ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2017

பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல் "துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொடுக்கின்றோம்...!"

நமக்குள் தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் இருப்பினும் நமது வாழ்க்கையில் பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது?

பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.

ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
1.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும். 
2.நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும்.
3.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.
4.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதி காலையில் துருவ தியானத்தை எடுத்து வாழ்க்கையே தியானம் என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.

எப்பொழுதும் உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால் இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.

சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்

உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கி கொண்டே உள்ளது.

அதில் சார்ஜ் குறைவாகி விட்டால்  மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது. இதைப் போல
1.உயிரிலும்
2.உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால்
4.சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.

பேட்டரியில் சார்ஜ் சரியாக இருந்தால் தான் அதன் மூலம் அந்தக் கருவிகள் எல்லாம் சீராக இயக்கும். அது உறுதுணையாக இருக்கும்.

ஆகவே மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்போகும் போதெல்லாம் மீண்டும் மீண்டும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் இயக்கி
2.நமக்குள் அந்த வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும். 

ஒவ்வொருவரும் காலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சார்ஜ் செய்து உங்கள் அணுக்களுக்கு வீரியம் ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையே…. “தியானம்” ஆகும்.

உங்கள் வாழ்க்கையில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வைப் பற்றுடன் பற்றுங்கள். தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கொள்ளுங்கள்.

நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று அவர்களையும் அதைப் பற்றச் செய்யுங்கள்.

அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் உணர்வை ஊட்டினால்,
1.நண்பர்களும் நலமாவார்கள்
2.நாமும் நலமாவோம்
3.நம் உடலும் நலமாகும்
4.நம் வாழ்க்கையும் நலமாகும்
5.நம் தொழிலும் நலமாகும்

இந்த முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் செய்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.