ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2017

அறியாத சிறு வயதில் எத்தனையோ உயிரினங்களை இரக்கமற்றுக் கொன்றிருப்போம் - அறியாமல் செய்தாலும் அதனுடைய பின் விளைவுகள் என்ன என்று அறிந்திருக்கின்றோமா...!

நான் (ஞானகுரு) என்னுடைய சிறிய வயதில் தெரியாமல் ஒரு குருவியைப் பிடித்து என்ன செய்தேன்? நெருப்பில் உயிரோடு வாட்டினேன்.

குருநாதர் பிற்பாடு அதை என்னிடம் சுட்டிக் காண்பித்தார். அந்தக் குருவி எப்படி எரிந்தது தெரியுமாடா…? என்று கேட்டார்.

அது… “எரிந்தது” தெரியும். அது உள்ளுக்குள் எப்படி ஆனது என்று எனக்குத் தெரியாது என்றேன்.

இப்பொழுது… “பாருடா…!” என்றார்.

அது உடலில் எத்தனை கொதிப்பானதோ அந்த எரிச்சல் எல்லாம் எனக்குள் அப்படியே வந்தது.

இப்பொழுது என்னடா செய்கிறது…? என்று கேட்டார்

1.அது எரிந்தது.
2.வேதனைப்பட்ட மூச்சலைகளை வெளிவிட்டிருக்கிறது.
3.அந்த (குருவியின்) உயிரும் உன்னிடம் இருக்கிறது.

தெரியாத வயதில் நீ செய்திருந்தாலும் இப்பொழுது நினைவுபடுத்தியவுடன்  அது எரிந்த உணர்வைச் சுவாசிக்கின்றாய். சுவாசித்தவுடன்… உன் உடலை என்ன செய்கிறது பாருடா… என்றார்.

நீ தெரியாமல் தான் செய்தாய்,
1.“உன் உயிர்” அதை விட்டு விடுகிறதா…?
2.அது வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் கவர்ந்து கொண்டது.

அந்தக் குருவியும் செத்தது. உன் உடலுக்குள்ளே இருக்கிறது. நீ ஆண்பாலாக இருக்கின்றாய் உனக்குள் கருவாக இருக்கின்றது.

இது எந்தக் கருவில் போய் இது பிறக்கின்றதோ “எரிகிறதே…! எரிகிறதே….!” அந்த உடலை எரியச் செய்யும். இப்பொழுது உன் உடலிலேயும் “எரியும்டா… பாருடா…” என்றார்.

இதை அப்படியே அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார். சொல்வது அர்த்தம் ஆகின்றதா.

அதனால் எல்லாமே சந்தர்ப்பம் தான். பல கோடி உடல்களில் சந்தர்ப்பங்கள் நீக்கி நீக்கி இப்படி வந்து தான் இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்தை எண்ணுகின்றமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது.

நன்றாக யோசனை செய்து பாருங்கள், நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.
1.நாம் சுவாசிப்பதை உயிரான ஈசன்
2.அது (அப்படியே) உருவாக்கியே விடுகின்றான்.

அந்தக் கணக்கில் எது கூடுகிறதோ
1.இந்த உடலிலிருந்தே
2.அடுத்த உடலை “நீ தயார் செய்து கொள்கின்றாய்…”

இந்த உடலில் இன்றைய செயல் நாளைய உடல். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதைத்தான் தெளிவாகச் சொன்னார்.

நம்முடைய இன்றைய செயல் “எதுவாக இருக்க வேண்டும்…?” என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நாளைய உடல் அதுவாகத்தான் உயிர் உருவாக்கும்.