ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2017

கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்ததும் நமக்கு மகிழ்ச்சி வருகின்றதா...?

நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நிலைகளைப் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வழியாகவும் தினசரி பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம் என்றால் உலகில் நடக்கின்ற அசம்பாவிதங்களை எல்லாம் “ஆ…” என்று பார்க்கின்றோம். கண்கள் அப்படியே அதை ஈர்த்து நமக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றது.

டி.வி.யில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம் நினைவு முழுவதும் அங்கே அந்த இடத்திற்கே போகின்றது. அங்கே பரவியிருக்கும் நினைவையே நாம் சுவாசிக்க  நேர்கின்றது.

அவ்வாறு நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்த  உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் செய்த (அசம்பாவித) உணர்வெல்லாம் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு நாட்டினை அழிக்கத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ஒலி அதிர்வுகளைக் கொடுத்து நமக்குள் பதிவாக்கி நம்மை அப்படியே புத்தியை செயலிழக்கச் செய்வதற்கும்  விஞ்ஞான அறிவு இன்று சென்றுவிட்டது.

இப்படி ஒலிபரப்பும் நிலைகளில் நாம் டி.வியைப் பார்க்கப்பப்படும் பொழுது  நம் மனித எண்ணங்களையே சீரழிக்கும் நிலைகள் வருகின்றது.

விஞ்ஞான அறிவால் கேட்ட உணர்வுகள் நாம் வீட்டிலிருந்தபடியே தீமையின் உணர்வை நமக்குள் வளர்ப்பதும் பகைமை உணர்வுகள் ஊட்டுவதும் ஒருவனை எப்படி மாற்றுவது என்ற நிலைகள் வருகின்றது.

டி.வி.யில் காண்பித்த நிலைகளையும் மற்றவைகளையும் உற்றுப் பார்க்கும் போது (சினிமாவில்) காட்டும் காட்சிகளில்
1.கொலை செய்வது எப்படி?
2.கொலையிலிருந்து தப்புவது எப்படி? என்ற நிலையெல்லாம் வந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் பதிவாகின்றது.

தன் வாழ்க்கையில் ஒரு சிரமம் வந்தால் அது மாதிரி நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் தூண்டுகிறது. அதன் வழியிலே தான் தவறுகள் அதிகமாக இன்று உலகம் முழுவதும் வளர்கின்றது.

ஆக மொத்தம் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

மெய் ஞானத்தின் நிலைகளில் பக்தி என்ற நிலை வந்தாலும் அதிலேயும் குறைகளைக் கூறி நல்ல நிலைகள் எடுக்க முடியாதபடி ஆலயங்களையும் அசுத்தப்படுத்துகின்றோம்.

எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் நம் குறைகளைத்தான் சொல்கின்றோம்.
1.பாவி எனக்குத் துரோகம் செய்தான்…
2.நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே…!
3.”உன்னைத்தான் நான் வணங்குகின்றேன்…” என்று சொல்லிக்
4.கடவுளையே சாபமிடும் நிலையில் மனிதனின் உணர்வு வந்து விட்டது
5.உனக்குக் கண் இல்லையா…? மூக்கு இல்லையா…?
6.இனி உன்னை எட்டிக் கூட பார்க்கப் போவதில்லை,
7.அவன் செத்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் அவன் தொலைந்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் என்று
8.பக்தியில் முத்தி்ய நிலைகளாக அஞ்ஞான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து நாம் விடுபட வேண்டும். அன்று அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வின் வழிப்படி
1.நம் வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் பகைமையிலிருந்தும் நாம் மாறுபடுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காண்கின்றோமோ “ஓ..ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதிகமாகச் செலுத்திப் பழக வேண்டும்.

அதை நீங்கள் பெறும் தகுதிக்காகத்தான் மணிக்கணக்கில் உங்களிடம் பேசுகின்றேன். உபதேச வழியாகப் பதிவாக்குகின்றேன். நினைவு கொள்ளுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் வரும் தீமையான உணர்வுகளை
1.உங்களால் மாற்றி அமைக்க முடியும்.
2.பகைமை தோற்றுவிக்கும் உணர்வை உங்களால் அடக்க முடியும்.
3.பகைமையற்ற உணர்வுகளை வளர்க்க முடியும்.
4.உடலை விட்டுச் சென்ற பின் அருள் ஒளியின் சுடராக என்றும் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இதைப் போன்று மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படுத்துங்கள்.