ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2017

மனிதனுக்கு உத்தராயணம் எது...?

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.
1.அதிலே கருவாகி உருவாக்கிய
2.அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான்
3.எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

ஏனென்றால்,
1.இந்த உடல் பற்றை அகற்றி
2.உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
3.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

தியானமே நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும். பிறவியில்லா நிலை பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதே நம்முடைய  வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

1.இந்த உலகில் நாம் எந்தப் பொருளைத் தேடிப் பெற்றாலும்
2.அந்தப் பொருள் நமக்குச் சொந்தமாகப் போவதில்லை.
3.நாம் நம்மிடத்தில் சொந்தமாக்க வேண்டியது அழியா ஒளிச் சரீரம் பெறும் உணர்வைத்தான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் சேர்த்து என்றைக்குமே ஒளியின் உடலாகவும் நாம் எந்தத் துயரம் இல்லாத நிலையை அடைவதும் தான் “நமது கடைசி எல்லை”.