ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2017

சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்துவதைப் பொறுத்துத்தான் இந்த மனித வாழ்க்கையில் நிறைவு காண முடியும் – “ஏகாந்த நிலையாக” விண்ணுலகம் அடையலாம்

இன்று நாம் எவ்வளவு கோடிக்கணக்கான பொருள் வைத்திருந்தாலும், பிறருக்கு நாம் தர்மத்தைச் செய்தாலும் புண்ணியத்தைச் செய்தாலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கின்றதா…!

நம் குடும்பத்தாருக்கோ உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ மற்றவர்களுக்கோ அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தர்மம் செய்து உதவிகளைச் செய்து பொருளைக் கொடுக்கின்றோம்.

எல்லா வகையிலும் உதவி செய்கின்றோம்.

அவ்வாறு உதவி செய்த பிற்பாடும் அவருடைய சந்தர்ப்பம் முன்னேற்றத்திற்கு வரவில்லையென்றால் அவர் சோர்வடையும் போது நாமும் சோர்வடையத் தான் செய்வோம்.

நாம் எவ்வளவு செய்தும் அவர் முன்னேற்றத்திற்கு வழி இல்லையே…” என்று நம்மை அறியாமலேயே நாம் சோர்வடைந்துவிடுவோம்.

1.அவர் அடிக்கடி அந்தத் துன்பத்தினுடைய நிலைகளைச் சொல்லச் சொல்ல
2.நாம் கேட்கக் கேட்க அது நமக்குள்ளும் வந்துவிடுகின்றது.

ஒரு பாலுக்குள் விஷத்தைப் போட்டவுடன் குடித்தால் உடனே மாய்க்கச் செய்துவிடுவது போல் நம் நல்ல சிந்தனையையும் குறைத்துவிடுகின்றது..

ஒரு மனிதன் மகிழ்ச்சியான நிலைகள் இருக்கும்போது திடீரென்று ஒரு பயத்தை உண்டாக்கும் ஒரு உணர்வைப் பாய்ச்சி விட்டால் நல்ல எண்ணங்கள் மறைந்து பயத்தின் உணர்வலைகளில் துடித்துக் கொண்டிருக்கும். ஆனால்
1.பயத்தால் துடித்துக் கொண்டிருக்கும் நிலைகளில்
2.நீங்கள் மகிழ்ச்சியான செய்திகள் எவ்வளவு சொன்னாலும்
3.ஏற்றுக் கொள்ளும் நிலை அங்கே இருக்காது.
4.ஏனென்றால் விஷத்தின் ஆற்றல் அத்தகைய நிலை பெற்றது.

நமது உடலுக்குள் பிறருடைய துன்பத்தை நுகர்ந்து பார்க்கும் போதுதான் அவருடைய துன்பத்தை நாம் அறிகின்றோம். அதன் பின் தான் அவருக்கு நல்லதைச் செய்கின்றோம்.

அவரது துன்பமான உணர்வுகள் நமக்குள் வந்து அதை உணர்ந்தபின் நாம் உதவி செய்தாலும் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் தேங்கிவிடுகின்றது. அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால் அவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் நிலைகள் நம் உடலிலேயும் விளைந்து விடுகின்றது.

1.ஏனென்றால் இயற்கை ஒன்றுக்குள் ஒன்று
2.உணர்வின் ஈர்ப்பு காந்தம் எல்லாவற்றிலும் காந்தங்கள் கலந்துள்ளது. 
3.நாம் எந்த உணர்வின் தன்மையை நினைவுபடுத்துகின்றோமோ
4.அந்த உணர்வின் தன்மையை இழுத்துவிடும்.

ஆகையினால் மனிதனுடைய வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும் அதை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக நமக்குள் பெறுதல் வேண்டும்.

நாம் தவறே செய்யாதபடி தர்மங்கள் ஆயிரம் நாம் செய்தாலும் அந்தத் தர்மம் செய்த உணர்வின் தன்மையை என்றும் நிலைக்கச் செய்ய வேண்டுமென்றால் மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும்.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள்வழிப்படி அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் எந்த நிமிடம் நமக்குத் தொல்லைகளோ மற்ற இன்னல்களோ வந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

ந்தச் சந்தர்ப்ப நிகழ்ச்சியைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக மகரிஷிகளின் அருள் ஞான வித்துக்களை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

எப்பொழுதெல்லாம் உங்களுக்குள் மனக் கலக்கங்கள் வருகின்றதோ அப்பொழுது இதை நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்குள் தெளிவு கிடைக்கும்.

உங்கள் பலவீனத்தை அகற்றி மன வலு உண்டாக்கும். சிந்திக்கும் ஆற்றலும் வரும். அதன் வழி நீங்கள் செயல்படும் போது உங்கள் காரியங்கள் சித்தியாகும். 

இந்த உடலுக்குப் பின் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காத நிலையாக… “ஏகாந்தமாக விண் செல்ல” ஏதுவாகும்.