ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2017

ரோட்டில் போகும் போது சந்தர்ப்பத்தால் நம் மீது ஒரு அசுத்தம் பட்டுவிட்டால் நம் உணர்வின் இயக்கம் எப்படி ஆகின்றது?

சாலையில் போகும் போது குளித்துச் சுத்தமாக வெண்மையான உடையைப் போட்டுக் கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த நேரம் நாம் போகும் பாதையில் பன்றியோ அல்லது மாடோ எதுவோ சாக்கடையில் இருக்கிறது. அது தன் வாலை வீசுகின்றது. அந்தச் சேறு ஒரு துளி நம் மீது பட்டுவிடுகிறது.

எறும்பு கடிக்கிறது என்றோ அல்லது ஈ வந்து உட்காருகிறது என்றோ அல்லது கொசு கடிக்கிறது என்றோ தன் வாலை வீசியது.  கொசுக் கடி தாங்காதபடி அதனுடைய அறிவிற்குத் தக்கவாறு அந்த மாடு இயங்குகிறது.

பன்றிக்குக் கொழுப்புச் சத்து ஜாஸ்தி. அதிகமான வெப்பங்கள் வரும் போது வெப்பம் தாக்கினால் கொழுப்பு உருகும் நிலை வரும்.

பன்றிக்கு வலு இருந்தாலும் இந்த வெயிலின் தன்மை வரப்போகும் போது அதனுடைய ஞானம் சாக்கடையில் போட்டுச் சகதியில் போட்டு தன் உடலைப் பிரண்டு வைத்துக் கொள்கின்றது. அதனால் வெப்பம் உடலில் தாக்குவது இல்லை.

எருமைக்கும் வலு அதிகமாக இருந்தாலும் இந்த வெயில் அடிக்கும் போது அதைத் தாங்கும் உணர்வு வலு இல்லை. அதுவும் சாக்கடையிலோ சகதியிலோ தன் உடலைப் பிரண்டு தான் வரும்.

சகதிக்குள் பிரண்டு வந்த பிற்பாடு என்ன செய்கிறது? அது தன் வாலை வீசுகின்றது. அதனின் சந்தர்ப்பம் அது.

நாம் சுத்தமாகத்தான் போகின்றோம். அப்பொழுது  நம் மேலே பட்டு விடுகிறது? பட்டவுடனே “ஐய்ய..ய்ய…, சே…” அந்தச் சகதி பட்டுவிட்டது…!” என்று நம்மை அறியாமலே சொல்வோம். அதைத் துடைக்கப் போகிறோம்.

அடுத்து அந்த மாட்டையோ ஏச ஆரம்பித்து விடுகின்றோம்.

வெறுப்புடன் “சீ… சனியன்…! எவன் வளர்த்தானோ…!” நடு ரோட்டில் போகும் போது இந்த மாதிரிச் செய்துவிட்டது என்று சப்தம் போடுகின்றோம்.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் அந்த உணர்வை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
1.இந்தத் தீய வினைகள் சித்திரை – சிறு திரைகளாக
2.நம்முடைய அறிவின் தன்மையை மறைக்கின்றது.

அது மாடு. அதற்கு அறிவு இல்லை. அது வாலை வீசியது. சரி… சேறு நம் மீது பட்டுவிட்டது. அதைத் துடைத்துக் கொள்வோம் என்று போனால் பரவாயில்லை.

ஆனால் அந்த மாட்டை வளர்த்தவர்களைத் திட்டுவோம். அல்லது மாட்டைப் பேசுவோம். இயற்கையிலே நம் உணர்வுகள் இப்படித்தான் செயல்படுகிறது.

நான் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கும் அந்தப் புத்தி தான் வரும். சாலையில் போகும் போது பன்றியோ மாடோ இப்படிச் செய்தால்.. “சீ… கிரகம்..,” என்று இப்படித் தான் சொல்வோம்.

பார்…! மாட்டைச் சாலையில் விட்டு விட்டு இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அந்த மாடு இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது என்று அந்த உணர்வுகள் இயக்கி நம்மை அப்படிப் பேச வைக்கத்தான் செய்யும்.

ஆனாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நல்ல அறிவை மறைக்கிறது. இதைத் துடைக்க வழி வேண்டுமா… இல்லையா…?

ஏனென்றால் இது இயற்கை. இது போன்ற நிலைகள் வந்தாலும் நம்மை அறியாமலே நம் நல்ல குணங்களை அது அந்தச் சந்தர்ப்பத்தில் மறைத்து விடுகின்றது.

மறைத்தபின் நாம் நல்ல செயல் இழந்து கோபம் வெறுப்பு  வேதனை அந்த மூன்றையும் நாம் எடுக்கப்படும் போது வேதனைப்படுவோம்.

1.வேலைக்குப் போவதற்கு நேரமாகிப் போனதே…!
2.நான் கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன்…!
3.இதோடு நான் எப்படிப் போவது…? என்ற இந்த வேதனை வருகின்றது.

வேதனை என்பது விஷம். ஆனால் நாம் தவறு செய்ய வில்லை. இந்த உணர்வுகள் எனக்குள் பட்டுவிட்டது. இது சந்தர்ப்பம்.

சந்தர்ப்பத்தால் ஏற்படும் வேதனை நிலைகளிலிருந்து அது நமக்குள் தீமை எப்படி ஏற்படுகின்றது…? என்பதைக் காட்டுவதற்காத்தான்
1.ஞானிகள் கருப்பண சாமியைப் போட்டுக்  காண்பித்திருப்பார்கள்.
2.அருகிலே மோப்ப நாயையும் காண்பித்திருப்பார்கள்.

ஏனென்றால் அன்றைய தினம் நடந்த இந்தச் செயல் தீமையானதாக நமக்குள் மோப்பமாகப் போகும் போது இருள் சூழ்ந்து விடுகின்றது.

இந்த நிலையைப் பார்த்து இதே வெறுப்பான நிலையுடன் அடுத்து நீங்கள் அலுவலகத்தில் போய் உட்கார்ந்து பாருங்கள்.

அங்கே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி
1.கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது நடந்து போனாலோ
2.என்ன…! எருமை மாடு மாதிரி இருக்கின்றான்…?
3.நம்மை அறியாமலே “இந்த வார்த்தை” வரும்.

தவறு நாம் செய்யவில்லை. நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் வேகத்தின் தன்மை நமக்குள் சித்திரையாகி (சிறு திரையாக) நம் நல்ல குணத்தை மறைத்து விடுகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நம் வாழ்க்கையில் எப்படித் தீமைகள் வருகின்றது?
2.அதனால் ஏற்படும் தீமைகள் என்ன?
3.அதனின் விளைவுகள் என்ன?
4.அதிலிருந்து விடுபடும் நிலையாக சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறு பெறவேண்டும்?
5.தீமைகளை எவ்வாறு நீக்க வேண்டும்?
6.நம் மனதை எவ்வாறு பக்குவப்படுத்த்க் கொள்ள வேண்டும்?
7.நம் எண்ணம் சொல் செயல் இவைகளை எப்படிப் புனிதப்படுத்த வேண்டும் என்று
8.காவியங்களைக் காண்பித்து கருத்தினை நாம் அறியும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறுவதற்காக ஆலயங்களை அமைத்து  தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதையும் காட்டினார்கள்.

அருள் மணங்களை நம் உயிருக்குள் அபிஷேகம் செய்து நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக அந்தத் தெய்வச் சிலைகளை வைத்து தெய்வ குணங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

அந்தத் தெய்வ குணத்தை நாம் பெறுவோம். தெய்வ சக்தியை வளர்ப்போம். அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.