3/11/2018

மதத்திற்குள் இனமும்… இனத்திற்குள் குலமும்… நம்மை ஒன்றுபடச் செய்து மகிழ்ச்சியாக வாழச் செய்கின்றதா…? – எது கடவுள்…? என்றுமே அழியாத நிலை என்பது எது…?


இன்று ஜாதக ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மதங்கள் வகுக்கப்பட்ட ஜாதகம் தான் எல்லாம். ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கென்ற கால நேரங்களை வகுத்துள்ளார்கள்.
1.ஒரு மதம் எனக்கு 1 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
2.மற்றொரு மதமோ அது 2 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
3.இன்னொரு மதமோ 1.30 மணிக்கு நல்லது என்கின்றது
4.இன்னொரு மதமோ 12 மணிக்குத் தான் எங்களுக்கு நல்ல நேரம் என்கின்றது.

மதத்தின் அடிப்படையில் இப்படிப் பிரிந்தாலும் இனத்தின் நிலைகள் கொண்டு திருமணங்கள் திருப்பூட்டும் போது எடுத்துக் கொண்டால் இனங்களில்
1.எங்களுக்கு மாசி மாதம் தான் நல்ல நேரம்
2.எங்கள் இனத்திற்கு மாசி மாதம் ஒத்து வந்தது
3.எங்கள் இனத்திற்கு ஆடி மாதம் ஒத்துக் கொள்கின்றது
4.எங்கள் இனத்திற்கு மார்கழி மாதம் ஒத்துக் கொள்கின்றது என்று
5.இவ்வாறு இனத்திற்கு ஒரு சட்டத்தை இயற்றி
இதைக் கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வதாகத் தான் இன்று நடைமுறை சம்பிரதாயங்கள் நடக்கின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

மதம் மக்களைக் காத்தாலும் மக்களைப் பாதாளத்தில் அமிழ்த்துகின்றது, ஓர் மதத்தின் தன்மை அவர்கள் வகுத்துக் கொண்ட நிலைகளில் நியதிகள் இருப்பினும் அதற்குள் இருக்கும் நியதிகளில் இனங்கள் பிரிக்கப்படும் போது அதற்குள்ளும் போர் முறைகளே தான்…!

இனங்கள் பிரித்துக் கொண்ட பின் குலங்கள் பிரிக்கப்பட்டு
1.எங்கள் குலத்திற்கு இந்தத் தெய்வம் ஆகாது
2.இ்தை வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
3.உங்கள் தெய்வத்தை நாங்கள் வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
4.இப்படி இனங்களுக்குள் தெய்வமும் தெய்வத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இதிலேயும் போர் முறை…!

எங்கள் குல தெய்வத்தை மீறி மற்ற இனங்களிலிருந்து எடுத்துக் கொண்ட உங்கள் குலதெய்வம் எங்களுக்கு ஆகவில்லை. அதனால் நீ வீடு புகுந்த நாள் முதல் எங்கள் குடும்பம் சீர் கெட்டு விட்டது என்று இப்படி ஒரு போர் முறை…!

அன்று ஆண்ட அரசர்களால் பிரிக்கப்பட்ட நிலைகளில் நமக்குள் எதனை ஊன்றி வேராக வளர்த்து வைத்திருக்கின்றோமோ அந்த நிலையே தான் நம்மை இயக்குகின்றது. இதைப் போன்று
1.நமக்குள் பதிவு செய்து கொண்ட உணர்வு எதுவோ
2.அதுவே “ஓ…ம் நமச்சிவாய…” என்று உடலாக மாற்றி
3.“சிவாய நம ஓ…ம் உடலாக மாற்றியதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.அந்த உணர்வின் இயக்கமாக நம்மிடமிருந்து வெளிப்பட்டு இயக்கும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு நாடாவில் நாம் பதிவு செய்து கொண்டதை மீண்டும் அதைக் காந்த ஊசியுடன் இணைக்கப்படும் போது பதிவு செய்ததை அது மீண்டும் அப்ப்டியே பேசுகின்றது.

பல நாடாக்களைப் ஏக காலத்தில் போட்டுப் பதிவாக்கிய பின் அதனை எந்தச் செயல் வேண்டுமோ அதற்குத் தக்க இயக்கப்படும் பொழுது அந்த நாடா ஒலி/ஒளி அலைகளை வெளிப்படுத்துகின்றது.

இதைப் போல உலகில் உள்ள மதங்களில் எத்தனை நிலைகளில் சட்டங்கள் இயற்றினாலும் அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டபின்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் போது
2.நமக்கு (மதத்திற்கு) இது விரோதமானது என்ற நிலைகளுக்குக் கொண்டு வரும்.
3.ஏனென்றால் நமக்குள் இருக்கும் அந்தப் பதிவு தான் நம்மை இயக்குகின்றது.
4.நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிரே பதிவாக்குகின்றது.
5.பதிவின் நிலையே நினைவாகி நினைவின் செயலாகத்தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்

நம் உயிரே கடவுளாக இருந்து
1.நாம் எண்ணியதைப் படைக்கின்றது…!
2.எண்ணியதை  உடலாக்குகின்றது…!
3.எண்ணியதை மீண்டும் இயக்குகின்றது…!
4.ஆகவே மனிதனுக்கு ஜாதகமோ ஜோதிடமோ நல்ல நேரம் என்றோ கெட்ட நேரம் என்றோ எதுவும் கிடையாது.

மெய் ஞானிகள் உணர்த்திய இந்தப் பேருண்மைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் காட்டிய அருள் வழியை நாம் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ முடியும்.

என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்…!