ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 24, 2017

“ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” – நம் உயிரின் வேலை என்ன என்பதை அறிந்திருக்கின்றோமா…?

இந்த வாழ்க்கையிலே நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்ப்வர்கள் நிறையப் பேரைப் பார்க்கின்றோம். அவர்கள் சந்தர்ப்பத்தால் தவறுகள் செய்தாலும்
1.அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வந்து
2.நம் நல்ல குணத்தை மறைத்து விடுகிறது.
3.நமக்குள் சாப வினைகள் சாடுகிறது.

ஆனால் அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பாவ வினைகள் என்ன செய்யும்?
1.ஒவ்வொருவரையும் சாபமிடச் செய்யும்.
2.பாவங்கள் செய்யச் சொல்லும்.
3.நம் குழந்தையைக் கூட இரக்கமற்றுக் கொடூரமாகத் தாக்கச் செய்யும்.

பிறர் நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பார்கள். “அவர்கள் மட்டும் நன்றாக இருக்கின்றார்களே…!” என்பதைப் பார்த்ததும் பொறாமையில் என்ன செய்வோம்?

அது… அவன் இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கின்றான்… என்ற நிலையில்  பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டேயிருப்போம். தன்னை அறியாமலே அது செய்ய வைக்கும்.

நமக்கும் அவர்களுக்கும் ஒன்றுமே சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் நம் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது…
1.பார்…! அவர்களெல்லாம் என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்…? என்று
2.இது போன்ற பாவ வினைகளைச் சேர்க்கச் செய்கிறது.

ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் அவர்களை வேதனைப்படச் செய்து அதைக் கண்டு ரசிக்கும் நிலையாகத்தான் வரும்.

ஆனால் நாம் தவறு செய்ய வில்லை.

நம் உயிருடைய வேலை என்ன…? அதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா…!

நாம் எதை எண்ணினாலும் “ஓ..” என்று ஜீவனாக்கி “ம்…” என்று நம் உடலாக ஆக்கும். பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தையும்
1.ஓ..ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம் என்று
2.நம் உயிர் இயக்கி உடலாக ஆக்கி விடுகின்றது
3.உயிரின் வேலை அது.

நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே பல பொருள்களை இட்டால் எதைச் செய்யுமோ அதைப் போல் நம் உயிரான நெருப்பில் போடும் உணர்வுகளை அதற்குத்தக்க இயக்கி அதனுடைய வேலைகளைச் செய்யும்.

நாம் எந்தக் குணத்தை எடுக்கின்றோமோ அதனின் மணத்தின் தன்மை கொண்டு அறிவாகவும் அதனுடைய இயற்கையின் தன்மை (அந்த மணத்தின் இயல்பாக) கொண்டு உணர்வாகும்.

உயிர் நம்மை… “உணர்வால் தான்” இயக்குகின்றது.

நாம் அடுத்தவர்களிடம்
1.உனக்கு உணர்ச்சி இருக்கின்றதா..? என்று கேட்கின்றோம்.
2.கொஞ்சமாவது அறிவு இருக்கின்றதா…! என்று கேட்கிறோம்.
(அறியக்கூடிய திறன் இருக்கின்றதா.. என்கிறோம்)

ஒன்றைச் சொல்லப்படும் போது  தான் உணர்ச்சிகள் வருகிறது. நான் கோபமாகச் சொல்லுகின்றேன். அப்பொழுது அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?

உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும். நீ இப்படிச் சொல்லி விட்டாயா…? இரு… நான் பார்க்கிறேன் என்போம்.

எனக்குள் கோபமான உணர்வின் தன்மை விளைகின்றது. அந்தக் கோப உணர்வின் சொல் கேட்போர் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…?
2.அது நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை
நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகள் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் மூன்று இலட்சம் பேரை என்னைச் சந்திக்கச் செய்து பல பல அனுபவங்களைக் கொடுத்தார்.

இருபது வருட காலம் பல இடங்களைச் சுற்றினேன். ஒவ்வொருவரும் அவர்கள் தவறு செய்யாமலே
1.அவருக்குள் துயர நிலைகள் எப்படி விளைகின்றது?
2.அவர்களைத் தவறுள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது?
3.பாவ வினைகளாக எப்படிச் செய்கின்றனர்?
4.சாப வினைகளாக எப்படி வெளியிடுகின்றனர்?
5.தீய வினைகளாக எப்படி உருவாக்குகின்றனர்?
6.அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்ய நீ என்ன செய்யப் போகின்றாய்?

இது தான் குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி. அதன் வழியில் விடைகளாக பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அவருடைய கேள்விக்குத் தான் மெய் ஞானிகள் காட்டிய உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையை எனக்குள் உபதேசித்து அதை அறியும் ஆற்றலாக என்னைப் பெறச் செய்தார்.

குருநாதர் எனக்கு உபதேசித்ததை அவர் பெற்ற மெய் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த உபதேசம். பதிவு செய்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அறியாது வரும் தீமைகளை நீங்களே அகற்ற முடியும்.

தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு வரும் போது
1.குரு வழியில் உங்கள் உயிரை இயக்க முடியும்.
2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்க முடியும்.
3.அந்த ஞானிகளின் சக்திகளை உங்கள் உடலாக ஆக்க முடியும்.

குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். காரணம் குருவை உங்களிடம் நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

ஒவ்வொருவரையும் அவர்களை அறியாது தீமைகள் சாடுகின்றன. அந்தத் தீமைகளிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்ற எண்ணத்தை “நீ அங்கே பாய்ச்சு…” என்றார் குருநாதர்.

நான் எனக்குள் விளைய வைத்த ஞான வித்தினை உனக்குள் விளைய வைக்கின்றேன். அதை நீ உனக்குள் விளையச் செய்.

இந்த உணர்வின் வித்தினை யார் யார் விரும்புகின்றனரோ தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் ஏங்கி இருக்கின்றார்களோ அவர்களுக்குள் அதைப் பதியச் செய்.
1.அங்கே விளைந்து வரும் நிலைகளில்
2.அதில்.. “என்னை நீ அங்கே காண்பாய்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதன் வழியில் அவர்களைத் தீமைகளிலிருந்து அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறச் செய். மனிதன் என்ற நிலைகள் முழுமை அடையும் பருவத்தை ஏற்படுத்து என்றார் குருநாதர்.

தனக்குள் வரும் தீமைகளை அவர்கள் அகற்றும் பொழுது அவர்கள் மகிழ்வதைக் கண்டு “நீ அங்கே என்னைப் பார்…” என்றார் குருநாதர். 

குருநாதர் எனக்கு இட்ட அருள் பணி இது தான்.