ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2017

“முருகப் பெருமான்…” என்று ஞானிகள் அழைப்பதன் உட்பொருள் என்ன?

நம் உயிர் “ஓ…ம்” என்று பிரணவமாக்கி இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை ஜீவனாக்கி ஜீவனின் மலமாக நம் உடலை ஆக்கிக் கொண்டேயிருக்கின்றது.

“ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம்
1.எனக்குள் எண்ணியதைச் சிருஷ்டித்து அதனின் இயக்கமாக இயக்கி
2.ஈசனாக எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறாய் என்று
3.நம் உயிரை ஈசனாக மதிக்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எண்ணியதை இயக்கி எண்ணியதைப் பிரம்மமாக்கி நமக்குள் உடலாக்கி அந்த உணர்வின் செயலை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கின்றான் உயிரான ஈசன்.

அந்த உயிரே ஆண்டவன்.

1.நம் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
2.பெருமாளாக வீற்றிருப்பதும் உயிரே.
3.பெருமானாக இருப்பதும் உயிரே.

மனிதனின் நிலைகள் உருபெற்ற நிலைகளை உங்களுக்குள் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவு என்பது “முருகு…”. அதாவது மாற்றி அமைக்கும் பெருமானாக இருப்பது நமது ஆறாவது அறிவு.

1.உடலின் இயக்க உணர்வுகள் அனைத்திற்கும் பெருமாளாக இருப்பது உயிரானாலும்
2.இயக்கத்தின் தன்மை ஈசனாக இருப்பினும்
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பினும்
4.ஆறாவது அறிவின் தன்மையை “முருகப் பெருமான்…!” என்றனர் ஞானிகள்.

அதாவது இந்த உடலை ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது ஈசனாக இருப்பினும் அவனின் நிலைகள் கொண்டு மாற்றியமைக்கும் பெருமானாக இந்த ஆறாவது உணர்வின் துணை கொண்டே இந்த உயிர் நம்மை ஆட்சி புரிகின்றான்.

இது அனைத்தையும் ஆட்சி புரியும் நிலைகளை நாம் நினைவு கொண்டு நாம் அல்ல என்ற நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
1.நம் உடலை அவனின் உடல் என்றும்
2.அவனின் உணர்வு என்றும்
3.அவனின் கண் என்றும் உணர்தல் வேண்டும்.

எல்லாமே அவனின் நிலைதான் என்று அறிந்து கொண்ட பின்  ஒருவன் என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்… நான் அவனை விடுவேனா…! என்ன செய்கிறேன் பார்…” என்ற நிலைகளில் சொல்லி “ரோசப்படுவது…” என்பது  தேவையற்றது.

ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளை எடுக்காது உத்தராயணம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

அதாவது மகாமகம் என்று சொல்வார்கள். நாம் சமையல் செய்யும் போது எப்படிப் பொங்கி வடிக்கின்றோமோ இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “உத்தராயணம்…” தீமைகளை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நிலை வரும் போது தான் பங்குனி உத்திரத்தை நாம் தெளிவாகக் கொண்டாட முடியும். தெளிந்திடும் உணர்வு கொண்டு நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதற்குத் தான் மாதத்திற்கு நாள் என்று விழாக் கோலம் வைத்தனர் ஞானிகள். பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

பன்னிரண்டு ராசி என்று சொல்லும் போது நமக்குள் எந்த ராசி அதிகரிக்கின்றமோ அதனின் விளைவின் தன்மை தான் நமக்குள் வருகின்றது.

“முருகப் பெருமான்” – நாம் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு அது உயர்ந்த நிலைகள் கொண்டு நமக்குள் பெருமாள் ஆக இருந்து ஆட்சி புரியும் உயிருடன் அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆகும் நிலையே மகரிஷிகள் அன்று உணர்த்திய தியானம்.

தியானம் என்பது என்ன?

நம்மை மாற்றி அமைக்கும் முருகப் பெருமானின் உறு துணை கொண்டு மெய் ஞானி உணர்வை நமக்குள் இணைத்து உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பெருமானுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளியின் சுடராக வாழ்வதே தியானம்.

நமது எல்லை எது? இனி உடல் பெறாத நிலை தான் உத்தராயணம்.

இந்த மனித உடலை விட்டு நாம் அகன்ற பின் ஒளியின் சிகரமாக நாம் ஆவதற்கே இந்தத் தியானம்.
.
இந்தப் புவியின் வாழ்க்கையில் நமக்குள் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் அனைத்தும் பற்றற்றதாக மாற்றுவோம்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றுவோம்.
2.மகரிஷிகளுடன் நாம் மகரிஷிகளாக நாமும் கலந்திடுவோம்.