ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2018

உதவி எப்படிச் செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் “நம்மைக் காக்கும் சக்தி” ஒன்று வேண்டுமல்லவா..!


நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் எவ்வளவு உயர்ந்த குணங்கள் இருப்பினும் நாம் பண்புடன் ரோட்டிலே நடக்கும் பொழுது எத்தனையோ அசம்பாவிதங்களைப் பார்க்கின்றோம்.

ஒருவன் ரோட்டிலே அநாதையாகக் கிடக்கின்றான். பரிதவிக்கின்றான்… வேதனைப்படுகின்றான்… பல நிலைகளில் துடிக்கிறான்…!  அப்பொழுது பரிவு கொண்ட மனிதன் உள்ளம் நாம் அதைப் பார்க்காமல் இருக்க முடியுமா…?

பார்த்துவிட்டு அதைக் கவனிக்காமல் போனாலே அரக்கன் என்ற நிலை வந்து விடுகின்றது.  அவனுக்கு உதவி செய்யவில்லை என்றால் அவன் இரக்கமற்ற அரக்கனாக மாறுகின்றான்.

இவ்வளவு தூரம் சிரமப்பட்டு அவன் துடிக்கின்றான்…! பார்த்து.. என்ன…? என்று கேட்காமல் அநாதையாகப் போய்க் கொண்டிருந்தான் என்றால் “மனிதன் என்ற பண்பினை இழந்து விடுகின்றான்…!”

ஆனால் அதே சமயத்தில் பண்பு கொண்ட மனிதன் அவனை உற்றுப் பார்த்துக் கேட்கும் பொழுது…,
1.அவனின் வேதனை என்ற உணர்வு இங்கே வலு பெறுகின்றது.
2.நாம் நுகர்ந்தாலோ நம்முடைய நல்ல குணங்களை அது மறைத்து நம்மை அழச் செய்கிறது.
3.அந்த வேதனை என்ற நிலைகள் நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

ஆக விலகிச் சென்றால் மனிதப் பண்பையே இழக்கின்றோம். ஆனால் வேதனையை நுகர்ந்தாலோ நம் நல்ல குணங்களை அது மறைத்து நம் வலிமையைக் குறைத்துவிடுகின்றது. பின் அவன் பட்ட வேதனை நமக்குள்ளும் வளர்கின்றது.
1.இப்போது இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

விண்ணிலே தோன்றிய உயிர் உடல் பெற்ற நாளைச் சிவன் ராத்திரி என்றும் உயிர் இருளுக்குள் (உடலுக்குள்) தான் அடங்கி இருக்கிறது என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

1.உடலுக்குள் இருக்கும் உயிரை நாம் காண முடிகின்றதா…? இல்லை.
2.உயிரின் உணர்வின் துடிப்பால் உணர்வால் நுகர்ந்து அதன்பின் தான்
3.நாம் அறிந்து செயல்படும் சக்தியைப் பெறுகின்றோம்.
4.உயிர் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டு தான் நாம் அறிகின்றோம்.

அப்பபொழுது நாம் நுகர வேண்டியது எது…?

சந்தர்ப்பத்தால் நாம் எதை நுகர்ந்தாலும் சிறு திரையாக இருந்து நம் நல்லதை மறைக்கும் பொழுது அது சித்திரை. இதை நாம் நீக்கிப் பழக வேண்டும். இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் நல்ல குணத்தை மறைக்கும் நிலையை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து
3.அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கி
4.இந்த வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ்தல் வேண்டும்.

அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்துக் கொண்டு வரும் தீமைகளை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நாள் பழகிவிட்டால் அப்புறம் தன்னாலே அந்தத் தீமைகளை விலக்கித் தள்ளும் உணர்வின் இயக்கம் நமக்குள் வரும்.

இது ஒன்றும் கஷ்டமானதல்ல…!