கோகர்ணத்தில் (கர்நாடகா) நடக்கும் நிகழ்ச்சிகளை எமக்கு முன்னமே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்லியிருந்தார். அதைப் பார்த்துவிட்டுச் செல்லலாம்
என்று பண்டரிபுரம் போகிற வழியில் கோகர்ணம் இறங்கினோம்.
பாவங்களை எப்படிக் போக்குகின்றார்கள்? எது எதுகளைச் செய்கின்றார்கள் என்பதை அங்கே யாம் பார்த்தோம்.
எம்மிடம் ரூ.1000-க்கு
மேல் நாராயணசாமி கொடுத்தது இருந்தது.
நாராயணசாமி என்ன சொன்னாரென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் பணம் இவ்வளவு வேண்டுமென்று
தந்தி கொடுங்கள். பணம் வந்துவிடும். பணத்திற்காகக் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.
கோகர்ணத்தில் ஒரு பிராமணர் வீட்டில்தான் சாப்பாடு. எம்மிடம் இருந்த பணத்தைப் பார்த்துவிட்டு
அங்கு ஒரு மடம் இருக்கின்றது. அதில் தனியாகப் படுத்துக் கொள்ளலாம் என்று வீட்டில் இருந்தவர்
சொன்னார். ரூபாய் எல்லாம் இங்கு கொடுத்துவிடுங்கள் என்றார்.
அப்பொழுது குருநாதர் காட்சி கொடுத்து உன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று சொன்னார்.
உன் பணத்தை எடுத்துக் கொண்டு உன் சரீரத்தைக் கடலில் வீசி விடுவார்கள் என்று சொன்னார்.
அவர்களுக்குக் காட்சி கொடுத்து காளியைக் காட்டியவுடன் விழுந்து சரணடைந்து விட்டார்கள்.
தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். நான் உங்களைக் கொலை செய்யலாம் என்றுதான் இருந்தேன்.
பட்டுத் துண்டு வேஷ்டி எல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் இருந்தேன் என்றார்.
பிறகு யாம் அவரிடம் பட்டுத் துண்டைக் கொடுத்து நீ செய்த பாவம் போகக் “கடலில்
குளி” என்றோம். துண்டு வேஷ்டி எல்லாம் தண்ணீரில் மூழ்கியவுடன் சல்லடைக் கண் போல் ஆகிவிட்டது.
இதைப் பார்த்து அவர் “என்னங்க…, தண்ணீரில்தானே மூழ்கினேன்… இப்படி ஆகிவிட்டதே…!” என்றார்.
உன்னுடைய உணர்வுகள் இப்படி இருந்தது, நீ எதையாவது செய்திருந்தால் உன்னுடைய உணர்வுகள்
உன்னைச் சுக்கு நூறாக்கிவிடும்.
நீ எத்தனை பேருக்குப் பாவ வினைகள் செய்திருக்கின்றாய்? இந்த மந்திர ஒலிகள் உன்னை
என்ன செய்யும்? என்பதை இதிலிருந்து தெரிந்து கொள் என்று யாம் சொன்னோம்.
அதிலிருந்து என்னை மன்னித்துவிடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொன்னார்.
கோகர்ணத்தில் ஒரு மலை ஒன்று உண்டு, அங்கே எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அரசர்கள்
போர் செய்யும் பொழுது அமைந்த குகைகள் உண்டு. அதற்கு வழி காட்டவேண்டும் என்று யாம் கேட்டவுடன் எம்முடன் வந்துவிட்டார். குகைகளை எல்லாம் காட்டினார்.
அங்கு கடலுக்கு மேல் ஒரு பாறை நீட்டிக் கொண்டு இருக்கும். அங்கு கடல் அலைகள்
ஜிவ்வென்று இழுத்தது. சுற்றிக் கம்பி கட்டியிருப்பார்கள்.
புவியின் ஈர்ப்புக்கு கடல் அலைகளின் காந்தம் எப்படி இருக்கின்றது? என்று குருநாதர் அங்கே உணர்த்தினார்.
அந்த இடத்திற்குப் போனவுடன் எம்மை அப்படியே இழுத்தது, பழக்கப்பட்டவர்கள் சங்கிலியை
மாட்டிக் கொண்டு அங்கு போவார்கள்.
அங்குள்ள காளி கோவிலுக்குப் பூஜை செய்யப் போவார்கள். மறுபடியும் சங்கிலியைப் பிடித்து இந்தப் பக்கம்
வந்துவிடுவார்கள். அந்தளவிற்கு அமைப்பு பண்ணி அங்கே கட்டியிருக்கின்றார்கள்.
அந்த காளி கோவிலுக்குக் கீழ் கல்லிலேயே கதவு செய்து வைத்திருக்கின்றார்கள். அங்கு
வந்தபின் கூட வந்தவரைப் போகச் சொல்லிவிட்டேன்.
கல்லை எடுத்துவிட்டு உள்ளுக்குள் சென்றால் குகை பல பிரிவுகளாகச் செல்லுகின்றது. அதற்கும் கதவு வைத்திருக்கின்றார்கள்.
அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப என்னவெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து
கொண்டோம். அதிலிருந்து கீழே வந்தவுடன் ராமர் தீர்த்தம் என்று ஒன்று இருந்தது. அங்கு அலைகள் வந்து பாய்கின்றது.
பாவத்தைப் போக்க என்று அங்கே வருகின்றார்கள். வருகின்றவர்கள் என்னென்னவெல்லாம் பாவம் செய்கின்றார்கள்? அந்த
அலையின் தொடர் என்ன செய்கின்றது? என்று உணர்வால் உணர்த்திக் கொண்டே வந்தார் குருநாதர்.
அதைக் கடந்து ஒரு பாறை இருந்தது. கடல் தண்ணீர் தூரத்தில் இருந்தது. அலைகள் அங்கு
உயரமாக வருவதைப் பார்க்கப் பார்க்க ரசிப்பாக இருந்தது. அது வந்த வேகத்தில் எம்மைத் தூக்கிக் கோவிலுக்கு முன் போட்டுவிட்டது.
கடல் அலை இந்தக் கோவில் வரை வந்தது. திருப்பிப் போகும் பொழுது சில பொருள்களை
உள்ளுக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றது. அந்த உணர்வுகளைக் காட்சியாகக் கொடுத்தார்
குருநாதர்.
அலைகளின் பெருக்கமும் உணர்வின் தன்மையையும் உன்னுடைய ரசிப்பும் எப்படி இருந்தது
என்று காட்டுகின்றார்.
1.கடல் அலைகள் எப்படி உருவாகின்றது?
2.உருவாவதற்குக் காரணம் என்ன?
3.புயல்கள் எப்படி உருவாகின்றது? என்பதனைக் காட்டுகின்றார்.
கீழே வெப்பத்தின் தணல் ஓடும் பொழுது எதிர் அலைகள் மோதும் பொழுது எப்படிச் சுழல்கள்
உருவாகின்றதோ அதே மாதிரி வெப்பங்கள் உருவானபின் அதிலிருந்து கொப்பளித்து மேலே வருகின்றது.
இது மேலே எழுந்து மோதும் பொழுது புயலாக வருகின்றது. அந்தச் சுழற்சியின் தன்மையை
அப்படியே காட்டுகின்றார்.
கடல்களில் இவ்வாறு புயல்கள் வரும் பொழுது மீன் முட்டைகள் அதனுடன் கலந்து எப்படிப் போகின்றது என்பதைக் காட்டினார்.
இவைகளில் சில தரையில் விழுந்துவிடுகின்றது. சில மேகங்களில் கலந்து மழை நேரங்களில்
மீன் தவளை இவைகளெல்லாம் எப்படி விழுகின்றது என்பதைக் காட்டினார்.
1.ஆதியில் நீரில் வாழும் உயிரினங்கள் எப்படி வளர்ந்தது? என்பதையும்
2.அந்தக் கருவின் தன்மை எப்படி தரைக்கு வந்தது? என்பதையும்
3.தரைக்கு வந்து மடிந்தபின் அது எப்படித் தரை வாழ் உயிரினமாக மாறுகின்றது? என்பதையும் காட்டினார்.
இந்த உயிரணு தாவர இனங்களை நுகர்ந்து தரை வாழ் இனங்களாக மாறுகின்றது என்று புயலைக்
காட்டி சில நிலைகளை உணர்த்தினார்.
1.அப்படியே பிரமைப் பிடித்தவன் மாதிரி நிற்கின்றேன்.
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.எங்கேயோ அழைத்துச் சென்று எதை எதையோ காட்டுகின்றார்.
பிறகுதான் வியாசகர் காட்டிய நிலைகள் கொண்டு “மச்சவதாரம்” நீரிலிருந்து மனிதன் வரை எப்படி உருவானது "ஆதி நிலை" என்பதைக் காட்டினார்.