ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2017

மற்றவர்களுக்குப் பல உதவிகளைச் செய்தாலும் நாம் மகிழ்ச்சி அடைய முடியாமல் போவதன் காரணம் என்ன...?

குடும்பத்தில் நான்கு பையன்கள் இருப்பார்கள். திருமணம் எல்லாம் ஆன பிற்பாடு அதில் ஒருவர் மிகவும் செல்வச் செழிப்பாக இருப்பார். வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அதே சமயம் இன்னொரு பையன் குடும்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். தொழில் மற்றவைகளில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்.

வசதியாக இருப்பவரிடம் சென்று பண உதவி கேட்கும் பொழுதெல்லாம் அவரும் உதவி செய்கின்றார். பணம் வாங்கினாலும் சிரமப்படுபவரோ அதிலிருந்து மீள முடியவில்லை.

பண உதவி செய்தவர் எடுக்கும் எண்ணம் எப்படி வருகின்றது?

நாம் எத்தனையோ தடவை உதவி செய்தோம்…! ஆக அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கொடுத்துத் தவித்துப் போய்விட்டது என்று  வேதனைப்படுவார்கள்.

வேதனைப்பட்டாலும்… எப்படியோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சரி என்று மீண்டும் பணம் கொடுப்பார்கள்.

அந்தப் பணத்தை வாங்கும் பொழுது “ஊ..ஹ்ம்..,”  இவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது…! ஏன்…? எனக்குக் கூடக் கொஞ்சம் பணம் கொடுக்கக்கூடாதா…! என்று இந்த வேதனையை எடுத்து பண உதவி செய்பவர்களைச் சாடுவார்கள்.

உதவி செய்யும் நோக்கத்தில் பணம் கொடுத்தாலும் பின்னாடியே இந்தச் சாபமும் வருகிறது.
1.நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
2.மனிதன் ஆறாவது அறிவு மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று செய்தாலும்
3.அது் சித்திரை – சிறு திரையாக அந்தத் தீமைகள் மறைக்கின்றது.

சிரமப்படுவோர் குடும்பத்திலே அவர் அறியாது சேர்த்த நஞ்சின் தன்மையால் வாழ்வில் கஷ்டப்படுகின்றார்கள்.

பாலில் பாதாமைப் போட்டாலும் நஞ்சு விழுந்து விட்டால் அதைக் குடித்தால் எப்படி இருக்கும்? நம்மை மயக்கப்படச் செய்யும்.

இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த நஞ்சு அவர்களை அறியாது அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றது. என்ன செய்வார்கள்?
1.அதிலிருந்து மீள முடியாது.
2.சிந்திக்க முடியாது. மறைத்து விட்டது. இது சித்திரை.

இதைப் போன்று வரும் தீமைகளை நீக்க வேண்டுமல்லவா?

ஒருவருடைய தீமையினுடைய நிலைகளை அகற்ற இரக்கம் கொண்டு பாவம் கஷ்டப்படுகின்றார் என்று எண்ணி அவர் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக “இந்தாப்பா… என்று ஒரு ஐம்பது அல்லது நூறு ரூபாயைக் கொடுக்கின்றோம்.

நூறு ரூபாய் கொடுத்ததும் அவர் என்ன நினைப்பார்…? இந்த நூறு  ரூபாய் எந்த மூலைக்குக் காணும். பத்தவே பத்தாது…!

இவ்வளவு வசதி படைத்தவர் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா? வசதியாக இருக்கின்றவர் வெறும் நூறு ரூபாய் கொடுக்கிறார். ஏன்…., ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா…! என்று இந்த எண்ணம் வரும்.
1.ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்
2.இவருடைய நிலைக்கு எந்த வியாபாரமும் சரியாக வராது.

ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வியாபாரத்தைச் சரி செய்து விடலாம் என்பது ”பணம் வாங்க வேண்டும்…” என்று விரும்புபவருடைய எண்ணம்.

1.மனம் சீர்படவில்லை என்றால்
2.இந்த ஆயிரம் ரூபாயும் கரையத்தான் செய்யும். வளர முடியாது.
3.மனம் சோர்வடைந்து விட்டாலும் வேதனைப்பட்டாலும்
4.இந்த ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் இந்த உணர்வு
5.தன்னுடைய மனமே தனக்கு எதிரியாகி விடும்.

என் குடும்பம் இப்படி இருக்கின்றதே என்று வேதனை எடுக்கும் போது அந்தக் கஷ்டமான நேரத்தில் என்னென்ன எண்ணங்கள் வரும்?
1.அவன் அப்படிப் பேசுகின்றான் இவன் இப்படிப் பேசுகின்றான்
2.என்னை ரொம்பக் கேவலமாகப் பேசுகின்றான்
3.காசு இருந்தால் தான் என்னை மதிக்கின்றார்கள்
4.என்னை யாருமே மதிக்கவில்லை என்ற இந்த உணர்வுகள் தான் வரும்.

இதை இப்படி எடுத்துக் கொண்டபின் இது அடுத்துப் பேசும் போது சொல்களும் அதுவாகத் தான் வரும்.

சில பேர் என்ன செய்வார்கள்…? மிகவும் கஷ்டமாக இருக்கும் போது அவர்களிடம் ஒரு நூறு ரூபாய் கேட்டுப் பாருங்கள். அவர்கள் விடும் “பெரு மூச்சையும்… பார்வையையும்… அந்தச் சொல்லையும்… பாருங்கள்.
1.அவர்கள் நல்லதாகத் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
2.ஆனால் அந்த உணர்வு விடவில்லை.

இசைக் கருவியில் உதாரணமாக வீணையில் ஒரு நரம்பு சுருதி தளர்ந்து விட்டால் என்ன செய்யும்? நாதங்கள் மாறி விடும்.

ஏழு சுருதி இருக்கின்றது. அந்த நரம்புகள் இறுக்கமாகச் சரியான முறையில் பொருத்தப்பட்டிருந்தால் சுருதி சமமாக இருக்கும். வெளிப்படும் நாதங்கள் இனிமையாக வரும்.

அந்த நரம்புகள் கொஞ்சம் தளர்ந்து விட்டால்
1.எப்படி நாதங்கள் மாறுகின்றதோ இதைப்போல
2.மனிதனின் உணர்வுகள் மாறும் பொழுது
3.வெளிப்படும் நாதங்கள் அந்தச் சொல்கள் மாறும்.

அவனுக்குள் இயக்கும் நிலைகள் அப்பொழுது அந்த இனிமை வராது. சொல்லில் இனிமை வராது. தன்னுடைய மனமே ஆன்மாவே எதிரியாகும்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நம்மைத் தூய்மையாக்குவது எப்படி?

நமக்குள் தீமையான உணர்வுகள் வித்தாகி வளர்ந்து பின் விளைந்து அது கனியாக விடாதபடி தடுக்க வேண்டும்.

நுகர்ந்த உணர்வின் தன்மை அந்தக் குணத்தை இயக்குவது ஒலி. ஒலி ஒன்று தான். அந்த ஒலியின் தன்மை கொண்டு உள்ளிருந்து ஒளியாக அந்த மணத்தை நம் மனதை மாற்றுகின்றது.

ஒலி ஒளி என்று இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் பொழுது
1.உயிரின் தன்மையால் தான் அது இயக்குகின்றது.
2.உயிரால் அறியும் ஆற்றல் வரும் போது
3.மெய் ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்தால்
4.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் வாழ்க்கையில் வரும்
5.சிறு சிறு திரைகளாக – தீமைகள் மறைப்பதை மாற்றிட முடியும்.
6.ஒளியின் தன்மை நமக்குள் பெருகும்.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை எடுத்துத் துடைக்க வேண்டும்.

நான் கடினமாக ஏதோ சொல்கிறேன்… அர்த்தம் ஆகவில்லையே…! என்று நினைத்து விடாதீர்கள்.
1.உங்களுக்கு அது அர்த்தம் ஆகும்.
2.சரியான சமயத்தில் உங்களுக்கு வழி காட்டும்.

உங்களுக்குத் தக்க நேரத்தில் சந்தர்ப்பத்தால் சிக்கல்கள் வந்தால் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றிடும் உபாயம் வரும்.

அப்பொழுது தீமைகள் உங்களை அணுகாது.

அப்படியே அது வந்தாலும் அதை அறியும் நிலைகள் பெற்று அந்தத் தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன். (என் குருவின் ஆணைப்படி இதை உபதேசிக்கின்றேன்)