நான் (ஞானகுரு) சித்தான பின் குருநாதர் என்னைத்
திருப்பதிக்கு போகச் சொன்னார். அங்கே மலையில் பாபநாசம் என்று இருக்கிறது. அதையும் தாண்டி
மேலே போனால் நாரதர் மன்றம் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் வழிந்து சில இடங்களுக்குச்
செல்கிறது.
அந்த நாரதர் மன்றத்தைத் தாண்டி இந்தப் பக்கம் ஒரு
காட்டுக்குள் போனவுடனே அங்கே போய் என்னைத் தியானம் (48 நாட்கள்) எடுக்கச் சொல்கிறார்
குருநாதர்.
தியானம் எடுக்கும் பொழுது அன்றைக்கு இரவில் கரடி
வருகிறது. “உ..ம்ம்ம்ம்…” என்று வருகிறது. கரடியைக் கண்டவுடனே பயம் வருகிறது.
நான் இந்தக் கரடிக்கு பயந்து என்ன செய்வது?
அப்போது அதற்காக வேண்டி எந்த உணர்வை எடுத்து என்னென்ன
செய்ய வேண்டும் என்கிற வகையில் குருநாதர் சொன்னவுடன் பேசாமல் அவர் சொன்ன முறையில் இருக்கப்படும்
போது என்னைச் சுற்றி வருகிறது.
“தன்னாலே…” அப்புறம் போய் விட்டது.
அந்த இடத்திற்குப் போன அன்றைக்கு இரவிலேயே இது நடக்கிறது.
பயமும் இதுவும் வருகிறது. அப்புறம் அது ஒதுங்கி இன்னொரு பக்கத்தில் போய் இருந்தேன்.
அங்கே வருடத்தில் பத்து மாதங்களிலேயும் கனி வர்க்கங்கள்
விளைகிறது. நவாப்பழம் மாதிரி இருக்கிறது. கொய்யாப்பழம் இருக்கிறது. ஈச்சம்பழம் இருக்கிறது.
இதே மாதிரி ஒவ்வொரு சீசனுக்கும் சாப்பாடு இல்லாமலேயே
அந்த கனிகளைச் சாப்பிட்டு அங்கே வாழலாம்.
ஏனென்றால் சாப்பாடு எதுவும் நாம் கொண்டு செல்லவில்லை.
இதைத் தான் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுக் கொள்வது. ஈச்சம்பழம் இருந்தது. அதைச்
சாப்பிட்டேன்.
திருப்பதியில் துளசி மாதிரி ஒன்று கொடுப்பார்கள்.
அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்தோம் என்றால் போதும் வயிறு நிறைந்து விடும்.
கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.
இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்கும்
போது எனக்கு முன்னாடி நடக்கிறது ஒரு நிகழ்ச்சி.
ஒரு குரங்குக் கூட்டம் இருக்கிறது ஒரு தாய்க் குரங்கு
குட்டி போட்டிருக்கிறது. வருகிற குரங்குகள் எல்லாம் அந்தக் குட்டியை முத்தமிகின்றது.
அதை எல்லாம் வந்து பார்க்கிறது.
அப்பொழுது ஒரு முரட்டுக் குரங்கு வருகிறது.
அதைக் கண்டவுடனே “உர்…ர்ர்..” என்கிறது. அந்தக்
குட்டிக்கு இந்த முரட்டுக் குரங்கு முத்தம் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.
அங்கே தேங்கி நின்று அங்கே இருந்து கொண்டே “வவ்.வா..வவ்..வா
என்கிறது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக இது போனவுடனே இங்கே இருந்தே வாயிலே முத்தம் கொடுக்கின்ற
மாதிரிச் செய்து கொஞ்சம் ஒரு அடி முன்னாடி நகர்கின்றது.
“ஓ…” என்று தாய்க் குரங்கு சப்தம் போடுகின்றது.
(இது ரௌடிக் குரங்காக இருப்பதால்)
தன் குழந்தையைக் காத்துக் கொள்ள… தாய்க் குரங்கு
“என்னென்ன வேலை செய்கிறது…?” என்று இந்த நிலைகளை எல்லாம் நான் பார்த்து கொண்டு இருக்கின்றேன்.
தன் குட்டி மேல் எவ்வளவு பாசமாக இருக்கிறது? அதோடு
சேர்ந்த மற்ற குரங்கெல்லாம் எப்படி இருக்கிறது? அந்தக் குட்டியைப் பாதுகாக்க வேண்டும்
என்று நினைக்கிறது.
அப்பொழுது என் ஞாபகம் என் வீட்டிலுள்ளோர் மீது செல்கிறது.
என்னுடைய சிறிய குழந்தை தண்டபாணியை வீட்டில் விட்டு
விட்டுத்தான் இங்கே வந்திருக்கின்றேன். இதை நினைவுகள் எனக்கு அதிகமாகிவிட்டது.
நாம் மனிதனாக இருக்கின்றோம். குழந்தை குட்டியை எல்லாம்
விட்டு விட்டு நாம் இப்படி இங்கே வந்து இருக்கிறோம்.
ஆனால் இந்தக் குரங்குக் கூட்டம்… “தன் குட்டியை..
இப்படிப் பாதுகாக்கிறதே…!” என்ற இந்த எண்ணம் வருகிறது.
குருநாதர் இந்த உணர்வுகளைத் தூண்ட வைக்கிறார்.
நான் வெளியிலே சென்றால் எந்தெந்த நிலைகள் உருவாகிறது?
இந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றுப் பார்க்கும் போது என் நினைவுகள் எங்கே செல்கிறது?
அப்பொழுது என் வீட்டு நினைவு தான் எனக்கு வருகின்றது.
“குரங்கிற்கு இருக்கக்கூடிய புத்தி கூட… நமக்கு
இல்லையே…!? வீட்டில் எல்லோரையும் விட்டு விட்டு இப்படி நாம் வந்திருக்கின்றோமே என்ற
இந்த எண்ணம் வருகிறது.
அப்போது அந்த உணர்வுகள் என்ன செய்கிறது?
நீ வந்த காரியம் என்ன…? நீ வீட்டிற்குப் போக வேண்டும்
என்றால் போ…! என்று சொல்கிறார் குருநாதர்.
காட்சி கொடுத்துச் சொல்கிறார். நீ போகிறதென்றால்
போ…! நான் சொன்னது என்ன? நான் எதைச் சொன்னேன் நீ எதைச் செய்கிறாய்…?
என்று இந்த நிலையில் கேட்கிறார்.
அப்புறம் அவருடைய உணர்வுகளைப் பார்த்த பிற்பாடு
கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் அந்த உணர்வுகளை உந்தச் செய்து
1.நீ எதை எடுக்க வேண்டும்?
2.எப்படி எப்படி இருக்க வேண்டும்?
3.உயிரணுக்களுடைய தோற்றங்கள் என்ன? என்கிற வகையில்
பல நிலைகளை உணர்த்தினார்.
இது முடிந்தவுடனே அடுத்தாற்போல ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அந்தப் போக்கிரி குரங்கு முத்தம் கொடுத்து விட்டு
வந்தது. வந்த பின்னாடி திரும்ப வரும் போது் இடைவெளியில் இ்ன்னொரு குரங்கைப் பிடித்து
“லபக்…” என்று கடித்து விட்டது.
அவ்வளவு தான்…!
எல்லாம் சேர்ந்து “திமு.. திமு.. திமு..,” என்று
துரத்துகிறது. துரத்தினால் என்னைச் சுற்றி கொண்டு வருகிறது அந்த முரட்டுக் குரங்கு.
எல்லாக் குரங்குகளும் இதை விரட்டுகின்றது.
என் மேலே தாவிவிட்டுப் போகிறது. என்னை அங்கே உட்காரவே
விடவில்லை.
ஏனென்றால் இந்த நிகழ்ச்சிகள் அது தன் வேகத்தில்
போகும் போது “மனிதன்…” என்று கூடப் பார்க்க மாட்டேன் என்கிறது. எல்லாம் சேர்ந்து அந்தப்
போக்கிரி குரங்கைத் துரத்துகின்றது.
ஏனென்றால் சின்னக் குட்டியைக் கடித்து விட்டது.
அதனால் எல்லாம் ரோசமாக விரட்டுகின்றது.
மரத்திற்கு மரம் எங்கே தாவினாலும் விடுவதில்லை.
என் பின்னால் வந்து ஒளிகின்றது. அப்புறம் இதைப் பார்த்து விட்டு வந்தேன்.
இது பாசமாகவும் இருக்கிறது அதே சமயத்தில் எதிர்க்கும்
உணர்வுகள் எப்படி இருக்கிறது? என்று இதையும் காட்டுகிறார் குருநாதர்.
அது எல்லாம் போனவுடனே ராத்திரியில் இங்கே உட்கார்ந்து
கொண்டு இருக்கும் போது தான் கீழே அரிக்கிற மாதிரி இருக்கிறது.
நான் தியானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன்.
அரிக்கிற மாதிரி இருக்கிறது. “என்ன..!” என்று பார்த்தோம் என்றால் உள்ளுக்குள் இருந்து
அந்தக் காலங்களில் பதித்து வைத்திருந்திருப்பார்கள் போலிருக்கின்றது.
பருப்பு போல் “தங்கக்காசு…!” முத்திரை போட்டுப்
பாதம் போட்டு வைத்து இருக்கிறது மண்ணுக்குள்.
இது என்னடா… தங்கக் காசு இங்கே இருக்கிறது….? இது
நம்மைச் சோதிப்பதற்காகக் குருநாதர் இந்த மாதிரி வைக்கின்றாரா…! என்று தெரியவில்லையே…!
என்று எண்ணுகின்றேன்.
எல்லாம் வீட்டு ஆசையும் குழந்தையும் காட்டி விட்டு
இப்பொழுது தங்கமும் வருகின்றது. கடைசியில்… நம்மை “எங்கே கொண்டு மாட்டிவிடுவாரோ…?”
குருநாதர் என்ற பயம் வந்து விட்டது.
அதை எடுத்து நன்றாகப் பொட்டணமாகக் கட்டி வைத்து
வைத்துக் கொண்டேன். சுமக்கின்ற அளவுக்கு இருந்தது. பூராம் சுத்தமான தங்கம்.
அப்புறம் யோசனை செய்து பார்த்தேன்.
அங்கே அந்த இடத்தில் நாற்பத்தெட்டு நாள் தியானமிருக்கச்
சொல்லியிருந்தார் குருநாதர். 48 நாள் ஆனவுடனே அந்தத் தங்கக் காசுகளை நேராகத் திருப்பதி
உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.
அது “உனக்கே ஆகட்டும்…!” என்று போட்டேன்.
ஆனால் என்னிடம் இருந்த காசு எவ்வளவு? நாலணாவோ எட்டணாவோ
தான் இருந்தது. ஒரு டீ குடிக்கும் அளவுக்கு இருந்தது.
அதை வைத்துக் கொண்டு “நீ திருப்பதி மலையை விட்டுப்
போ…” என்கிறார் குருநாதர்.
மொட்டை அடித்துக் கொண்டு மேலே இருந்து கீழே நடந்து
வருகிறேன். நடந்து வரப்போகும் போது பார்த்தோம் என்றால் சரியான வெயில். காலில் செருப்பு
இல்லை.
இடைவெளியில் ஒருவன் குடித்து விட்டு வந்தான். அவன்
என்ன செய்தான்? ஒரு மாட்டையும் ஓட்டிக் கொண்டு வருகின்றான். அதை உதைக்கின்றான். அது
கீழே விழுந்துவிட்டது.
இந்த மாட்டை எழுப்பி விடு என்கிறான். கீழே விழுகிறது.
“அய்யய்யோ… நூ பண்டிட்டு வாரானான்… இட்டிக்குப் போனாலும் நீ ரைய்ரா…” என்று தெலுங்கில்
சொல்லிக் கொண்டு அழுகிறான்.
இந்த நேரத்தில் நான் அங்கே போகிறேன்.
அட.. “ராரா… நைனா…!” என்கிறான். கொஞ்சம் தூக்கி
விடு என்கிறான்
நான் எப்படி வருகிறேன் என்றால் அங்கிருந்து வெயிலில்
நடக்கப்படும்போது முதலில் நான் ஒரு வேலை செய்து விட்டேன்.
அந்த வழியில் மாங்காய்த் தோப்பு இருக்கிறது. ஒரு
பிஞ்சு விழுந்து இருந்தது. அதை எடுத்து வந்து தண்ணீர் தாகத்திற்காக எடுத்துக் கடித்து
விட்டேன்.
அது என்ன செய்தது?
இந்தப் பால் தொண்டையில் பட்டுவிட்டது போலிருக்கின்றது.
அவ்வளவு தான். தொண்டை கர..கர.. என்று ஆகிவிட்டது.
தண்ணீர் தாகமோ அதிகமாகிறது. இந்த நேரத்தில் வந்து
கொண்டு இருக்கின்றேன். “தண்ணீருக்கு எங்கேயாவது போய்ப் பார்க்கலாமா…” என்ற எண்ணத்தில்
வந்து கொண்டிருக்கின்றேன்.
வெயில் அடிக்கிறது. தலையில் மொட்டை அடித்து இருக்கிறேன்.
அப்பறம் என்ன செய்வது? செருப்பும் போடக்கூடாது. மேலே சட்டையும் கிடையாது. ஒரு துண்டும்
வேஷ்டியும் தான்.
இப்படி நான் போகும் போது மாட்டுடன் வந்து கட்டிக்
கொண்டு அழுகிறான். “தூக்கிவிடு நைனா…” என்கிறான்.
“நீயே தூக்கிக் கொள் நான் போகிறேன்…” என்று சொன்னால்
நீ தூக்கிவிடாமல் போகக்கூடாது. குடித்துவிட்டு தண்ணி வெறியில் இப்படிப் பேசுகின்றான்.
இது என்னடா வம்பாகப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன்.
எனகு இங்கே நாக்கு வரளுகிறது என்றேன்.
நீ தூக்கிவிடு உனக்குத் தண்ணீர் கிடைக்கும் என்கிறான்.
அவன் பாட்டுக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கிறான் ஒரு அரை மணி நேரம் போராட்டம்.
அப்புறம் இந்த இடைவெளியில் இன்னொரு ஆள் வந்தான்.
டேய்…! “நீ குசும்பு தனம் தாளாது… விடுடா மனுசனை…!” என்கிறான்.
பேசாமல் ஒடுங்கி விட்டான். அப்புறம் நான் வந்துவிட்டேன்.
அந்த நேரத்தில் “அவனை நான் எதுவும் செய்ய முடியாத
நிலை…”
ஏனென்றால் இதுவெல்லாம் குருநாதர் பரிச்சாந்திர நிலையில்
என்ன செய்கிறார்…! என்று நமக்குத் தெரியாது.
அப்புறம் தான் அங்கிருந்து போனவுடனே ஒரு தோட்டத்திற்குள்
போனேன். அந்த ஆளும் தண்ணி மாஸ்டர்தான் போலிருக்கின்றது.
கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்றேன்.
“தாகு நைனா… தாகு நைனா..” என்கிறார்.
“ராரா…!” என்று கூட்டிக் கொண்டு போனார். “தாகு நைனா…!
அங்கே போனால் இந்தத் தொட்டியில் தண்ணீருக்குள் புழுக்கள் எல்லாம் ஆடிக் கொண்டு இருக்கிறது.
தாகமோ எனக்கு இங்கே தாங்க முடியவில்லை. குருநாதர்
அந்த இடத்தில் வசமாகக் கொண்டு போய் இப்படிக் காட்டுகின்றார்.
அதில் இந்த வால் மாதிரி சின்னப் புழுக்கள் உள்ளே
அரிந்து கொண்டிருக்கிறது. கிணற்றில் நீர் இல்லையா என்று கேட்டேன்.
கிணற்றில் தண்ணீர் இல்லை. ஏன் இந்த நீருக்கு என்ன?
இதைக் குடி என்கிறான்.
அப்பறம் எனக்கு வேறு வழி இல்லை. மேலே போட்டிருக்கின்ற
துண்டைப் போட்டு இதில் அள்ளி தண்ணீர் நிறையப் பிடித்தவுடனே “ஆ..” என்று அண்ணாந்து குடிக்கின்றேன்.
புழுக்கள் எல்லாம் இருக்கிறது. பார்த்தால் “கொச…கொச…”
என்று இருக்கிறது.
வேறு வழி இல்லை. புழுக்கள் உள்ளே போகாமல் அதைச்
சாப்பிட்டேன். அது சாப்பிட்டாலும் தாகம் அடங்கவில்லை.
வெயிலில் போகப் போக… போகப் போக… வறட்சி மயக்கம்
வந்து விட்டது. அது மாதிரிப் போனவுடனே அப்படியே கிறங்கிவிட்டேன். என்ன செய்வது?
ஒன்றும் புரியவில்லை. தாகத்தை அடக்க முடியவில்லை.
“புளியந் தழை” அப்படியே மேலிருந்து வந்தது. நான்
கிறங்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது புளியந் தழை கிடைக்கிறது.
அப்போது ஒரு உணர்வு வருகின்றது. அதைப் பறிக்க வேண்டும்.
சாப்பிட வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது.
எடுத்து வாயில் போட்டு மென்றேன். தண்ணீர் உமிழ்
நீர் வருகிறது. தாகம் அடங்குகிறது.
அப்பறம் நிறையப் புளியந் தழைகளை எடுத்து வைத்துக்
கொண்டு தின்று கொண்டே நடந்து வந்தேன்.
1.இந்த மாதிரியெல்லாம் உணர்வை ஊட்டுவதும் அவர் தான்.
2.இந்தச் சந்தர்ப்பத்தை ஊட்டுவதும் அவர் தான்.
ஏனென்றால் இதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும்
அனுபவரீதியில நீ் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும்? என்பதற்காக வேண்டிப் பல இன்னல்களைப்
பட வைத்தார்.
ஆனால் இதையெல்லாம் தெரிந்து தான் உங்களிடம் உபதேசமே
செய்கின்றேன்.
ஏனென்றால் குருநாதர்.. “அவர் எந்த நிமிடத்தில் எதைச்
செய்வார்…?” என்று எனக்குத் தெரியாது.
ஒரு இடத்தில் நான் போய் உட்கார்கிறேன். அந்த ரெக்கத்தில
பார்த்தோம் என்றால் விஷக் கொடுக்குத் தேள் இருக்கின்றது. அது எனக்குத் தெரியவில்லை.
நடந்து போன மயக்கத்தில் தெரியவில்லை. சாப்பாடு இல்லை.
அந்த நேரத்தில் கொடுக்குத் தேள் இருக்கிற இடத்தில் சாய்ந்து கொண்டு இருக்கிறேன்.
அது மேலே இருந்து இறங்கி வருகிறது.
பயந்து போய்த் தட்டினோம் என்றால் என்னை அது கொட்டும்.
அது கடுமையான விஷம் உள்ளது.
அப்பறம் நாம் பேசாமல் அப்படியே இருந்தேன். அது போகிற
வரையிலும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
குருநாதா…! என்னை நீ இப்படிச் சோதிக்காதே…! கொட்ட
வைக்காதே…! கொட்டினால் நான் தாங்கமாட்டேன்…! என்ற இந்த எண்ணம் தான் வருகிறது.
இதை எல்லாம் சில நேரங்களில் சில விசித்திரமான நிலைகளை
அவரே நடத்திக் காட்டுவார்.
ஒவ்வொரு நிமிடத்திலேயும்
1.இல்லாத ஒரு நிலைகளெல்லாம் நமக்கு அங்கே நடக்கிறது
என்றால்
2.அது எப்படி?
3.அவருடைய நிலை தான் என்கிற வகையில் தெரிந்து கொண்டேன்.
4.”அவர் தான்” என்று தெரிந்து கொண்ட பிற்பாடு
5.கொஞ்சம் தெம்பு வந்து… இதையெல்லாம் கண்டு பயம்
கொஞ்சம் தெளிந்து விட்டது.
6.எல்லாம் நீயே பார்த்து கொள்.. என்னமோ பார்த்துக்
கொள்…! என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகின்றது.
ஆனாலும் அந்தப் பய உணர்வு வரும் போது என்ன செய்யும்?
என்கிற வகையில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
பய உணர்வு வரப்படும் போது அது உனக்குள் என்ன செய்கிறது?
பய உணர்வு வந்தவுடனே அதைப் பார்த்து அந்தத் தேள் தன் கொடுக்கை என்ன செய்கிறது? கொட்டுவதற்காக
அப்படியே தூக்குகிறது.
நான் ஏற்கனவே தேள் எல்லாம் பிடிப்பேன்.
இந்தத் தேள் மோசமான தேள். வெள்ளையாக இருக்கிறது.
“ராஜத்தேள்” என்று சொல்வார்கள். அது கொட்டியது என்றால் பயங்கரமான விஷம்.
பயமும் இருக்கிறது. ஆனால் பயப்படும் போது என்னவாகின்றது.
அந்த உணர்வை நுகர்ந்தவுடனே அது பயந்து போய் “ஜிர்…” என்று அது விரைத்துப் பார்க்கிறது.
அப்போது அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற
உணர்வை ஊட்டுகிறார் குருநாதர்.
1.அது இறங்கிப் போகவேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும்
நீ எண்ணிக் கொண்டிரு.
2.அது போய்விடும் என்று சில உணர்வுகளைக் கொடுக்கிறார்.
நீ பயப்பட்ட உணர்வுகள் உனக்குள் எப்படி இயங்குகிறது?
அதே உணர்வுகளை நீ அதிகமாகச் சேர்த்தாய் என்றால் அதிகமான இந்த விஷத்தன்மைகளை எடுத்தால்
அது உமிழ்த்தும் உணர்வு உனக்குள் சேர்ந்தால் இது “நடுக்க வாதமாக…” நிச்சயம் வரும் என்று
சொல்கிறார்.
தேளைக் கண்டு பயப்படுபவர்களைப் பாருங்கள். இனம்
புரியாமல் கை கால் எப்படி நடுங்கிக் கொண்டு இருக்கும்.
அவர்களுக்கு ஒன்றும் இருக்காது. ஒரு சமயம் தேளைக்
கண்டு பயந்திருந்தார்கள் என்றால் அந்த நினைவுகள் அடிக்கடி வரப்போகும் போது இந்த உணர்வுகள்
எப்படி வருகிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.
இந்த இயற்கையின் சில நியதிகள் மனிதனுக்குள் எப்படி
மாற்றங்கள் உருவாக்குகிறது என்ற வகையில் தெளிவாக்கிக் கொண்டே வருகிறார்.