ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2018

சங்ககிரி மலை… வள்ளி மலை…” போன்ற மலை உச்சிகளில் நீர் எப்படி வருகின்றது…?


மனிதர்கள் வெளிப்படுத்தும் பகைமை உணர்வுகள் பரவச் செய்யப்படும் போது அந்த வேட்கையின் உணர்வலைகள் மேகக் கூட்டத்திற்குள் தாக்கினால் அந்த மேகங்கள் கலைந்து செல்லும் நிலையே வருகின்றது.

அந்தப் பகுதியில் மழை இல்லாத நிலை ஆகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல ஊர்களுக்கு என்னைச் (ஞானகுரு) செல்லச் செய்வார்.

அந்த ஊர்களில் கலவரங்கள் வந்து ஒருவருக்கொருவர் இன பேதம் மொழி பேதம் என்ற நிலையும்… ஊருக்கு ஊர் “அந்த ஊர்க்காரன்… இந்த ஊர்க்காரன்…!” என்று சண்டை போடுவார்கள்.

அத்தகைய பகைமை உணர்வுகள் பரவுவதை இந்த அலைகள் எவ்வளவு நாள்…? என்று கணக்கிடும்படி சொல்வார்.

அந்தப் பகைமை உணர்வுகள் பரவியதனால் மழை பெய்யும் போது பார்த்தால் பக்கத்து ஊரில் மழை இருக்கும். இந்த ஊரில் மழை இருக்காது. அனுபவ ரீதியில் தெரிந்து கொண்ட பின் தான் உங்களிடம் சொல்கிறோம்.

சில கிராமங்களில் இன்றும் பார்க்கலாம். பக்கத்து ஊரில் நிறைய மழை பெய்யும். இந்தப் பக்கம் வந்தது என்றால் மழை சுத்தமாக இருக்காது.

அங்கே ஏன் இல்லை…? என்று சொன்னால்
1.அந்த ஊரில் ஒற்றுமை இல்லாதபடி
2.ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொண்டதனால் அந்த அலைகள் பரவி
3.மேகங்களைக் கலைக்கச் செய்கின்றது.
4.அதாவது ஆவி மேகமாகி நீராக மாறும் சக்தி இங்கே இழக்கப்படுகின்றது.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரபஞ்சத்தின் அத்தனை உணர்வுகளும் மனிதன் தனக்குள் சேர்த்துக் கொண்ட நிலை இருப்பதனால் இது இவ்வாறு உருவாகின்றது.

உதாரணமாக மலைப்பகுதிகளில் சில மரங்கள் மேகத்தைக் கவரும் சக்தி பெற்றது. அதை எல்லாம் காட்டுவதற்காக வேண்டிப் பாகமண்டலம் என்ற இடத்திற்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்றார்.

தலைக் காவிரியில் அங்கே பாகமண்டலம் என்று உண்டு. அங்கே பார்த்தால் என்றால் ஒன்றுமே இல்லை. வெறும் மொட்டைப் பாறையாக இருக்கிறது.

அந்த மொட்டைப் பாறையில் எப்படி மேகங்கள் கூடுகின்றது…? தண்ணீர் அது எப்படி வருகின்றது…? என்று காட்டுகின்றார்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அன்று அகஸ்தியன் தன் வலுவான சக்தி கொண்டான். அவன் இங்கே அமர்ந்திருக்கும் போது அவனுக்குத் தண்ணீர் வேண்டும்.
1.தன் தவத்தின் தன்மை கொண்டு மலை உச்சியில் இருக்கும் போது
2.அவன் கவர்ந்து கொண்ட சக்தியால் மேகங்கள் இழுக்கப்பட்டு
3.அந்தப் பாறைகளிலே மோதப்படும் போது நீராக வடிகின்றது
4.கீழே அடி பாகத்தில தண்ணீர் இல்லை. ஆனால் மேல் பாகத்தில் தண்ணீர் வருகின்றது.
5.அகஸ்தியன் சென்ற பாதையில் அப்படி உண்டு.

இதைப் போன்று தான் அகஸ்தியன் வழியில் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட சில ஞானிகள் மலைப் பகுதிகளில் போய் தவமிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு தண்ணீர் வேண்டும்.

அப்போது அங்கே தவம் இருக்கும் போது அந்த மேகங்கள் கூடப்பட்டு தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். அதை குடித்துக் கொண்டு இருப்பார்கள்.

இங்கே சங்ககிரியில் கூட ஒரு குகை உண்டு. ஆரம்பத்தில் அதிலே தண்ணீர் இல்லை. பின் அந்தத் தண்ணீரூக்காக வேண்டித் தவம் இருந்த பின் தண்ணீர் வந்தது.

அதே மாதிரி வள்ளிமலையிலும் உண்டு. எல்லாம் சுற்றிப் பார்த்து அறிந்து வந்ததைத்தான் உங்களிடம் சொல்கிறேன்.

அங்கே கிணறு மாதிரி வைத்து இருந்தார்கள். அந்த கிணற்றில் எடுக்க எடுக்க தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். காலையில் வற்றி இருக்கும். இராத்திரியில் பார்த்தால் நிறைந்து இருக்கும்.

ஆனால் இது எங்கிருந்து தண்ணீர் வருகின்றது…?

அங்கே அந்த இடத்தில் நீர் தேவை. தவமிருந்தவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வால் இங்கே நீர் வளத்தை வரவழைத்தார்கள்.

இப்பொழுது சில இடங்களில் இது மங்கிவிட்டது. குருநாதர் அதையும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகின்றார்.
1.இன்றைய மனிதன் பிறருக்கு தீமை செய்யும் உணர்வுடன் அங்கே செல்லப்படும் போது
2.இந்த ஞானிகளால் உருவாக்கப்பட்ட தண்ணீர் அது எப்படி விஷமாக மாறுகின்றது…?
3.அதனுடைய நிலைகள் எப்படி மாறுகின்றது…? என்று இப்படிச் சில பகுதிகளையும் காட்டுகின்றார்.

ஏனென்றால் எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்தவன் தான் மனிதன். வேதனை பகைமை போன்ற உணர்வுகள் அதிகமாகி அத்தகைய உணர்வுகள் பரவச் செய்யும் போது
1.அங்கே தாவர இனங்களும் கருகி விடுகின்றது.
2.ஞானிகளால் தண்ணீர் ஊற்றை உருவாக்கிய அந்த இடங்களும் பாழாகி விடுகின்றது.

மனிதனின் ஆசைகள் கூடக் கூட தன்னைக் காக்கத்தான் அவன்  எண்ணுகின்றான்… செயல்படுகின்றான்….! பிறருடைய உணர்வுகளை ஒத்துப் பார்க்காது தன்னையே நியாயப்படுத்திக் கொள்கின்றான்.

நம்மை அறியாமல் இயக்கும் இத்தகைய இயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். பல பாகங்களிலேயும் என்னை அழைத்துச் சென்று குருநாதர் இப்படி எல்லாம் காட்டுகின்றார்.