ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2017

நமக்குத் தீங்கு செய்பவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்? எப்படி எண்ண வேண்டும்?

அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம். அறிந்து கொள்கின்றோம்.

அதே சமயத்தில் அவர் “தீங்கு செய்கிறார்... தீங்கு செய்கின்றார்...” என்று எண்ணி அவர் தவறு செய்யும் உணர்வினை நுகர்ந்தால் என்ன ஆகும்?

1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் தான் வரும்
2.அடுத்து நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர
3.நன்மை செய்ய முடியுமா? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் “வேதனைப்படுகின்றார்...” என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வந்து நாமும் வேதனையைத்தான் படுகின்றோம்.

இதைப் போன்று தான் ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் அந்தத் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

நமக்குத் தீங்கு செய்கின்றவர்களை நாம் எப்படி எண்ண வேண்டும்? அவர்கள் தீமைகள் நமக்குள் வராமல் எப்படித் தடுக்க வேண்டும்? நன்மைகள் எப்படிச் செய்ய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் வினா எழுப்பினார்.

தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது
1.அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று
2.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று
3.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் யாம் குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம்.

ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்... ஈஸ்வரா” என்று எண்ணி உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலையும் உணர்வுகளையும் தூய்மையாக்கிவிடும்

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தீமை செய்வோர் உடல்களில் படர்ந்து அவர்கள் அறியாது செய்யும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் அடுத்து செய்வது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமைய வேண்டும்  ஈஸ்வரா என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள். இவ்வாறு
1.அவர்களைக் காக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
2.அப்பொழுது நமக்குப் பாதுகாப்பாகின்றது.
3.அவர்களுடைய தீமைகள் நம்மைச் சிறிதளவும் இயக்காது. 

மாறாக நாம் “நன்மை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக” வளர்கின்றோம். இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். செய்து பாருங்கள்.