ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2017

“கண்ணன்…” கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசம் செய்தான் – விளக்கம்

குழந்தை கருவில் இருக்கப்படும் போது சந்தர்ப்பவசத்தால் தன்னிச்சையாக அந்தத் தாய்க்கு ஒரு இம்சை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதில் இருந்து தான் எப்படியும் மீள வேண்டும் என்பதற்காக
1.தனக்குத் தெரிந்த ஞானியின் உணர்வை எண்ணி
2.அவர் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும்
3.என்னை அறியாது இந்த இருள்கள் நீங்க வேண்டும்.
4.என்னை ஏசுவோர் என்னை இம்சிப்போர் இதை உணரவேண்டும் என்ற எண்ணத்தை ஏங்கிப் பெற்றால்
5.தாய் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஞானியின் உணர்வுகள் தாயின் உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது. அந்த இரத்தத்திலிருந்து வரும் உணர்வை உணவாக உட்கொள்ளும் கருவிலிருக்கக்கூடிய உயிரின் உணர்வுகளுக்கு அந்த அருள் சக்திகள் இணைந்து விடுகின்றது.

ஏனென்றால் கருவுற்ற தாய் தன்னை இம்சிப்போர்களை விட்டு விட்டு அதில் இருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றது. தனக்குத் தெரிந்த எந்த மகரிஷியோ வாழ்க்கையில் அதைக் கண்டுணர்ந்து உணர்ந்த நிலையைத் தனக்குள் எடுக்கப்படும்போது அது நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.

அப்பொழுது மகா ஞானிகள் வெளியிட்ட உணர்வை அந்தத் தாய் நுகர நேர்கின்றது. தாயின் கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

அந்தத் தத்துவ ஞானிகள் எதையெல்லாம் பேசினரோ உணர்த்தினரோ அந்த உணர்வுகள் கருவிலே வித்தாக ஊன்றப்பட்டு அந்தக் குழந்தை பிறந்த பின் அது வளர வளர அந்தக் குழந்தையிடம் தத்துவ ஞானங்கள் வளர்கின்றது. அதைச் செயல்படுத்துகின்றது.

அதே சமயத்தில் “பாவிகள்… என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? அவர்கள் குடும்பம் நாசமாகப் போய் விடும்…! அவர்கள் குடும்பம் இப்படி எல்லாம் போய்விடும்… கண் காது முடமாகப் போய்விடும்…” என்று கர்ப்பமுற்ற தாய் பேசிச் சாபமிட்டால் போதும்.

கீதையிலே கண்ணன் சொல்வது நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

அந்தத் தாய் தான் எண்ணியது எதுவோ அந்தச் சாபமிடும் உணர்வைச் சுவாசிக்கும் போது உயிரான ஈசன் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று தன் உடலுக்குள் ஆக்கும் போது அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அது உருவாகின்றது.

கருவுற்ற தாய் தன்னை இம்சித்தவர்களுக்கு எதையெல்லாம்  செய்ய வேண்டும் என்று எண்ணியதோ அது அனைத்தும் அந்தக் குழந்தைக்குள் பதிவாகி குழந்தை பிறந்து வளரப்படும்போது தன் தாயையே உதைக்கக்கூடிய நிலைக்கு வந்து விடுகிறது.

யாரையெல்லாம் இம்சிக்க வேண்டும் என்று எண்ணியதோ தன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த நிலை ஆகி தாயை இரக்கமற்றுக் கொல்வதையும் பார்க்கலாம்.

ஆகவே சந்தர்ப்பத்தால் பிறர் ஏசும் அந்த உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணங்களை எண்ணாது பதிலுக்கு அவர்களைக் கடுமையான நிலைகளில் தாக்க வேண்டும் என்ற எண்ண உணர்வுகள் வெளிபட்டபின் இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

சாபமிட்டுப் பேசும் நிலையில் மீண்டும் செவிப்புலனில் உந்தப்பட்டு இந்த உணர்வின் சக்தி மீண்டும் தன் உடலுக்குள் போனவுடனே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

அந்தக் குழந்தை பிறந்த பின்னாடி பார்க்கலாம். எந்நேரமும் பார்த்தாலும் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும்.

எல்லோரும் வீட்டில் நன்றாக முக்கியமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் இந்தக் குழந்தை “வீல்..!” என்று கத்தும்.

நல்ல நேரத்தில் “சனியன் மாதிரிக் கத்துகிறதே…!” என்று சொல்வார்கள். ஒருவருக்கொருவர் சண்டை மூட்டிக்கொண்டே இருக்கும்.

அப்போது கடவுள் என்ன செய்கின்றார்? இது தான் கீதையிலே கண்ணன் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

நம் கண்ணின் நினைவுக்கு வரப்போகும் போது யாரை நினைக்கின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கவர நேர்கின்றது. அதைச் சுவாசிக்கும்போது அதன் வழி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கும் அது போய்ச் சேர்கின்றது.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று ஞானிகள் சொன்னார்கள்.

நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதற்குண்டான காரணப் பெயரை வைத்து இவ்வாறு இன்னென்ன சந்தரப்பத்தில இவ்வாறெல்லாம் இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து உரைத்துள்ளார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நுகரும் உணர்வுக்கொப்பத்தான் நம் உடலில் அணுக்கள் உருவாவதும் குழந்தை உருவாவதும் எல்லாமே அப்படித்தான்.

ஒவ்வொரு நொடியிலேயும் கண்ணின் நினைவினை மகரிஷிகளின் பால் செலுத்தி விண்ணிலிருந்து அருள் உணர்வுகளைக் கவரும் பழக்கம் வந்துவிட்டால் நமக்குள்
1.ஒளியான அணுக்களையும் உருவாக்க முடியும்.
2.அருள் ஞானக் குழந்தைகளையும் உருவாக்க முடியும்.