ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2018

மகரிஷிகளோ ஞானிகளோ நம்மைத் தண்டிப்பார்களா…?


கேள்வி - மகரிஷிகளோ ஞானிகளோ நம்மைத் தண்டிப்பார்களா…? தண்டிக்கலாமா…!*

பதில் - என் வாழ்க்கையில் நடந்த இரண்டு அனுபவங்கள்

திருப்பு முனை 1

1985ல் படிப்பு முடிந்து 1986ல் எனக்கு மத்திய அரசு இரயில்வே வேலை கிடைத்தது என்று கேள்விப்பட்ட அந்த நேரத்தில் தியானத்திற்கு வந்தேன். இரயில்வே வேலை என்பதால் பல VERIFICATION செய்தார்கள். அது முடிவதற்கு ஒரு வருட காலம் ஆகிவிட்டது.

அந்த ஒரு வருட காலத்தில் சாமியைச் (ஞானகுருவை) சந்திக்க அவர் உபதேசிக்கும் ஊருக்குச் சென்று உபதேசம் கேட்க என்று இதே வேலையாக இருந்ததால் பொழுதே போய்விட்டது.

கடைசியில் MEDICAL TESTல் FAIL ஆகி வேலை உனக்குக் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். வேலை உறுதியான நிலையில் இல்லை என்று ஆன பின் வீட்டில் உள்ளவர்கள் என்னைத் திட்டுகிறார்கள்.

தியானம் என்று போய்க் கடைசியில் வேலையே போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மிகப் பெரிய மனப் போராட்டமாகி கடைசியில் வாழ்க்கை என்றால் என்ன…? என்ற மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்து விட்டது.

ஒரு வாரம் சாமி மேல் கோபித்துக் கொண்டு தியானமும் செய்யாமல் இருந்தேன். பின் “அது தவறு…!” என்று உணர்ந்தேன். மீண்டும் செய்ய ஆரம்பித்தேன்.

ஏன் மீண்டும் செய்ய தொடங்கினேன்..? மீண்டும் எப்படி அந்த எண்ணம் வந்தது என்றும் தெரியாது.

ஆனால் முதலில் செய்ததைக் காட்டிலும் வலுவாகச் செய்ய ஆரம்பித்தேன். அவருடைய உபதேசங்களையும் இன்னும் அதிகமாக ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டேன்.

தவறே நான் செய்யவில்லை. இருந்தாலும் சாமியோ ஞானிகளோ மகரிஷிகளோ என்னைத் தண்டித்தாக எனக்கு ஒரு எண்ணம் கூட வரவில்லை.

இது என்னுடைய வாழ்க்கையில் சாமிகள் மூலமாகப் பெற்ற மிகப் பெரிய திருப்பு முனை. வாழ்க்கை என்றால் என்ன..? என்று ஒன்றுமே தெரியாத வயதில் வாழ்க்கை என்றால் என்ன என்று சிந்திக்க வைத்த ஒரு நல்ல அனுபவம்.

இந்த அனுபவத்தால் தான் நான் இன்றும் இந்த மெய் ஞானப் பாதையில் தங்கு தடையில்லாது சென்று கொண்டிருக்கின்றேன்.

திருப்பு முனை 2

1997ல் என்னுடைய உறவினர் ஒருவருக்குத் திடீரென்று உடல் நிலை சரியில்லாது போக அதைச் சரி செய்ய வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் TRUNK CALL BOOK செய்து சாமிகளிடம் தொடர்பு கொண்டு நோய்வாய்ப்பட்டவருக்கு என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்யவேண்டும் என்று தான் ஃபோனில் அவரிடம் கேட்டேன்.

அவர் என்னிடம் சொன்னது… “உங்களுக்கெல்லாம் எதற்காக நான் சக்தி கொடுத்திருக்கின்றேன்…? என்னிடம் எதற்காகக் கேட்கிறாய்…? என்று முற்றிலும் எதிர்பாராத பதிலைச் சொன்னார்.

சொல்லும் தொனியில் அதிகமான கடுமை இருந்தது.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அவரிடம் வந்த பதிலால் எனக்கு மிகவும் கடுமையான கோபம் வந்துவிட்டது. நான் அவருக்கு எல்லாம் தெரியும். அவரிடம் கேட்டு அதன் படி நடந்தால் சீக்கிரம் உறவினரைக் குணப்படுத்திவிடலாமே என்ற எண்ணத்தில் தான் கேட்டேன்.

ஆனால் வழி சொல்லாது என்னைக் குற்றமாகச் சொல்வார் என்று நான் எண்ணவே இல்லை. பின் ஃபோனை வைத்துவிட்டேன்,

“உன்னை ஒரு பெரிய மனுஷன்…” என்று நினைத்து வெறும் ஆலோசனை தான் கேட்டேன். ஆனால் நீ இப்படிப் பேசினாய் என்றால் என்ன அர்த்தம்…? என் மனதில் அப்பொழுது அந்த மாதிரி மிகப் பெரிய ஒரு உந்துதல் ஏற்பட்டது. 

சரி பரவாயில்லை… நீ உன் குணத்தைக் காட்டிவிட்டாய். பார்…! நான் என் குணத்தை நான் காட்டுகின்றேன்.. என்று கங்கணமே கட்டினேன்.
1.இனிமேல் உன்னிடம் வாய் வழியாகப் பேசி உன்னிடம் எந்த வேண்டுதலும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கவே மாட்டேன்.
 2.அதற்குப் பதிலாக உன்னை நினைத்தே அத்தனையும் செய்யப் போகிறேன் பார்..!
3.அப்பொழுது உன்னால் என்னைத் தடுக்கவே முடியாது.. என்று
இப்படி ஒரு அழுத்தமான முடிவு எடுத்துக் கொண்டேன்.

அந்த நேரத்திலும் மகரிஷிகளோ ஞானிகளோ என்னைத் தண்டித்ததாக நான் எண்ணவுமில்லை. அந்த மாதிரி எண்ண வாய்ப்பே இல்லை.

அதே மாதிரி அவரை எண்ணியே ஒரு ஆறு மாதத்தில் அந்த உறவினர் நோயையும் குணமாக்க முடிந்தது.

சாமிகள் அது பற்றி என்னிடம் கூறவில்லை. ஆனால் மற்றவரிடம் “இவர் ஒரு கடுமையான அன்பர்.. ஏதோ ஓரளவிற்குச் சரி செய்து விட்டார்…” என்று சொன்னார்கள்.

அதை RECORD செய்து என்னிடம் சாமிகள் உங்களைப் பற்றி இப்படிச் சொன்னார் என்று போட்டுக் காட்டினார்கள்.

சாமிகள் கோபமாக என்னைக் கடுமையாக ஃபோனில் திட்டியது என் வாழ்வில் மிக மிகப் பெரிய திருப்பு முனை. இந்த இரண்டாவது அனுபவத்தினால் தான் இன்று விண்ணிலே இருக்கும் மகரிஷிகளுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பு கொள்ள முடிகின்றது.

என் அனுபவத்தில் ஞானிகளும் மகரிஷிகளும் அவர்கள் காரியம் எதுவோ அதில் குறிக்கோளாக இருப்பவர்கள். அவர்களுக்குக் கௌரவம் சிறிதளவு கூடக் கிடையாது.

நமக்குக் காரியம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கௌரவம் போய்விடக் கூடாது.

இப்படிப்பட்ட கௌரவப் பைத்தியமாக நாம் இருக்கும் வரையிலும் காரியப் பைத்தியமான மகரிஷிகள் செய்வது அனைத்தும் நமக்குத் தண்டனையாகத் தான் தெரியும்.

கௌரவப் பைத்தியமாக இருக்கும் மனிதர்களில் ஒருவனான நானும் அதனால் தான் மகரிஷிகளிடம் நான் என் வேண்டுதலை இப்படி வைத்திருக்கின்றேன்.

மகரிஷிகளிடம் நான் போட்டுள்ள ஒப்பந்தம் – என் பிரார்த்தனை

1.எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் என்னை ஒரு “ஞான சூன்யம் இவன்…” என்று கை விட்டு விடக் கூடாது.
2.சொல்லிப் பார்த்தோம் கேட்கவில்லை.. அனுபவம் கொடுத்தோம் அப்புறமும் கேட்கவில்லை.. இதற்கு மேலும் இவனிடம் என்ன சொல்ல இருக்கிறது…! என்று என்னை அப்படியே விட்டுவிடாதீர்கள்..
3.நான் போகும் பாதையை அப்படியே மடக்கி (BLOCK) செய்து உங்களால்  எந்த மாதிரியான தண்டனை கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து என்னை நல்வழிப்படுத்த வேண்டும். எனக்கு அது உறைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.
4.என்னை எந்தக் காரணம் கொண்டு நீங்கள் (மகரிஷிகள்) செல்லும் ஞானப் பாதைக்கு “நான் தகுதியில்லாதவன்” என்று ஒதுக்கவே கூடாது
5.நான் ஒவ்வொரு நாளும் இதைத்தான் வரமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
6.இதை என் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் சொல்லித் “தவமாக…” என்னால் முடிந்த மட்டும் இருந்து கொண்டிருக்கின்றேன்.

அதனால் என் ஒவ்வொரு நொடியும் நிமிடமும் நாளும் வருடமும் போவதே எனக்குத் தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.

மகரிஷிகள் நமக்குத் தண்டனை கொடுத்தால் அதைக் காட்டிலும் வேறு பேறு இல்லவே இல்லை. நாம் மிகவும் பரிசுத்தமாக ஆவோம். நான் அப்படி ஆகிக் கொண்டே உள்ளேன்.

இது என்னுடைய அனுபவம்.