ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2017

மனித இனம் புனிதம் பெற்று ஒன்றுபட்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்திடச் செய்யும் சக்திகளைப் பெறுவதற்காக ஆலயங்களை நிர்மாணித்தனர் ஞானிகள் – ஞானிகள் காட்டிய வழியில் வழிபடும் இடமாக வைத்திருக்கின்றோமா…?

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே படர்ந்திருக்கும் தெய்வ சக்திகளை நாம் எவ்வாறு எடுப்பது என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் அவ்வழியில் நாம் செய்கிறோமா…!

நான் போனேன். தேங்காய் பழம் அர்ச்சனைத் தட்டு வாங்கினேன். சாமிக்கு அதைச் செய்தேன்.

ஏனென்றால் கோயிலுக்கு முன்னாடி கடை இருக்கின்றது. அவர்களுக்கு லாபம் வேண்டும். ஏனென்றால் சாமிக்குத் தானே கொடுக்கப் போகிறார்கள். அதை உற்றுப் பார்க்கப் போகிறார்களா? இல்லை.

வீட்டுக்குக் குழம்புக்காகக் காய்கறி வாங்கினால் சுண்டிப் பார்ப்பார்கள். தட்டிப் பார்ப்பார்கள். தேங்காய் நன்றாக இருக்கிறதா இல்லை அழுகலா என்று பார்ப்பார்கள்.

சாமிக்கு போகும் போது தாம்பாலத் தட்டிலே வைத்துத் தேங்காயையும் இரண்டு பழத்தையும் பூவையும் பத்தியையும் வைப்பார்கள்.

பத்தியை எப்படித் தயாரிக்கின்றார்கள்?

கரியை நசுக்கி கொஞ்சம் மெழுகைப் போட்டு அதனுடன் குச்சியிலே உருட்டியவுடன் ஒரு நல்ல வாசனை உள்ள பொருள்களுடன் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைப்பார்கள்.

இதெல்லாம் போட்ட உடனே  அந்த வாசனை அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும். எடுத்துக் காகிதத்தில் சுற்றிக் கொள்வார்கள். அதை எடுத்துக் கொஞ்சம் நுகர்ந்து பார்த்தோம் என்றால் நல்ல வாசனையாகத் தெரியும்.

கொஞ்சம் நேரம் வெளியில் வைத்தால் வாசனை எல்லாம் பறந்து போய்விடும். வெறும் கரிக்கட்டை மட்டும் தான் இருக்கும். கெமிக்கல் கலந்ததைச் சாமிக்காக என்று ஊது பத்தியைக் கொடுத்து விற்பார்கள்.

ஆனால் எந்தக் கோயிலிலும் ஊது பத்தி வைப்பது இல்லை.

சாமிக்கு நீ நல்ல பத்தியைக் கொடு என்று கேட்டால் சாமி பேரைச் சொல்லித் தப்பு பண்ணி இப்படிச் சம்பாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

இதை போன்ற நிலைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டோம்.

1.ஆலயத்திற்கு வருவோர் அனவரும் புனிதம் பெற வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை.
2.புனிதம் பெறுவதற்குண்டான அருள் ஞானத்தை அவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை
3.அதற்குண்டான அருள் சேவை நாம் செய்ய வேண்டும் என்ற நிலைகள் எதுவும் இல்லை.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற நிலையை மறந்த நிலலையில் தான் உள்ளார்கள்.

உயர்ந்த குணங்கள் கொண்டு
1.பொருளை வாங்கிச் செல்வோர் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தை கூட்டி
2.பொருளை வியாபாரம் பேசி அனுப்பப்படும் பொழுது
3.அவர்களும் நலம் பெறுகின்றார்கள்.
4.நலம் பெறும் சக்தியால் அவர்கள் மகிழ்ந்திடும் நிலை வரும் பொழுது நாமும் மகிழ்ச்சி அடைவோம்.

நம்மால் மற்றவர் மகிழ்வதும் அதைக் கண்டு நாம் மகிழும் நிலைக்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்.இப்போது நாம் எதைச் சேர்க்கிறோம்?

முருகன் கோயிலுக்கோ மற்ற கோயிலுக்கோ போகும் போது விலை பேசி இவர்கள் செய்யும் போது அங்கே ஏமாற்றம் அடைகின்றார்கள்.

பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்டில் கடைகளை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. நாங்கள் இதில் தானே பணத்தை எடுக்க வேண்டும்.

கோவிலுக்கு வருகிறவர்களிடம் தான் நாங்கள் வசூல் பண்ண வேண்டும். ஆக கோவிலுக்கு வந்தவர்களிடம் ஏமாற்றுகிறார்கள். இப்படித்தான் நமது ஆலயங்களில் உள்ள திருப்பணிகள் போய் விட்டது.

ஆலயங்களில் பத்தியோ தேங்காய் பழமோ மலர்களோ அங்கு தேவையில்லை. ஆலயத் திருப்பணியாளர்கள் அங்கு அதையெல்லாம் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதைச் செய்யட்டும்.

1.நீங்கள் எந்த ஆலயத்திற்குப் போனாலும்
2.திருப்பணிக்கு உதவும் நிலையில்
3.இந்தக் காசை உண்டியலில் வேண்டுமானால் போடுங்கள்.
4.ஏனென்றால் திருப்பணியாளர்கள் அதைச் செய்வார்கள்.

நீங்கள் பழத்தை வாங்கி சாமிக்கு அபிஷேகம் கொடுத்து அதைக் கண்டு மகிழ்வது அல்ல.

நீங்கள் எப்படித் தேங்காயை இரண்டாக உடைக்கின்றீர்களோ… அதைப் போல
1.உங்களுக்குள் இருக்கும் தீமையைப் பிளந்துவிட்டு
2.அருள் ஞானியின்  உணர்வுகளை எண்ணி எடுக்க வேண்டும்
3.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தெய்வத்திற்குப் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இதைப் போன்ற அபிஷேகக் காலத்தில் நீங்கள் சாமியைச் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் எப்படி எண்ண வேண்டும்?

1.இந்த பாலைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும்.
2.தேனைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்.
3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும்

கனி அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் கனியைப் போன்று சொல்லிலே இனிமையும் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும் என்று இதை நுகர்ந்து சுவாசிக்க வேண்டும்.

அங்கே அபிஷேகம் தெய்வத்திற்கு நடக்கும் பொழுது அதை எண்ணி இப்படி நுகர்ந்தீர்கள் என்றால் உங்கள் (புருவ மத்தியிலிருக்கும்) உயிரான ஈசனுக்கு அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் அபிஷேகம் ஆகின்றது.

அப்பொழுது
1.ஈசனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் உமிழ்நீராகி உடலுக்குள் செல்லும் பொழுது
3.உடலான சிவனுக்கு அமுதாகின்றது.
4.உங்கள் உள்ளமும் உடலும் களிப்படைகின்றது.

அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்.

உலகில் எங்கேயும் இல்லாத தத்துவங்கள் நம் நாட்டில் தோன்றிய  “அகஸ்தியன் கொடுத்த… சைவ சித்தாந்தத்தில் உண்டு”. ஆலயங்களுக்குச் சென்றால் இனியாவது அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி நடந்து வழிபடுவோம்.