ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2018

அகஸ்தியன் மாமிசம் சாப்பிடவும் இல்லை...! மற்றவர்களை மாமிசம் சாப்பிடச் சொல்லவும் இல்லை...! – ஏன்...?


இராமாயணத்தில் அகஸ்தியரின் வல்லமையைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள்.

அகஸ்தியர் காட்டுக்குள் செல்லும் போது வாதாபி என்ற அரக்கனும் அவனுடைய சகோதரனும் அவரை வழி மறிக்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தப் பாதையில் வருகின்றவர்களுக்கெல்லாம் அவர்கள் விருந்து கொடுப்பார்கள். வாதாபி என்பவன் ஆடாக மாறிக்கொள்வது. அதை அறுத்துச் சமைத்து வந்தவருக்கு விருந்து கொடுப்பார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடனே “வாடா வாதாபி...!” என்று சொன்னால் விருந்து சாப்பிட்டவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியில் வாதாபி வருவான். பின் அவரை அந்த இரண்டு பேரும் உணவாக உட்கொள்வார்கள்.

இது தான் அவர்களுடைய வழக்கம். இந்த மாதிரி ஒரு கதையைக் கூறியிருப்பார்கள். இதனுடைய உண்மை நிலை எது....?

அகஸ்தியன் சர்வ சக்தியும் பெற்றவன். அரக்கர்கள் விருந்து கொடுக்கின்றோம் என்று சொல்லும் பொழுது “நான் மாமிசம் சாப்பிடுவதில்லையப்பா...! என்று அகஸ்தியன் சொல்கின்றான்.

மற்றொரு ஜீவன்களைக் கொன்று புசிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. மனிதனுக்கு வேண்டிய தாவர இனங்களை உருவாக்கி அதைச் வேக வைத்துச் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவன் தான் அகஸ்தியன்.

மற்ற பிராணிகளை அவன் சாப்பிட்டதில்லை. ஏனென்றால் மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிட்டால்
1.எந்தப் பிராணியைச் சாப்பிட்டோமோ அந்த மணம் நம் உயிரான்மாவில் அதிகரித்து
2.இறந்த பின் அந்தப் பிராணியின் உடலுக்குள் நம் உயிர் நம்மை அழைத்துச் செல்லும் என்பதைத்
3.தெளிவாக அறிந்தவன் அகஸ்தியன்.

அதே போல் வேக வைக்காத பச்சைக் காய்கறியைச் சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் உடலில் எந்தக் காயைச் சாப்பிட்டீர்களோ அந்த மணம் வரும். அந்த மணம் அடுத்து என்ன செய்யும்...!

உயிர் போனதும் அந்தச் செடியிடம் நம்மை அழைத்துக் கொண்டு போகும். அல்லது அந்தப் பச்சைக் காய்கறியை எந்த மாடோ ஆடோ அதிகமாகச் சாப்பிட்டதோ நம்மை நேரே அதனிடம் இழுத்துக் கொண்டு போகும்.

காய்களைப் பச்சையாகச் சாப்பிட்டாலும் அந்த உணர்வுகள் அங்கே இழுத்துக் கொண்டு போய் மனிதனல்லாத நிலையைத்தான் உருவாக்கச் செய்யும் என்று தெளிவாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதன் அடைய வேண்டிய எல்லை எது...?” என்று அறிந்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.

இது எப்படி உருவாகின்றது...?” என்ற நிலையை அனுபவ ரீதியாக அறிந்து கொள்வதற்காக குருநாதர் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார். அறிந்து கொண்டபின் தான் உங்களுக்கு இதைத் தெளிவாகச் சொல்கிறோம்.

சாமியாரை நம்புகின்றீர்கள்... ஜோசியத்தை நம்புகின்றீர்கள்... மந்திரத்தை நம்புகின்றீர்கள்...! உங்களை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள்.

ஆனால் நீங்கள் எண்ணியதையெல்லாம் இயக்குவது உங்கள் உயிர் தான் என்ற நிலையில் நம்பிக்கை இருந்தால் யாம் உபதேசிக்கும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

மீண்டும் நினைவுபடுத்தினீர்கள் என்றால்
1.உங்கள் உயிர் அதை உருவாக்கும்
2.இருளை அகற்றும்... மெய்ப் பொருள் காணச் செய்யும்.
3.வாழ்க்கையில் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்வது உங்கள் உயிர் தான் - நானல்ல.

நான் கண்டேன். எனக்குள் எடுத்தேன். நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதனால் இது எனக்குள் விளைகின்றது.

1.நீங்கள் நலமாக வேண்டும் என்ற நிலையில்
2.உங்கள் கஷ்டத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை
3.கஷ்டத்திலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணுகின்றேன்
4.அப்போது உங்கள் துன்பம் எனக்குள் வருவதில்லை
5.அருள் ஒளி எனக்குள் வருகின்றது... வளர்கின்றது
6.நான் அந்த மகரிஷிகள் வாழும் இருப்பிடத்திற்குப் போகின்றேன்.

இதே மாதிரி நீங்கள் செய்து பாருங்கள். துன்பங்களை அகற்றலாம். இதில் என்ன கஷ்டம் வந்து விட்டது...? இது உங்களால் முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று நம் உயிரான நிலைகளில் மூடி மறைத்திருக்கும் தீமை என்ற திரைகளை நீக்கிப் பேரோளி என்ற உணர்வினைப் பெருக்குவோம்.

அருள் ஆனந்த சக்தியைப் பெருக்குவோம். அருள் ஆனந்தத்தைப் பெருக்குவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம். மலரைப் போல மணம் பெறுவோம்.

எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.