ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2017

உடல் உறுப்புக்களுக்குள் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு உடல் நலத்துடன் வாழுங்கள்...!

ஆண்டவன் என்ற நிலையில் அவன் நம்மைக் காப்பான்…” என்று தான்  எண்ணுகின்றோமே தவிர நமக்குள் இருக்கும் உயிர்அவன் தான் காப்பான்…” என்ற நிலையை மறந்து விட்டோம்.

1.நாம் எண்ணியதை இயக்குவதும் உயிரே.
2.எண்ணியதை உருவாக்குவதும் உயிரே.
3.நமது நினைவாற்றலை இயக்குவதும் உயிரே.

இவையெல்லாம் நம் உயிரான ஈசனின் வேலை தான்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து வாழ்க்கையில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்தல் வேண்டும்.

நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும். தீமைகளை அகற்றும் பழக்கம் (பயிற்சி) வரவேண்டும்.

இன்று ஒவ்வொரு இயந்திரங்களுக்குள்ளும்/சாதனங்களுக்குள்ளும் அதற்குள் உள்ள உறுப்புகளின் இயக்கங்கள் (TECHNICAL) எவ்வாறு இயங்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவை வைத்து இஞ்சினியர் கண்டு கொள்கின்றார்.

விஞ்ஞானி…” புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது அதைச் செயலுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ தேவைப்படுகிறது.

அப்பொழுது அதற்குத் தகுந்த (DESIGN AND FABRICATION) பொருள்களை உருவாக்கிக் கொடுப்பதும் அதைப் பிரிப்பதும் இயந்திரத்தை முழுமையாக உருவாக்குவதும் இன்ஜினியரின் வேலை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.அந்த இன்ஜினியரின் நிலை போன்று
2.மெய் ஞானிகள் கண்ட வானுலகின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்தார்
3.தான் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு
4.உங்கள் உடலான உறுப்புகளுக்குள் அவரவர்களுக்குத் தக்க
5.மெய் ஞானியின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் சீர் படுத்தச் செய்து
6.உடல் உறுப்புகளில் வரும் நோய்களை அகற்றிடும் உணர்வின் தன்மையை நீங்கள் பெறும்படி செய்தார்.

விஞ்ஞானி கண்டுபிடித்த உணர்வின் தன்மைக்கொப்ப இஞ்சினியரால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தின் உறுப்புகள் சரியாக இருந்தால் தான் அது செயலாக்கும்.
1.அப்பொழுது தான் விஞ்ஞானி கண்டுபிடிப்பும் செயலுக்கு வரும்
2.அது வேலையும் செய்யும்.

அதே போல மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமையை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.

இயந்திரம் சீராக இருந்தால் தான் மற்ற உறுப்புகளும் சீராக இயக்க முடிகின்றது.

உங்கள் உடலில் நோய் இருந்தாலும் எந்த இடத்தில் வலி வருகின்றதோ ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நுகரும் படி செய்கின்றோம்.

உங்களுக்குள் அதைப் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவை நினைவாக்கினால் காற்றுக்குள் இருக்கும் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எளிதில் நுகர முடிகின்றது.

உடலில் எந்த உறுப்புகளில் வேதனை வருகின்றதோ ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படரவேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உடல் முழுவதும் சுழலச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் உறுப்புகளான சிறு குடல் பெரும் குடல்; கணையங்கள்; கல்லீரல் மண்ணீரல்; நுரையீரல்; இருதயம்; கண்களில் உள்ள கருமணிகள்; நரம்பு மண்டலம்; எலும்பு மண்டலம்; விலா எலும்பு; குறுத்தெலும்பு; எலும்புகளுக்குள் உறைந்துள்ள் ஊன்கள்; தசை மண்டலம்; தோல் மண்டலம் அனைத்திலும் படர வேண்டும் என்று தலையிலிருந்து கால் வரை படரச் செய்ய வேண்டும்.

1.மகரிஷிகளின் உணர்வலைகள் உடல் உறுப்புகளில் சுழன்று வரும் சமயம்
2.நோயாக இருக்கும் இடங்களில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை சீக்கிரம் இழுத்து
4.நோயான அணுக்களை அது தணியச் செய்கின்றது
5.உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்கின்றது

ஏனென்றால் விஞ்ஞான அறிவுப்படி உங்களுக்குள் மெய் ஞானத்தின் உணர்வை ஊட்டி உடலுக்குள் செலுத்தும்படிப் பழக்கப்படுத்துகின்றோம்.

விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்த அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அருள் வாழ்க்கை வாழ முடியும்.

ஏனென்றால் மெய் ஞானிகள் கண்ட மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது உயிர்.. நமக்கு மெய் ஒளியைக் காட்டுகின்றது.

அந்த மெய் வழி கண்டு உயிருடன் ஒன்றும் அனைத்து உணர்வுகளையும் ஒளியாக்கி விட்டால் ஞானிகளைப் போன்று ஒளியின் சரீரமாகும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
1.உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்வோம்.