ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2017

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஞானமோ உயர் ஞானமோ அல்லது மெய் ஞானமோ கிடைக்குமா...?

நம் உயிரணு (உயிர்) கதிரியக்க நட்சத்திரத்திலிருந்து உருவானது தான்.

மனிதன் வரை வளர்ந்து அந்த ஆற்றலான உணர்வின் சத்து கொண்டுதான்
1.உடலான இருளுக்குள் இருப்பதை
2.அந்த மறைந்த நிலையைத் தன் உணர்வின் நிலையால்
ஒலி/ஒளி அலைகளாக எண்ணங்களாக மாற்றுகின்றது.

இதையெல்லாம் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

தாய் கருவிலே அவன் இருக்கும் பொழுது தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த விண்ணின் ஆற்றல்கள் அனைத்தும் அதாவது அந்த நஞ்சின் இயக்கமான கதிரியக்கத்தின் உணர்வுகள் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

பூர்வ புண்ணியத்தால் தான் பெற்ற அந்த உணர்வின் சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகுகின்றான்.

அப்படி ஏகும் போது “உயிராற்றல்…”
1.எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
3.அதனின் உணர்வின் தன்மையே ஒளியாக மாற்றிக் கொள்கின்றான் அகஸ்தியன்.

விண்ணின் ஆற்றலை எடுத்து இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகள் இதைப் பிரித்துப் பிரித்து அந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி இன்றும் விண் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அதாவது துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தைத் தான் (அகஸ்தியன்) அங்கேயே நிலை கொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்தான்.

அவ்வாறு கவர்ந்த சத்திலிருக்கும் நஞ்சினைப் பிரித்து விட்டுத் தன் உயிரான ஒளியின் சிகரத்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை இந்த உணர்வின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக மின்னிக் கொண்டுள்ளான் அவன்.

அதைப் போன்று எந்த நட்சத்திரத்தின் தன்மை நம் உயிரணுவின் தன்மையாக இருப்பினும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை நாம் கவர்தல் வேண்டும்.

அந்த அகஸ்தியனின் உணர்வின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இந்த வாழ்க்கையில் எதிர் நிலையான இயக்கங்களாக இருப்பினும் ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் மாற்ற முடியும்.

இதையெல்லாம் நீங்கள் படிக்கும் பொழுது “என்னடா…! நாம் எல்லாம் அந்த அளவிற்குப் படிக்காதவர்கள். “சாமி என்னென்னமோ… இப்படிச் சொல்கிறார்..!” என்று எண்ணாதீர்கள்.
1.நான் படிக்காதவன் தான்.
2.மூன்றாவது வகுப்பு முழுவதும் படிக்கவில்லை.

என் குருநாதர் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் எனக்குள் கொடுத்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அதனால் சாமி சொல்வது அர்த்தம் தெரியவில்லை. எங்கேயோ ஏதோ உலகத்தில் ஏதோ பெரியதாகச் சொல்கிறார் என்று இப்படி விட்டு விட்டீர்கள் என்றால் நான் சொல்வதைத் தள்ளிவிட்டுவிடும்.

சாமி சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் “இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டால்…” இது வளர்க்கச் செய்யும்.

திட்டுகிறவர்களையும் கேலி செய்கிறவர்களையும் நாம் மீண்டும் மீண்டும் எண்ணுகின்றோம். “இவன் இப்படிச் செய்தான்… அவன் என்னை மோசம் செய்தான்…” என்று நீங்கள் பதிவு செய்தால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைகிறது.

அதைப் போல் அகஸ்தியனின் உணர்வுகளை இங்கே பதிவு செய்கின்றோம். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் மீண்டும் நுகர்ந்தால்
1.அகஸ்தியனைப் போன்று ஒளி நட்சத்திரமாக ஆகமுடியும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைய முடியும்
3.ஏகாந்த நிலை அடைய முடியும்.