ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2017

தண்ணீர் (மது) சாப்பிடுபவர்கள் மட்டன் சாப்பிடுபவர்கள் பீடி சிகரெட் பிடிப்பவர்களின் நிலைகள் – “எந்த மணம் உயிரான்மாவில் அதிகமாகிறதோ மனிதனின் முடிவு அந்த எல்லை தான்”

நாம் எத்தனை கோடி உடல்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம்.

மனிதனாகப்போகும் போது ஆசையின் நிமித்தம் அது எத்தனையோ பேர் பல விதமான பழக்கங்கள் வைத்திருக்கின்றார்கள்.

தண்ணீர் (மது) சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்குத் திரும்பத் திரும்ப அந்தத் தண்ணியைக் குடித்தால் தான் அவருக்கு சந்தோஷம்,

சிகரெட் பீடி குடித்துப் பழகிவிட்டால் அது இல்லை என்றால் வேறு எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை… “முடியாது” என்பார்கள்.

கடைசியில் இருமல் வருகிறது…! இருதயமும் நுரையீரலும் கெட்டு விட்டது…! என்று தெரிந்தாலும் கூட அப்பொழுதும் இரண்டு குடித்தால் தான் எனக்கு நல்லது. அது தான் எனக்குச் சந்தோஷம் என்ற நிலைதான் வருகிறது.

நிறுத்த முடிகின்றதா…? என்றால், இல்லை .

அதே போல்  மட்டன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மட்டன் சாப்பிடவில்லை என்றால் என்ன சொல்வார்கள்? என்னாலே மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை என்பார்கள்.

ஆனால் அந்த மட்டன் சாப்பிட்ட பிற்பாடு என்ன நடக்கின்றது?

ஆடு மாடெல்லாம் தான் உணவாக உட்கொள்வதிலிருக்கும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. நல்லதைத் தன் கழிவாக வெளிப்படுத்துகின்றது.

இப்படி ஆட்டினுடைய உறுப்புகளுக்குள் அது கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைச் சேர்த்துத் தன் உடலாக்கி வலுவாக்கிக் கொள்கின்றது. அந்த ஆட்டைச் சாப்பிட்டவுடன் நமக்கும் உடல் வலுவாகிவிடுகிறது.

முரட்டுத்தனமான புத்தியும் வரும். மட்டன் சாப்பிட்டவுடனே அந்த வாசனை தான் நம் உடலிலிருந்து வரும். ஆட்டைக் கண்டாலே “அடித்துக் கொன்று சாப்பிடலாமா…” என்ற எண்ணம் வரும்.

ஆட்டைப் பார்த்தாலே இப்படிச் சாப்பிடும் எண்ணம் தான் வரும். மீண்டும் மீண்டும் மட்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடலில் என்ன செய்கின்றது?

இதெல்லாம் வலுவான பிற்பாடு
1.நமக்குள் மனித குணம் இருக்கிறது அல்லவா.
2.அதை எல்லாம் இது கொன்று சாப்பிட்டுவிடும்.
3.எது?
4.இந்த விஷம்.

கறி சாப்பிட்டவர்கள் அவர்கள் உடலில் சென்ட்டை (வாசனைத் திரவியம்) போடவில்லை என்றால் நாற்றம் தான் வரும். மட்டன் சாப்பிடுகிறவர்கள் சென்ட் போடாமால் இருக்க முடியுமா…!

சென்ட் போடவில்லை என்றால் அவர்கள் பக்கத்தில் போனாலே கவிச்சி நாற்றம் இருக்கும்.  ஆகவே
1.அந்த மணத்துடன் உடலை விட்டு வெளியே வந்த பிற்பாடு
2.உயிர் என்ன செய்யும்?
3.ஆடு மேய்ந்து கொண்டிருக்கும்.
4.அதன் ஈர்ப்புக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.

அங்கு போனவுடனே அதற்குள் கருவாகி ஆடாகிறது.

நீ சாப்பிட்டாய். நீ அதே மாறிப் போ. உயிருடைய வேலை அது தான்.

நம் சந்தர்ப்பம் வலு எதுவோ அந்த நிலைகளுக்கு நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கும்.
1.இன்றைக்கு மனித உடல் ஒரு சட்டை.
2.நாளைக்கு ஆட்டு உடல் ஒரு சட்டை.

பாம்பு விஷத்தால் மனிதனைத் தீண்டிவிடுகிறது. உடலுக்குள் பாம்பின் விஷம் ஆன பிற்பாடு செத்தால் பாம்பு உடலுக்குள்ளே உயிர் போகின்றது.

ஆனால் பாம்பை ஒரு மாடு மிதித்ததென்றால் அதனுடன் இணைத்துக் கொண்டு மாட்டையே எண்ணி அந்தப் பாம்பினுடைய உயிர்  மாடு உடலுக்குள் போய் மாடாகப் பிறக்கின்றது.

மனிதன் அடித்துக் கொன்றாலும்  மனிதன் மேல் நினைவு அதிகமாகி மனிதனுக்குள் வந்து பாம்பு மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் மனிதனைப் பாம்பு கடித்தாலோ பாம்பின் நினைவு வரும். மீண்டும் மனிதன் பாம்பாகப் போவான்.

இயற்கை எப்படி வளர்த்து வைத்திருக்கின்றது என்பதை இன்று விஞ்ஞானியும் தெரிந்து வைத்திருக்கின்றான்.

மெய்ஞானி தெரிந்து  நாம் எப்படி வாழ வேண்டும் என்று இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம், சிவ புராணம் எல்லாவற்றிலும் அன்றைக்கே கொடுத்திருக்கிறான்.

நாம் புரிந்து கொண்டோமா என்றால் இல்லை.

இந்த உடலுக்குப் பின் எங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தாலும் நாம் சாப்பிடுவதற்காகத்தான் எல்லாமே படைக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தில் உணவாக உட்கொள்கிறார்கள்.

சாப்பிடக் கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிராத்மாவில் மணங்கள் மாறும். மாறியதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.

இது உயிரின் வேலை.