுவதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

எண்ணத்தால் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இந்த உடல் அமைகிறது என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது நாம் எதை நுகர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உடலும் எண்ணமும் செயலாக்கக்கூடிய தன்மை பெற்றது.

ஒரு சொல்லாகச் சொல்லும் பொழுது அந்த உணர்வின் கணைகள் (கேட்கும் பொழுது) உங்களையும் இயக்குகின்றது என்னையும் இயக்குகின்றது என்ற இந்த உணர்வை “இராமன் பிறந்த நாள்…” என்று காட்டுகிறார்கள்.

இராமன் பிறந்த நாள் (எண்ணங்கள் தோன்றியதை) அன்று நல்ல காரியமே தொடங்கக் கூடாது என்றால் அது சரியாகுமா...!

 எண்ணங்கள் தோன்றி வளர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு பார்க்க வேண்டும் என்ற புது உணர்ச்சி வருகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் போது அஷ்ட திக்கும் பார்க்கக்கூடிய தன்மை வருகின்றது.
1.முதலில் எண்ணங்கள் உருவாகின்றது அது “நவமி…”
2.எண்ணங்கள் வந்த பின்… பார்க்க வேண்டும்…! என்ற கண்கள் வருகின்றது அது “அஷ்டமி…!”

கண்கள் எப்போது தோன்றுகின்றது...? அஷ்டமியில் தோன்றுகின்றது. கண்கள் தோன்றியபின் இது நல்லது… இது கெட்டது… என்று தெரிந்து கொள்கின்றோம்.

கெட்டது என்று தெரியப் போகும் போது காக்கும் உணர்ச்சிகளாக அந்த எண்ணங்களைக் கொண்டு வருகிறது. முதலில் எண்ணத்தால் கண்கள் உருவானது. கண்கள் உருவான பின் உணர்வுக்கொப்ப எண்ணங்கள் உருவாகின்றது. 

எதனின் உருவத்தைப் பார்க்கின்றமோ அந்த உணர்ச்சிக்கொப்ப செயல்படும் தன்மை கூர்மை அவதாரம்.

1.உடல் பெற்ற நாள் சிவன் இராத்திரி
2.தாவர இனச் சத்தை நுகர்ந்து எண்ணங்கள் உருவான நாள் நவமி.
3.எண்ணத்தால் கண்கள் உருவான நாள் அஷ்டமி.

ஆனால் அஷ்டமியையும் நவமியையும் நல்ல நாள்கள் இல்லை என்று இராமன் பிறந்த நாளையும் கண்ணன் பிறந்த நாளையும் தவறாகக் கணக்குப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

கூர்மையாகப் பார்த்து... உணர்வை மாற்றக்கூடிய நம் “கண்களால் தான்” பல உணர்வுகள் பல உணர்ச்சிகள் பல எண்ணங்கள் எல்லாம் தோன்றுகின்றது கண்ணன் வெண்ணெயைத் திருடினான் என்றால் அதன் உட்பொருள் என்ன...?

தவறு செய்து கொண்டிருக்கின்றீர்கள். அந்தத் தவறை நான் பார்க்கின்றேன். 
1.கண்களில் பார்த்தவுடனே அந்தத் தவறான உணர்வைப் பிரித்து
2.அதை எடுக்க வேண்டும் என்ற நிலையில்
3.உண்மையின் உணர்வை எடுத்து அதைத் திருடிச் சொல்கின்றது - இந்தக் கண்கள்.

அந்தத் தவறை நீங்கள் எப்படித் தான் மறைத்தாலும் உடனே அந்த சந்தேகத்தைக் கிளப்பும். ஒரு பொருளை வைத்திருந்தால் “திருடன்...! நம்மை ஏமாற்றுகின்றான்…” என்று நீங்கள் தெரிந்து கொள்கின்றீர்கள் இல்லயா..!

உங்களைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வைத் திருடி எனக்குள் சொல்கின்றது. உற்றுப் பார்த்த உணர்வுகளை எல்லாம் (கண்கள்) திருடுகிறது. அதனால் தான் (கண்களை) கண்ணனைத் திருடன் என்று பேர் வைத்தார்கள்.

கண்ணன் உறியில் இருக்கின்ற வெண்ணெயைத் திருடுகின்றான் பெண்களின் சேலைகளைத் திருடுகிறான் என்று காண்பிக்கின்றார்கள்.

1.மிகச் சக்தி வாய்ந்த உணர்வுகள் எதுவோ அதைத் திருடி நமக்குக் கொடுக்கின்றது.
2.அதாவது உண்மையின் உணர்வுகளைத் திருடி
3.தெளிந்த வாழ்க்கையாக நம்மை வாழ வழி அமைத்தது என்ற
இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானிகள் சொன்ன இந்தப் பேருண்மைகளை அறியாதபடி கண்ணன் பிறந்த நாள் அன்று “உறி அடிப்பதற்கும்... வழுக்கு மரம் சவுக்கு மரம் ஏறுவதற்கும் தான்…!” பழக்குகின்றார்கள்.

அதே சமயத்தில் நம்முடைய பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுகிறோம்…! மேல் நாட்டு நாகரீகத்தின்படி கொண்டாட ஆரம்பித்து விட்டோம்.

கேக்கை வைத்து அதில் பேரை எழுதி வைத்துக் கொள்வார்கள். மேலே விளக்கைப் பொருத்தி வைத்திச் சிறிது நேரத்தில் அதை “ப்பூ...ப்பூ...” என்று ஊதி அணைத்து இருளாக்கச் செய்வார்கள்.

பின் கத்தியால் கேக்கைத் துண்டு துண்டாக அறுத்து எல்லோருக்கும் பங்கு வைப்பார்கள். இருளாக்குவதும்... கத்தியால் அறுப்பதும்... மேல் நாட்டு வழக்கமாகச் செயல்படுத்தி நம் புத்தியையே கெடச் செய்துவிட்டார்கள்.

கண்ணன் பிறந்த நாளையும் இராமன் பிறந்த நாளையும் அஷ்டமி நவமி அன்றைக்கு எந்த நல்ல காரியமும் தொடங்கக் கூடாது என்று உண்டாக்கி விட்டார்கள்.

நம் எண்ணங்கள் கொண்டு மணத்தால் அறிந்து கொள்ள கூடிய சக்தியாக அவைகளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அஷ்டமி நவமி என்று காவியங்களின் மூலமாக ஞானிகள் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

இதெல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் இன்று பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர்.

அகண்ட அண்டமும்... இந்தப் பிரபஞ்சமும்... நம் உடலும் எப்படி உருவானது..? என்று தெரிந்து கொண்டால் அறியாமையில் இருப்பவர்களை விடுபடச் செய்ய முடியும்.

1.ஞானிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று
2.இருளைப் போக்கி மெய்ப் பொருள் காணும் திறன் பெற்று
3.ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை
4.உலக மக்கள் அனைவருக்கும் அறியச் செய்யவேண்டும் என்பதற்கே இதை உணர்த்துவது.