ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2017

குளவி புழுவைக் கொட்டினால் நஞ்சு பரவி புழு குளவியாக மாறுகிறது – வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அடுத்து நஞ்சான உடலைப் பெறுவோம் – துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் ஞானியாகலாம்

உதாரணமாக ஒரு குளவி புழுவைக் கொட்டுமேயானால் அந்தப் புழு உடலில் குளவியின் விஷத் தன்மை பரவியபின் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

அதே போல் உடல் சுருங்கி வேதனையுடன் இருக்கும் ஒருவருடைய உணர்வை உற்றுப் பார்க்கும் நாம் அந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால்
1.அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து
2.நல்ல அணுக்களில் விஷங்கள் பரவி விடுகிறது.

புழு குளவியாக மாறுவது போல நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மைக்கேற்ப நம் உடலின் அணுக்களின் தன்மை மாறுகிறது.

1.நம் உடலில் அணுக்கள் மாறும் போது
2.நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகள் சுருங்கத் தொடங்குகிறது
3.நம் உருவமும் சுருங்கத் தொடங்குகிறது
4.எண்ணமும் சுருங்கத் தொடங்குகிறது
5.செயலும் மாற்றப்படுகிறது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பல கோடிச் சரீரங்களில் இருந்து தீமைகளை வென்று வென்று வென்று வென்று… தீமையை வென்றிடும் சக்தி பெற்ற மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.

நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றுகிறது. நல்லதை நம் உடலாக மாற்றிக் கொள்கிறது.

அதே சமயம் நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம் எதனையும் தெரிந்து கொண்டு தீமை என்ற நிலை அகற்றும் வலிமை பெற்றது.  “கார்த்திகேயா…” என்றும் அறிந்து கொள்ளும் உணர்வாக வருகிறது,

தீமை என்ற உணர்வை அறிந்து கொண்டால் நம் உடலில் உள்ள ஆறாவது அறிவு சேனாதிபதியாக இயங்கி நம்மைப் பாதுகாப்பாக இயக்கச் செய்கிறது.

தீமை என்ற உணர்வு அறிந்து கொண்ட பின் தீமையை நம் உடலில் சேர்க்காது ஆறாவது அறிவு நமக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டவராக இருந்தாலும் வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும் போது நம் உயிர் விஷத்தின் தன்மையை பிரம்மமாக உடலாக மாற்றி விடுகிறது.

தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாது தடுக்க வேதனை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் எண்ணத்தால் கவர்ந்து நம் உயிருடன் இணையச் செய்யும் போது அந்த உணர்வுகள் வேதனையை நீக்கும் அருள் உணர்வாக மாறுகிறது.

வேதனையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகருவோமானால் இந்த விஷத்தை வெல்லலாம்.

விஷத்தை வெல்லும் உணர்வுகள் நம் உயிரிலே சேர்த்தால் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் வலுவைக் குறைக்கிறது.

வலுவைக் குறைக்கப்படும் போது வேதனைப்படுபவனைப் பார்த்து
1.அவன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.அவன் உடல் நலம் பெற வேண்டும்,
3.அவன் பிணியிலிருந்து விடுபட வேண்டும்,
4.அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வுகளை அடுக்கடுக்காக உடலுக்குள்ளே செலுத்த வேண்டும்

அப்பொழுது அவன் வேதனைப்பட்ட உணர்வுகள்  நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனையின் வீரியத்தைக் குறைத்து
1.அவன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வு கலக்கப்படும் போது
2.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவாகிறது.
3.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவானால்
4.நமக்குள் இந்த உணர்வின் சக்தி  நல்ல உணர்வின் உடலாக மாற்றுகிறது.

அருள் உணர்வுகள் நம் உயிரான்மாவில் பெருகி அருள் ஞானியாக நாம் ஆக முடியும்.