ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2018

அகஸ்தியர் கொடுத்த விநாயகர் தத்துவம்


கீதையிலே… “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று வியாசகர் கூறியுள்ளார். அருள் உணர்வுகளை வினையாக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கும்படிதான் விநாயக தத்துவத்தில் காட்டப்பட்டது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமையைப் பெறச் செய்து
3.நம் எண்ணத்தால் அதைக் கவரும் சக்தியை ஊட்டி
4.அந்த அரும்பெரும் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தியது தான் ஞானிகள் கொடுத்த விநாயகர் தத்துவம்.

ஞானிகள் கொடுத்த அந்தத் தெய்வீக நிலையை என்ன செய்கின்றார்கள்…?

கல்லாக நினைத்துத் தான் பார்க்கின்றார்கள். கடவுளாக நினைத்துப் போகவில்லை. தன்னுடைய ஆசையை நினைத்துத் தான் போகின்றார்கள். மனதைக் கல்லாக்கி விடுகின்றார்கள். அந்த உண்மையான உணர்வைப் பெற முடியவில்லை.

இதிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் அதற்காக என்ன செய்ய வேண்டும்…?

1.விநாயக தத்துவத்தைக் கொடுத்த அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல நாங்கள் இருவரும் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
3.சாவித்திரியைப் போன்று எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
4.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெறும் பேரொளியாக மாறும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் பார்வையில் எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
6.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
7.நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் அந்த நிலைகள் பெற வேண்டும்
8.எங்களைப் பார்ப்போர் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று
9.இப்படித் தீமை என்ற உணர்வை வராதபடி ஒன்று சேர்த்து இணைக்கும் சக்தி பெற வேண்டும்.

நீங்கள் எல்லோரும் இந்த மாதிரி எண்ணிப் பாருங்கள்.

அக்காலங்களில் ஆற்றங்கரையில் தான் விநயகர் கோவில் இருக்கும். கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆற்று நீரில் குளித்து உடலையும் உடைகளையும் தூய்மையாக்குகின்ற மாதிரி
1.நம் மனதை… நம் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் தத்துவத்தைத்தான்
2.விநாயகர் தத்துவமாக ஞானிகள் அழகாகக் கொடுத்து இருக்கின்றார்கள்.
3.மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதன் மீது பற்று அதிகமானால் நாம் அங்கே போகின்றோம்.

அப்படி இல்லாதபடி… விநாயகரைப் பார்த்து எல்லோருக்கும் உதவி செய்தேன்…! கடனை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாய்…! நான் உதவி செய்தவனே எனக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கின்றான்… உனக்கு எல்லா நைவேத்யமும் செய்தேன்…  கண ஹோமம் எல்லாம் செய்தேன்…! என்று எண்ணினால் இங்கே தான் சுழன்று கொண்டிருக்க வேண்டும்…!

எங்கே…?

யார் மேலே வருத்தப்படுகின்றீர்களோ… யாரை எண்ணிக் கோபப்பட்டீர்களோ அந்த உணர்வை எடுத்து அந்த உடலுக்குள் தான் போகும்.

அந்த உடலுக்குள் சென்று நோயை மீண்டும் உருவாக்கி அவனையும் வீழ்த்திவிட்டு மனிதன் அல்லாத உருவைத் தான் அங்கே உருவாக்கும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலேயும் குறைகளைக் கண்டால் கணவனும் மனைவியும் அந்த உணர்வை உள்ளே விடாதபடி “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி இங்கே அடைத்திடல் வேண்டும்.

குடும்பத்திற்குள் இருந்தாலும் சரி நமது கர்ம காரியங்கள் செய்யும் போது அத்தகைய நிலை ஏற்பட்டாலும் சரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தடுத்து நிறுத்திப் பழகவேண்டும்.

 ஏனென்றால் மனிதனுக்குத்தான் தெய்வ சக்தியைப் பெறக்கூடிய அந்தத் தகுதி உண்டு.
1.கணவன் மனைவி இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்தால்
2.அதற்குப் பின் பிறவியில்லை…! விநாயகர் தத்துவத்தின் மூலம்…!