ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2017

“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று எண்ணினால் என்ன பலன் கிடைக்கும்...?

ஒரு குழம்பிற்குள் மிளகாய் அதிகரித்துவிட்டால் காரத்தின் தன்மை அடைந்து விடுகின்றது. காரமானாலும் அதற்குள் மற்ற சரக்குகளை இணைத்துவிட்டால் காரத்தின் தன்மை குறைந்துவிடுகின்றது.

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையில் கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வுகள் நமக்குள் தீமையை விளைவிக்கும் சக்தியாக இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று “நூறு முறை… இருநூறு முறை… ஆயிரம் முறை…” என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களைக் காக்கும் உணர்வாக இது வரும். அப்பொழுது அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரால் உருவாக்கப்பட்டு அதுவே ஆட்சி புரிந்து அதனின் வழிகளிலே உங்களை வழி நடத்தும்.

1.நம் உயிர் நினைத்ததையெல்லாம் இயக்கிக் காட்டும்.
2.துயரத்தைத் துடைத்துக் காட்டும்.
3.மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.
4.மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் வளர உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் பாலை ஊற்றிய பின் எவ்வாறு அந்த நஞ்சினைச் சிறுக்கச் செய்கின்றதோ இதைப் போல
1.ஞானிகள் ஒரு சொல்லானாலும்
2.ஒரு நினைவானாலும் ஆயிரம் குடம் பாலுக்கு ஒப்பானவர்கள்.

“பல முறை… அதைச் சொல்லும் பொழுது” நமக்குள் தீமையின் நிலைகளைச் செயலற்றதாக்கி அதனின் வீரிய நிலையாக அதை மாற்றிவிடும்.

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணிலே செல்லும் பொழுது உங்களை முழுமை அடையச் செய்யும்.

இதைப் போன்று மெய்ஞானிகளின் துணை கொண்டு உங்கள் நல்ல எண்ணங்களை மறைக்கும் இந்த அழுக்கான திரையைக் கிழித்து தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் அழியாப் பெரு வாழ்வு வாழும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

இந்த முறைப்படித்தான் விண்ணுக்குப் போக முடியுமே தவிர நான் காட்டிற்குள் போய் ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்றால் முடியாது.

அங்கே உங்கள் நினைவாற்றல் சிறிது சோர்வடைந்தால் போதும்.
1.”பாவிப்பயல்…” அந்தக் காலத்தில் எனக்கு அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்.
2.நான் சாமியாராகப் போவதற்கு எப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தான்…!
3.”அவர்களை என்ன செய்வது…?” என்ற இந்த உணர்வுகள் எதிர்மறையை ஊட்டும்.

அப்புறம் இவர் சாமியாராகப் போகப் போவதுமில்லை.

கடைசியில் இந்தக் கோபமான வினைகளைத்தான் சாப வினைகளாக மாற்றி மற்றவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சாபமிட்டு அவர்களைக் கெடுக்க முடியும்.
1.விண்ணுக்குப் போகவும் முடியாது
2.இந்த மண்ணை விட்டுத் தப்பவும் முடியாது.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பிலே தான் அவர்கள் செயல்பட முடியும். 

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.