ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2018

உயிரில் மோதும் உணர்வுகளில் கவனம் தேவை…! ஏனென்றால் உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது


விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம். முன்பு காந்த ஊசியை வைத்து நாடாக்களில் உராய்ந்து அந்த உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தி இசையோ அல்லது பாடலோ படமோ அதைக் கேட்கலாம்… காணலாம்…!

இப்போது அதெல்லாம் இல்லை. லேசர் (LASER) இயக்கம் என்ற நிலையில் ஒளிக் கற்றையை நேராகப் பாய்ச்சுகின்றனர்.

நாடாக்களில் பதிந்த நிலைகள் கொண்டு அதை வேகமாகச் சுழலச் செய்து அதில் LASERஐப் பாய்ச்சும் பொழுது அந்த நாடாக்களில் பதிவானது எதுவோ அந்த உணர்வலைகளை இன்று டி.வி்.க்களிலும் கம்ப்யூட்டரிலும் செல்ஃபோன்களிலும் பார்க்கின்றோம்.

இந்த ஒளியின் லேசர் இயக்கம் அதிலே மோதி அதிலே வரக்கூடிய அந்தக் காந்தப்புலனுடன் இணைந்து அது எந்தெந்த இசைகள் இருந்ததோ அதையெல்லாம் இயக்கிக் காட்டுகின்றது. பாடல்களைப் பாடச் செய்கின்றது.

பாடல்களைப் பாடச் செய்யும் போது பாடத் தெரியாத குழந்தையும் காதிலே கேட்டவுடனே அந்த இசைக்குத் தகுந்த மாதிரி ஆட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது அந்தக் குழந்தையை எது ஆட்டுவிக்கின்றது.

எந்தக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்ந்து உற்று நோக்குகின்றதோ
1.கண்ணின் புலனறிவு அந்த ஒலி் அலைகளைத் தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசிக்கும் பொழுது உயிரால் ஈர்க்கப்பட்டு
3.அதிலே மோதியவுடன் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.
4.அந்தச் சப்தம் மகிழ்ச்சி என்றால் மகிழ்வான உணர்வுகளைக் கொண்டு வருகின்றது.
5.உடல் முழுவதும் பரவச் செய்கின்றது
6.அதற்குத்தக்க இந்த உடலை இயக்கச் செய்கின்றது.

குழந்தைகளில் இதைப் பார்க்கலாம். எது இயக்குகின்றது…? நுகர்ந்தறிந்த உணர்வு எதுவோ அதற்குத்தக்க இயக்கச் செய்கின்றது.

ஆனால் அந்தக் குழந்தைக்குப் பாடலைப் பற்றி அந்த இசையின் தன்மை தெரியவில்லை என்றாலும் கூட
1.உற்றுக் கேட்டு நுகர்ந்த உணர்வுகள்
2.அந்தக் குழந்தையை இயக்கிக் காட்டுகின்றது… இயக்கச் செய்கின்றது…!

அதாவது உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் பரவச் செய்யப்படும் போது அந்த உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. அதுவே நம்மை ஆள்கின்றது.

1.நாம் இயக்குகின்றோமா…?
2.நம்மை அது இயக்குகின்றதா…? என்று பார்த்தால்
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதுவே அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

உயிர் என்பது (LASER) போன்று நாம் சுவாசிக்கும் அலைகளுடன் உராய்ந்து எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும் எழுப்பி உடலுக்குள் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது உடல் உறுப்புகளை இயக்கச் செய்து அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம். உயிரிலே படவில்லை என்றால் எந்த உணர்ச்சிகளும் நம்மை இயக்காது. அதனால் தான்
1.தீமையான உணர்ச்சிகள் நம்மை இயக்காமல் தடுக்கப்
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும்படிச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளே நம்மை இயக்கும். தீமையான உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.