ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2017

நல்லது செய்பவர்களுக்கு நிறையத் தொல்லைகள் வருகின்றது ஆகவே அந்த "நல்லவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்..." என்றார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

நீங்கள் நல்லதைச் செய்து கொண்டே வந்தால் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

1954ல் ஒரு சமயம் நான் (வேணுகோபால் சுவாமிகள்) பழனியில் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் போது செல்லையா என்று ஒருவர் வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அவர் தரித்திரமாக அதாவது ஒன்றும் இல்லாத நிலையில் வந்தார்.

தரித்திரமான நிலையில் வரப்படும் போது நான் என்ன செய்தேன்?

அவரை நன் வேலை பார்க்கும் மில்லிற்கு கூட்டிக் கொண்டு வேலை பழகிக் கொடுத்தேன். அந்த மில்லில் எனக்கு உதவியாக வேலைக்கும் சேர்த்துக் கொண்டேன்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவர் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர் அவர் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மில்லை விலைக்கு வாங்கினார்.

மில்லை வாங்கிய பின்னர் அவருடன் சேர்ந்த ஒரு குரூப் நெய்க்காரப்பட்டியிலிருந்து அங்கே வேலைக்குச் சேர்ந்தது.

புதிதாக ஆள்கள் எல்லாம் போட்டு வேலை செய்யும் போது நான் வேலை பழகிக் கொடுத்து வேலைக்குச் சேர்த்தவன் உயர்ந்த பிற்பாடு என்ன செய்தான்?

இந்த மில்லை கிருஷ்ணமூர்த்தி வாங்கியவுடனே அவர்கள் ஆட்களாகக் கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்தவர்களுக்குள் ஒரு மேஸ்திரியும் வந்தார்.

நான் ஒரு மேஸ்திரி. அவர் ஒரு மேஸ்திரி.

நான் எல்லாரையும் தட்டிக் கொடுத்து அனுசரித்து வேலை வாங்கியதால் நான் வேலை பார்க்கும் ஷிப்டில் “உற்பத்தி…” அதிகமானது.

அந்த மேஸ்திரி அடுத்த ஷிப்டில் இருக்கிறார். நான் மற்றொரு ஷிப்டில் இருக்கின்றேன்.

புதிதாக வந்த மேஸ்திரியோ “தான் முதலாளி ஆள்…” என்று வேலை பார்ப்பவர்களை மிரட்டிக் கொண்டே இருந்தார். அதனால் அங்கே புரடக்ஸன் ஆகவில்லை.

நான் மற்றவர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தை ஊட்டி வேலை செய்வதால் என் ஷிப்டில் புரடக்ஸன் நன்றாக ஆகின்றது.

தினமும் உற்பத்தி சம்பந்தமான ரிபோர்ட் (PRODUCTION REPORT) போகும் போது மேலே விவரம் கேட்கிறார்கள்.

என் ஷிப்டில் உற்பத்தி அதிகமாகின்றது. அவர்கள் கூட்டிக் கொண்டு வந்த ஆட்கள் வேலை செய்யும் ஷிப்டில் புரடக்ஸன் சரியாக வரவில்லயே... “ஏன்...?” என்று கேட்கிறார்கள்.

இதற்காக வேண்டி என்னைக் குற்றவாளியாக ஆக்குவதற்காக அந்த மேஸ்திரி முயற்சிக்கின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது யாரை?

நான் முதலாளியிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தேன் அல்லவா. அந்தச் செல்லையாவைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றார்கள்.

புதிய மேஸ்திரி - நான் சொல்வது போலச் செய்யவேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் சொல்வது போலச் செய்கின்றேன் என்று செல்லையாவும் சொல்லிவிட்டான்.

“என்னைக் குற்றவாளியாக்குவதற்காக” - உற்பத்தியைக் கூடக் காண்பிப்பதற்காக வேண்டி ஏற்கனவே உற்பத்தியான நூல்களை மீண்டும் மீண்டும் எடை போடுகின்றார்கள்.

மில்லில் மிஷின் ஓடுகின்ற இடத்தில் அண்டர் கிரவுண்ட்க்குள் (UNDER GROUND) வயர் போகும். அங்கே கொண்டு இந்த நூல்களைக்  கூடையில் போட்டு திட்டமிட்டு மறைத்து வைத்து விட்டார்கள்.

மறைத்து வைத்ததும் என்ன ஆனது?

இது எனக்குத் தெரியாது. நான் தான் ஷிப்ட் முடிந்து போய் விடுகிறேன் அல்லவா...!

நான் அதை எடுத்து இவ்வாறு ஒளித்து வைக்கச் சொன்னதாகவும் அதற்குச் சாட்சிக்காக செல்லையாவை வைத்துக் காட்டலாம் என்று அவ்வாறு முடிவு செய்தார்கள்.

எதற்காக எடுத்து வைத்திருக்கிறார்கள்? இரண்டாவது முறையாக நாளைக்கு எடை போட்டுக் “கூடுதலாகக் காட்டுவதற்காக… நான் வைத்துள்ளேன்” என்று இப்படி ஜோடிக்கின்றார்கள்.

இதற்கு மாஸ்டர்கள் எல்லாம் சாட்சி. அடுத்த ஷிப்டில் ஆள்கள் வந்தவுடனே அவர்களிடம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள். ஆட்களிடம் சொன்னவுடனே இதைப் பார்த்துக் கொண்டார்கள்.

அடுத்தாற்போல என்ன செய்கிறார்கள்? நான் ஷிப்ட் முடிந்து போனதும் ஓடுகின்ற மிஷினில் உள்ள பினியன் (பல் சக்கரம்) இருக்கிறது. ஓடுகின்ற அதன் (LOCK) லாக்கை “வேண்டும் என்றே..” எடுத்து விடுகின்றார்கள்.

அதை எடுத்து விட்டால் சக்கரம் இறங்கிப் போகும். ஓடாது. இந்த மாதிரி 2-3 மிஷினில் செய்து வைத்து விட்டார்கள்.

அவ்வாறு செய்து அப்பொழுது நான் உற்பத்தியைக் குறைத்துவிட்டேன் என்று காண்பிக்கின்றார்கள்.

பல் சக்கரம் சரியாக இல்லை என்றால் நூல் வெளியில் வந்து தூசியாகப் பறக்கும். இப்படிச் செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார் (நான் செய்ததாக). அதனால் “நாங்கள் எப்படிப் புரடக்சன் எடுப்பது…?” என்று என்னைப் பற்றித் தவறாகச் சொல்கிறார்கள்.

இதெல்லாம் நான் தான் செய்யச் சொன்னதாகவும் நான் சொன்னதால் அவ்வாறு செய்ததாகவும் அந்தச் செல்லையாவே சொல்கிறான்.
.
நான் தரித்திர நிலையில் வந்தவரை வேலைக்குச் சேர்த்து யாரைப் காப்பாற்ற நினைத்தேனோ அவர் (செல்லையா) இப்படிச் சொல்கிறார், இந்த மாதிரி எல்லாம் பல் சக்கரத்தை என்னை வைக்கச் சொல்லிச் சொன்னார் என்று.

ஏனென்றால் முதலாளி மாறிவிட்டார்.

அவரிடம் சலுகை பெறுவதற்காக அந்த மேஸ்திரி செல்லையாவைக் கைக்குள் போட்டு அவனுக்கும் கொஞ்சம் காசைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்கின்றார்.

நல்ல மனம் படைத்தவர்களுடைய நிலைகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அனுபவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி மாதா மாதம் செய்து “பொய்யான ரிக்கார்ட்” உருவாக்குகின்றார்கள்.

இப்போது அவரைக் (என்னை) கேட்க வேண்டாம். அவர் (நான்) செய்கின்ற தவறை எல்லாம் பாருங்கள். எனக்குப் (புதிய மேஸ்திரிக்கு) புரடக்ஸன் ஏன் சரியாக ஆகவில்லை என்று அப்புறம் நீங்கள் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் என்று முதலாளியிடம் சொல்கிறார்.

ஒவ்வொரு நாளும் நடந்ததை என்னைப் பற்றிய ரிப்போட் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது உற்பத்தியைக் கூடுதலாகக் காட்டினார். பல் சக்கரத்தை இறக்கிவிட்டார். அதை உடைத்தார். இதை உடைத்தார் என்று இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாகச் செய்தார் என்று ரிப்போர்ட் எழுதி வைத்துள்ளார்கள்.

என்னிடம் விசுவாசமாக வேலை பார்த்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள் என்னிடம் வந்து உண்மைகளைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிச் செல்லையா என்பவன் உங்களைப் பற்றித் தவறாகப் பல ரிப்போர்ட் கொடுக்கின்றான் என்று என்னிடம் சொல்கிறார்கள்.

செல்லையா ரிப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னவுடன் "சரி… அவரவர் செயலை அவரவர் எடுத்துக் கொள்ளட்டும்…! போகட்டும்…!” என்று நான் சொல்லி விட்டு விட்டேன்.

ஏனென்றால் அப்போது எனக்கு இரண்டு ஷிப்டிலும் நல்ல மரியாதை உண்டு.

கஷ்டப்படுகிறவர்களுக்கு வெளியில் ரேஷன் அரிசி எல்லாம் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் முக்கால் ரூபாய் தான் சம்பளம்.

செல்லையா துண்டு கூட இல்லாமல் வந்தவன். அவனுக்கு நான் வேலையே வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவன் இப்படிச் செய்கிறான்.

அப்புறம் என்ன ஆனது?

முதலாளி கூப்பிட்டுக் கேட்கிறார். அவருக்கு என் மேல் நம்பிக்கை உண்டு.

இருந்தாலும் இதெல்லாம் உன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள். என்று கேட்கிறார். ஏனப்பா இந்த மாதிரி எல்லாம் செய்கிறயாமே...?

என்னங்க…? என்று கேட்டேன்.

செல்லையாவைக் கூப்பிடுகிறார்கள்.

அவன் என்னிடம் கேட்கிறான். ஏனுங்க...! அண்ணா...! நான் உடலில் கட்டிக் கொள்வதற்கு துண்டு இல்லாமல் இங்கே வந்தேன் அல்லவா?

ஆமாம்.

அப்பொழுது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி கொடுத்தீர்கள். உங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்து விட்டு பனியனுடன் வீட்டுக்குப் போனீர்கள் அல்லவா?

ஆமாம்.

எனக்குச் சாப்பாடு இல்லை என்கிற பொழுது உங்கள் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு கொடுத்தீர்கள் அல்லவா.

ஆமாம். அதற்கெல்லாம் இப்பொழுது என்னப்பா...? என்றேன் நான்.

இப்படி எல்லாம் நீங்கள் பல வகையிலு உதவி செய்திருக்கும் போது “நான் உங்களுக்குத் துரோகம் செய்வேனா…?” என்று என்னிடம் கேட்கிறான்.

இது நடந்த நிகழ்ச்சி.

1.இந்த உதவி செய்ததே…
2.எனக்கு எப்படி எதிரியாக மாறுகிறது… என்று
3.இந்த உலகம் எப்படி என்று பாருங்கள்.

உங்களுக்கு என் (செல்லையா) மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா. நான் எப்படிச் செய்வேன் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா...! எனக்கு இத்தனை உதவி செய்தீர்கள்.

1.நீங்கள் தானே இந்தப் பல் சக்கரத்தில் ஆணியை வைக்கச் சொன்னது.
2.நீங்கள் தான இந்த நூலை அங்கே கொண்டு ஒளித்து வைக்கச்  சொன்னது என்று கூசாமல் சொல்கிறான்.

எப்படி இருக்கும்...? எனக்கு...! எப்படி இருக்கும் உங்களுக்கு...?

இதை எல்லாம் கேட்டவுடன் மற்ற தொழிலாளிகள் பொரிகிறார்கள். இவனைல் (செல்லையாவை) கொன்று விட வேண்டும் என்ற உணர்வு வருகிறது.

என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை அனுபவித்துச் சொல்கிறேன்.

அப்புறம் மேனேஜரிடம் சொன்னேன்.

நான் அவருக்கு நன்மை தான் செய்திருக்கிறேனே தவிர எந்தத் தீமையும் செய்யவில்லை. மில்லுக்கு நான் நன்மை தான் செய்திருக்கின்றேனே தவிர தீமை செய்யவில்லை.

எல்லாரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று தான் உழைத்தேன். இப்படித் திருட்டுத்தனமாக வாழ வேண்டும் என்று இல்லை.

எனக்கு எல்லாத் தொழிலும் தெரியும். நான் வெளியிலே போனால் பிழைத்துக் கொள்வேன். இந்தக் குற்றத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் வேலையை விட்டே போய்விடுகிறேன் என்றேன். வேலையை விட்டு வந்து விட்டேன்.

இனி இவனை எல்லாம் விட்டோமென்றால் சரி கிடையாது. செல்லையா தவறு செய்யவில்லை. அவன் அந்த மேஸ்திரி தான் எல்லாத் தவறையும் செய்திருக்கின்றான். அந்த மேஸ்திரியைத் தீர்த்துக் கட்டினால் சரியாகப் போகும் என்று சொல்லி அந்த வெறுப்பிலேயே போய்க் கொண்டிருந்தேன்.

பழநி மலையில் போய் பின்னாடி உட்கார்ந்துவிட்டேன். அப்போது முருகன் மேல் பக்தி. முருகனிடம் சொல்வதற்குப் போய்விட்டேன். அங்கே இரவு முழுவதும் இருந்தேன்.

பின்னாடி அழகு நாச்சியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அடுத்தாற்போல துர்க்கை. வனதுர்க்கைக் கோயில் இருக்கிறது.

வன துர்க்கை..., “அவன் எல்லாம் இப்படிச் செய்தானே… நீ ஏன் என்று கேட்க மாட்டாயா…” என்று சொல்லிவிட்டுச் சுற்றிப் பின்னர் ரணகாளி கோவிலுக்குப் போனேன்.

“நான் தவறு எதுவும் செய்யவில்லையே...! அவன் இந்த மாதிரிச் செய்கிறானே என்று சொல்லிவிட்டு நீயே கேள்....!” என்று அதைத்தான் சொல்லிப் போய்க் கொண்டு இருக்கிறேன்.

இதை நினைக்க நினைக்க இந்த வனதுர்க்கை ரணகாளி மகேஸ்வரி எல்லாம் பார்த்த பின் “அவனைக் கொல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சி தான் எனக்குள் வருகின்றது அடக்குவதற்க்கு வழி இல்லை.

அவனைக் கொன்று போட்டுவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

வீட்டுக்கு வந்தேன்.

நான் ஏற்கனவே சுதந்திரப் போராட்ட காலங்களில் தற்காப்புக்காக வேண்டி மிலிட்டரிக்கார் கொடுத்த ஒரு பிரெஞ்சு துப்பாக்கி அதை மறைத்து வைத்திருந்தேன். ஒரே சமயத்தில் அதில் பன்னிரண்டு குண்டுகள் பாயும்.

சுதந்திரப் போராட்ட காலங்களில் அதைப் பயன்படுத்தவில்லை. ஏதாவது ஆபத்து வந்தால் தப்பித்துக் கொள்வதற்காக மட்டும் வைத்திருந்தேன். அது மட்டும் கடைசி வரை ஒளித்து வைத்துக் கொண்டேன்.

சுதந்திரத்திற்காக காந்திஜி வழியில் போய் அடி வாங்கினேனே தவிர யாரையும் நான் கொலை செய்யவில்லை.

ஏனென்றால் என்னுடைய சரித்திரத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் சிறிது நன்றாக இருக்கும். அதற்காகச் சொல்கிறேன்.

வீட்டுக்கு வந்து பிஸ்டலை எடுத்துக் கொண்டேன். முக்கால் ரூபாய் இருந்தது. முக்கால் ரூபாயையும் என் இரண்டு பையன்களிடம் கொடுத்தேன்.

இரவு பன்னிரண்டு மணிக்கு நான் என்ன செய்தேன்?

நடு இரவில் அந்தச் செல்லையா என்கிறவனைக் கட்டி குழி தோண்டிப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதைப் பார்த்ததும் அடப்பாவிகளா...! அவன் தவறு செய்யவில்லை. அந்த மேஸ்திரி தானே தவறு செய்தான் என்று எனக்கு “இன்னும் கொஞ்சம் வீரியம்…” ஜாஸ்தியாகி விட்டது.

அவன் சோற்றுக்கு வந்தவன். கஷ்டப்படுபவன். பிழைப்புக்கு வழி இல்லாமல் அவன் கூடச் சேர்ந்து கொண்டான். இதை விட்டுவிட்டால் மறுபடியும் தரித்திரம் ஆகிவிடுமோ என்ற நிலையில் அறியாத நிலையில் அவனுடைய உணர்வு இப்படி இயக்குகின்றது.

நேராக வந்து வாழைத் தோப்புக்குள் கட்டி வைத்த செல்லையாவைக் கழற்றி விட்டேன்.

“தப்பித்துப் போயிருப்பா…” என்று சொல்லிவிட்டேன். எல்லாரும் சேர்ந்து குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இவரைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அவிழ்த்து விட்டு என்கூட வா என்று சொல்லிப் போகச் சொல்லிவிட்டேன். காந்திய வழியில் அவரைத் தப்பித்துப் போகச் சொல்லி விட்டேன்.

அவனைக் கழற்றி விட்டுவிட்டு நான் வேறு பக்கம் போய்விட்டேன். போய்விட்டு பின்னர் காலையில் ஆறு மணி ஏழு மணி ஷிப்டிற்கு அந்த மேஸ்திரி வருவான் அல்லவா...!

6.30 மணிக்கு அந்த நேரத்தில் அவரை கேட் முன்னாடி வைத்துச் சுட்டு விட வேண்டும் என்று நினைத்துப் போகின்றேன். இந்தத் திட்டத்தில் போகின்றேன். துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டு போகின்றேன்.

செல்லையா தவறு செய்யவில்லை. அவன் தவறு செய்கிறான். ஆனால் அவர் இன்னும் எத்தனை பேருக்கு இந்தக் கெடுதல் செய்வாரோ என்ற எண்ணம் ஆத்திரமாகிவிட்டது,

செல்லையா ஏமாந்திருக்கிறார். அவர் வழியில் இவரைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தின் மீது போனேன்.

என் பிள்ளைகளுக்குக் காசு கொடுத்திருந்தேன் அல்லவா...! இந்த உணர்வு என்ன செய்கிறது?
1.“நைனா... நைனா...” என்று என் கையைப் பிடித்து இழுக்கின்ற மாதிரி இருக்கின்றது.
2.அது போல ஒரு பிரமை.
3.அப்புறம் அந்தக் கற்பனைகள் எட்டுகின்றன.

நாம் இப்படிச் செய்தால் அந்தக் குழந்தைகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையாகி விட்டால் நாம் என்ன செய்வது…? என்ற உணர்வுகள் திரும்புகின்றன.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தில் இருந்து நேராக ஆற்றிலே போய்க் கொண்டே இருக்கின்றேன். அப்போது இரயில் எஞ்சின் (புகை வண்டி) ஒன்று பழனி இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அதில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 
நல்ல தண்ணீர் என்று அங்கே இரயில் நின்று கொண்டு இருந்தது. அந்த இடத்தில் பிஸ்டலைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.

அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆனால் நாம் தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணினேன். அதனால் பிஸ்டலை அங்கே போட்டு விட்டேன்.

அதை போட்டுவிட்டு இரயிலில் ஏறி “ஜம்..” என்று உட்கார்ந்தேன். டிக்கெட்டும் எடுக்கவில்லை.

என்னுடன் பூலாங்கிணறு பிரீமியர் மில்லில் வேலை பார்த்தவர்கள் நிறையப் பேர் உண்டு.

ஏற்கெனவே ஒரு சமயம் மதுரையில் இருக்கும் பொழுது அங்கே ஒருவரை சில ஆபத்தில் இருந்து காப்பாற்றினேன். அவர் பிரிமியர் மில்லில் இருக்கிறார்.

அப்படி என்னிடம் வேலை செய்ததில் கொஞ்சப் பேர் இருந்ததனால் அங்கு போய் இறங்கிவிட்டேன். என் கையில் காசு இல்லை. இறங்கினால் அங்கு டிக்கெட் பரிசோதனைக்கு ஒருவரும் இல்லை. நான் பாட்டுக்கு இறங்கிப் போய்விட்டேன்.

அது லோக்கல் வண்டி. பூலாங்கிணறு வந்தவுடன் இறங்கிவிட்டேன்.

இறங்கி அங்கே போனவுடன் என்னைப் பார்த்தவுடன் எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்பு பலமாக இருந்தது, லட்டு ஜிலேபி என்று என்னென்னமோ பலகாரமெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆனால் என் நிலையோ மோசமாக இருக்கிறது.

இந்த மாதிரி நிலையில் நான் அங்கு போனால் எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஆனால் என் மனதிற்குள் இப்படி இருக்கிறது.

அவர்களிடம் பொய் சொன்னேன்.

பழனியிலிருந்து புறப்பட்டு வந்தேன். உடுமலைப் பேட்டை வருவதற்கு முன்னாடி கையில் இருந்த காசை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடம் இப்படிப் பொய் கூறினேன்.

இப்பொழுது கையில் காசு இல்லை. மில்லில் இருந்து சாமான்கள் வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கிக் கொண்டு போகவில்லை என்றால் நாளைக்கு என்னைக் குற்றவாளியாக ஆக்குவார்கள் என்று சொன்னேன்.

அதனால் ஒரு ஐநூறு ரூபாய் வேண்டும் என்றேன்.

ஐநூறு ரூபாய் என்ன...? உனக்கு ஆயிரம் ரூபாய் கூடக் கொடுக்கிறேன் என்றார்கள். அப்புறம் எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் அப்படியே புறப்பட்டுப் போய்விட்டேன். கோயம்புத்தூருக்கு வந்துவிட்டேன்.

கோயம்புத்தூர் போனால் அடுத்து எங்கே போகின்றேன் எனக்கே தெரியவில்லை.

இங்கு சிறிய ரயில். அங்கே பெரிய ரயிலாக இருக்கிறது.

பெங்களூர் போவதற்குத் தெரியாது என்று அங்கு மேஸ்திரி ஒருவர் இருந்தார். அவர் மருமகனிடம் சொல்லி "டிக்கெட் எடுக்க வேண்டும்" என்றேன்.

எங்கே போகவேண்டும்?

அகமதாபாத் போகவேண்டும். சாமான்கள் வாங்க இங்கே கம்பெனியில் அனுப்பினார்கள் என்று அப்படிச் சொன்னேன்.

அவர் வந்து விவரம் கேட்டு என் கையில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்.

கொடுத்தவுடனே முதலில் பெங்களூர் வண்டியில் ஏறி என் தம்பியை (ராதா) இருக்கின்றாரா என்று பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து பெங்களூரில் இறங்கித் தம்பியைப் பார்க்கச் சென்றேன்.

என் தம்பி அங்கே இல்லை. ஊட்டி போனபோது வண்டி ஆக்ஸிடண்ட் ஆகி உங்கள் தம்பி தொங்கிக் கொண்டு வந்தார். மிலிட்டரியில் எந்த ரகசியமும் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். தம்பி இங்கே இல்லை என்றார்கள்.

அப்போது கையில் பணம் இருக்கிறது. எனக்கு வெளியில் போய் ரூம் எடுத்துப் பழக்கம் இல்லை.

மிலிட்டரியில் நமக்குத் தெரிந்தவர்கள் சிறிது பேர் இருக்கிறார்கள். இந்த கேம்ப்ல இருக்கார். அந்த கேம்ப்ல இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.

கையில் காசு இருக்கிறது. அதனால் ஹோட்டலில் சாப்பிடுவது மற்றும் ரூம் எடுக்கத் தெரியவில்லை. அதனால் திண்ணையில் படுத்து கொள்கிறேன்.

மேலே போர்த்தியுள்ள பெட்சீட்கூட நனைந்து போய்விடுகிறது பெங்களூரில் விறு விறு என்று ஆகின்றது.

அப்புறம் தம்பி வந்தார். வந்தவுடன் கூட்டிக்கொண்டு போகிறார். அப்புறம் கூப்பிட்டுப் போய் என் அண்ணன் இவர் தான் என்று சொன்னார்.

இவர் எப்படி மில்ட்டரிக்கு போனார்….! என்றால் என் அம்மா பெட்டியில் உள்ள செயின் ரூபாய் எல்லாவற்றையும் எடுத்து விற்றுவிட்டு மிலிட்டரிக்குப் போய்விட்டார்.

“வரட்டும் அவனை உதைக்கிறேன்..” என்று அப்பா சொல்கிறார்கள். அப்பொழுது அவன் சிறிய பையன்.

அப்பா என்ன செய்கிறார். வந்தால் அவனைக் கொன்று விடுவேன். ஒரு தடவை விடுமுறை அன்று வந்தபோது கூட வெளியில் தான் நிற்க வைத்தார். அவ்வாறே அனுப்பினார்.

பணத்தை எடுத்துச் சென்றதால் அப்பா என்றால் பயம்.

அப்போது நான் மெலிந்திருக்கின்றேன் என்று ஒரு பத்து நாள் மிலிட்டரியில கொஞ்சம் சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னைத் தேற்றிவிட்டார்

அப்புறம் நான் தம்பியிடம் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன், டெக்ஸ்டைல் கம்பெனிக்கு போகிறேன் என்று சொல்லி அவரிடம் கொஞ்சம் 100 – 200 ரூபாய் வாங்கி்க் கொண்டு கிளம்பினேன்.

அடுத்து இன்னொன்று நடந்தது.

அதாவது பம்பாய்க்குப் போகவேண்டும் என்றால் பூனாவில் இருந்து இரயில் மாறிப் போக வேண்டும். மாறிப் போகும்போது அங்கே ஒருவன் நான் டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று அரை குறையாகத் தமிழ் பேசினான்.

“சரி…” என்று சொல்லிவிட்டு டிக்கெட் எடுத்து வருவார் என்று உட்கார்ந்திருக்கின்றேன். அந்தக் காசை வாங்கி அவர் எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்.

“இவனை என்னடா செய்வது...?” என்று அந்த வண்டியிலே டிக்கெட் இல்லாமலே ஏறிவிட்டேன். வண்டி போகிறது என்று சொல்லிவிட்டு அங்கே போய் அகமதாபாத் போய் இறங்கினேன். அவரும் இறங்கினார்.

பின்னாடியே போனேன். எங்கே போகிறார்? என்று இடைவெளியில் எதுவும் செய்யக்கூடாது என்று பேசாமல் போகிறேன்.

அப்போது என் சித்தப்பா ஒருவர் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறார். அவரைப் பார்க்கலாம் என்று போகிறேன்.

அப்போது இங்கே போனவுடனே இவர் போனால் கூடவே போகிறேன்.

அப்போது எனக்கு கொஞ்சம் நரம்பு அடி எல்லாம் தெரியும். என்னை ஏமாற்றியவனை அடித்து விட்டேன். என்னை ஏமாற்றிவிட்டாயே என்று சொல்லி அடித்தேன்.

பெண்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். யார் என்ன என்று கேட்டால் எங்களுக்கு என்ன தெரியும்..? என்று சொல்கிறார்கள்.

அப்புறம் போனால் அங்குள்ள ஒருவர் நீங்கள் யார்? யாரைப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்த மாதிரி மதுரையிலிருந்த ஒருவர் அம்பிகா மில்லில் வேலை செய்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்றேன்.

ஓகோ மதுரை ஆளா?

அம்பிகா மில்லில் வேலை பார்க்கும் அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார். அவரை வைத்து மில்லில் நான் சொன்ன கம்பெனிக்குப் போய் வேலை பார்த்தேன்.

அப்போது வேலை கிடைத்தவுடனே அங்கேயும் போய்ச் சைக்கிள் கடை வைத்தேன். சைக்கிள் கடை வைத்துச் சம்பாதித்துக் காந்திஜி ஆசிரமத்திற்குப் போய் ஞாயிற்றுக் கிழமை அங்கே போய் உட்கார்ந்து விடுவேன்.

அங்கே போனால் அமைதியாக இருக்கிறது.

காந்திஜி ஆசிரமத்தில் சபர்மதி ஆசிரமத்தில் போய் உட்கார்ந்துவிட்டு அப்படியே வருவது. மறுபடியும் வேலை செய்வது. அந்த ஆசிரமத்திற்குப் பணம் கொஞ்சம் கொடுக்கிறது. இப்படியே இருந்து கொண்டிருந்தேன்.

“ஐயா… பசிக்கிறது…!” என்று வருவார்கள்.

அப்போது அவர்களுக்குச் சில வேலை எல்லாம் பார்த்து ஒரு இடத்தில் மூன்றாவது ஷிப்டுக்கு ஆள்களைச் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் சம்பாதித்து அங்கே பாபுசிங் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து விடுவேன்.

வருகின்றவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடுவது. உதவிகள் செய்வது. 1954ல் ரேஷன் கடைகளும் மளிகைச் சாமான்களும் விலை ஏறி ரொம்பத் தரித்திரமாக இருந்தது. அங்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

ஏனென்றால் நான் பல அவஸ்தைகள் பட்டவன்.
1.ஒவ்வொரு மக்களும் எந்தெந்த வகையில் சந்தர்ப்பத்தில் இயங்குகிறார்கள்?
2.அவர்களுக்கெல்லாம் ஒரு ஞானம் கிடைக்கவேண்டும்.
3.வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்.
4.இதற்காக வேண்டித்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நான் சொல்கி்றேன்.
5.அனுபவித்துச் சொல்கிறேன்.

மூன்றாவது சிப்ட் வேலைக்கு வருகிறவர்களுக்கெல்லாம் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறது. எங்கே இருந்தாலும் போய் வேலை வாங்கிக் கொடுக்கின்றது. இந்த மாதிரி எல்லாம் செய்தேன்.

அந்தப் பாபுசிங் என்கிறவர் கொஞ்சம் போக்கிரியும் கூட.

நான் உதவி செய்வதைப் பார்த்து என் மேல் இரக்கப்பட்டுச் உனக்கு வேலை தெரியும் என்றால் சைக்கிள் கடை வைத்துக் கொடுக்கிறேன் என்றார்.

மில்லில் வேலையும் செய்துவிட்டு சைக்கிள் கடையும் வைத்துக் கொண்டதால் கொஞ்சம் காசு நிறைய வந்தது.

அந்த இடத்தில் சைக்கிளுக்குக் காற்று அடிக்க வேண்டும் என்றால் ஒரு அனா.

நான் காசே வாங்காமல் காற்று அடிக்கிறேன் என்றவுடன் கூட்டம் கூடியது. அங்கு பஞ்சர் பார்த்த வகையில் அதிகமான பணம் வருகின்றது.

பிரியம் இருந்தால் காசு போடுங்கள் என்று சொன்னவுடன் ஒரு அனா போடுவதற்குப் பதிலாக நாலனா போட்டுவிட்டுப் போகின்றார்கள்.

சாயங்காலம் பார்த்தால் 200, 300 ரூபாய் இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு மீதியைப் பாபுசிங்கிடம் கொடுத்துவிடுவது.

சைக்கிள் வேலை தெரிந்தது என்பதால் ஸ்பிரே பெயிண்ட் அந்தப்  பெயிண்ட் எல்லாம் அடித்தவுடன் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சைக்கிள் கம்பெனிக்காரர் என்ன செய்துவிட்டார்.

நன்றாக வியாபாரம் ஆகிறதென்று சைக்கிளுக்கு வேண்டிய சாமான்கள் கொடுத்தார்கள். ஒரு கோன் வந்து அரை அனா. இவர்கள் ஜோடி ஒரு ரூபாய் என்று விற்கிறார்கள்.

அரை அனா கிரையம் போக ஒரு அனா லாபம் கிடைக்கும் என்று சொல்லிப் போட்டவுடனே எல்லாம் வந்து மொய்க்கின்றார்கள்.

சம்பாதித்த பணத்தை அங்கே காந்திஜி ஆசிரமத்தில் கொடுப்பது. அங்கே போய் அமைதியாக இருந்து கொள்வது.

மசால் தூள் அப்பொழுது அங்கே பிரசித்தம். ஒரு பாக்கெட் ஒன்னேகால் ரூபாய்.

நான் என்ன செய்தேன். மிளகாயே அரை ரூபாய் தான். ஒன்னேகால் ரூபாய்க்கு ஒன்னேகால் ரூபாய் சரிக்கு சரி லாபம் கிடைக்கிறது. தனியா கம்மி மசாலா சேர்த்துப் போட்டவுடனே இந்த பாக்கெட்டை வாங்குகிறார்கள்.

அடுத்த ஊருக்குக் கொண்டு போய் இதை அங்கே அரைப்பது. அரைத்த தூளை இங்கே கொண்டு வந்து விற்கிறது. இது மெட்ராஸ்லிருந்து, வருகிறது என்று சொல்லி அங்கிருக்கும் ஊரிலே அரைத்து அங்கேயே விற்கிறது.

இப்படியும் ஏமாற்றினேன்,

இந்த வேலையைச் செய்து வேறு ஒருவனுக்குக் கொடுத்தேன். நான் மில்லுக்குப் பிட்டர் வேலைக்குப் போய்விடுவேன். சம்பாதித்து வந்து “ஐயா…” என்று கேட்டு வருபவர்களுக்குச் சாப்பாடு போடுவது.

 இப்படி இருந்த நேரத்தில் அங்கு ஒருவனுக்கு இந்த மசால் அரைத்து விற்குகம் வேலையைக் கொடுதேன்

அவன் ஊர் வேலூர் என்று சொன்னார்கள். நீயே இந்தத் தொழிலைப் பார்த்துக் கொள். சம்பளம் எடுத்துக் கொள். வீட்டுக்கும் கொடு. மீதம் வந்தால் மற்றவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடு என்றேன்.

அவர் என்ன செய்தான்?

அந்த இடத்திற்குப் பக்கத்தில் சாராயம் வியாபாரம் செய்கிறார்கள்.  நான் அவனிடம் மசால் தூள் தொழிலைக் கொடுத்துவிட்டு வந்தால் அவன் சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

திடீர் என்று பார்த்தால் அவனைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது.

நான் வேலைக்கு போய்விட்டு அப்பொழுது தான் வருகிறேன். பாபுசிங் அங்கே தான் இருந்தார். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அவனைக் போய்க் கொல்லுடா என்கிறார். ஏனென்றால் அவர் ரவுடி.

இங்கே வந்து சாராயமா விற்கின்றான்? அப்படியே அவரைக் தூக்கிக் கொண்டு வந்து அவருக்கு முன்னாடியே உதைக்கிறார்கள்.

நாம் இல்லாதவனான அவனுக்கு உதவி செய்து உன் சம்பளத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கும் கொடு என்று சொன்னால் அவன் இந்த மாதிரிச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றான் (நான் சாராய வியாபாரம் செய்தேன் என்று). இந்த மாதிரி
1.எல்லாம் நல்லது செய்யப் போக
2.”எத்தனையோ தொல்லைகள் அனுபவித்தேன்”
3.நல்லது செய்பவர்களுக்கெல்லாம் எத்தனை தொல்லைகள் வருகின்றது?
4.எவ்வளவு வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியுமா?
5.உதவி செய்யப் போகும் பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகின்றார்கள்?
6.அதற்காக வேண்டி நல்லவர்கள் காப்பாற்றப்படவேண்டும்.
7.நல்லதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு ஞானம் வேண்டும்.
8.அதற்குண்டான சக்தி வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த சக்தியை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

சில உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்கிறேன். நன்மைகள் செய்யப் போகும் போது நாம் எப்படி இருக்கவேண்டும்?
1.அதற்குண்டான மன வலு வேண்டும்.
2.அது இல்லை என்றால் அந்த நன்மைகள் பலன் தராது.
3.ஆகையினால் அதற்கு வேண்டிய சக்தி நல்லவர்களுக்கு வேண்டுமா… வேண்டாமா…?
4.அதனால் தான் உங்களிடம் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்வது.

நான் அகமதாபாத் போயிருக்கும் போது கூட ஒரு நாள் குருநாதர் அங்கே வந்தார்.

டேய்… சாயா சாப்பிட வாடா…! என்கிறார்.

ஏன் சாமி…! நீங்கள் அங்கே பழனியில் இருந்தீர்கள், இப்போது இங்கே எப்படி வந்தீர்கள் என்றேன்.

“நான் சும்மாங்காச்சியும் (சும்மாதான்) வந்தேன்டா…!” என்கிறார். அப்புறம் டீ வாங்கி என்னைக் கொடுக்கச் சொல்கிறார். நான் எங்கே சென்றாலும் என்னைத் துரத்திக் கொண்டே தான் குருநாதர் வந்திருக்கின்றார்.

அப்புறம் என்னென்னமோ சொல்லிவிட்டு போயிட்டார்.

இந்த மாதிரி குருநாதர் என்னுடைய குணத்திற்கோ என்னமோ அல்லது பூர்வ புண்ணியத்திற்காகவோ தெரியாது. ஆனால்
1.என்னைத் தேடி வந்து தான் இந்தச் சக்தி கொடுத்தார்.
2.நான் உங்களை தேடி வந்து இதைச் சொல்கிறேன். “சொல்வது அர்த்தமாகின்றதா…!”

உங்களை தேடி வந்து அந்த நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறேன். என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
1.நீங்கள் தீமைகளிடமிருந்து விலக வேண்டும்.
2.அந்தத் தீமைகளிடம் இருந்து நீங்கள் விடுபடவேண்டும்.
3.அந்தப் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இவ்வளவு நேரம் சொல்கிறேன்.