காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும். பதிவானதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.
1.மனித வாழ்க்கையில் தீமைகளைக் காண நேர்ந்தால் அந்த இடத்திலே நாம் “விழித்திருத்தல்” வேண்டும்.
2.வேதனைப்படுகிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் சங்கடப்படுகிறார்கள் வெறுப்படைகிறார்கள் கோபப்படுகிறார்கள் நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால் அந்த ரெக்கத்தில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்.
3.காரணம் நாம் எடுத்த தியானத்தை உஷார்படுத்தித் தெளிவுபடுத்தி சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
கஷ்டப்படுகிறார் என்று பார்க்க கேட்க நேர்ந்தாலும் நன்மை செய்ய வேண்டும் என்று நிலையில் தான் அவரின் கஷ்டத்தை அறிய விரும்புகின்றோம்.
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?
கேட்டறிந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஆன்மாவை உடனடியாகத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து அந்தச் சிரமப்பட்டவர்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய். நோயிலிருந்து நீ விடுபடுவாய் நீ உடல் நலம் பெறுவாய் என்று சொல்லிவிட வேண்டும்.
1.அவருடைய கடும் வேதனைகள் நமக்குள் புகாதபடி விழித்திருந்து
2.வேதனையை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அந்த இடத்தில் வலுவாக்கிக் கொண்டு வர வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அவர்களைக் காக்க முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.
அவரிடம் சொல்லி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்கி உன் நோய்கள் நீங்கிவிடும் என்று சொல்லுங்கள்.
காரணம் அவரால் வேதனையிலிருந்து மீள முடியாத அந்த நேரத்தில் நாம் அந்த அருள் ஒளியை அவருக்குப் பாய்ச்சினால்… அவரும் எண்ணத் தொடங்கினால்… நம்முடைய சொல் அவர் நோயை நீக்கக் காரணமாகும். ஓரளவுக்கு மன உறுதி பெறவும் உதவும்.
நமது வாழ்க்கையில் எதிர்படும் பல தீமையின் உணர்வுகளைக் கேட்டு அறிந்தால் நம்மைக் காத்து மற்றவர்களையும் காத்திடும் நிலையாக வர வேண்டும்.
ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அதை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து ஒலி ஒளியாக நமக்குக் காட்டுகின்றது.
அன்றாடம் பலருடைய உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
1.நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ரேடியோ டிவிகளில் எப்படி வேறு அலைவரிசைகளை மாற்றுகின்றோமோ அதைப்போல
2.பிறர் படும் துயரத்தை நுகர்ந்தோம் என்றால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.இந்த அலைவரிசையை நமக்குள் எடுத்து தீமைகள் (அந்த அலைவரிசை) நமக்குள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.
“இப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நாம் வந்தால் தான்” வாழ்க்கையில் அறியாது சேரும் தீயவினைகளிலிருந்து நாம் விடுபட இது உதவும்
ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஞானிகள் காட்டிய மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் பிறவியில்லா நிலை அடைந்த அவர்களின் உணர்வை நாம் பெற்று… இந்த வாழ்க்கையைச் சீராக அமைத்து… உடலுக்குப் பின் நாம் விண் செல்ல வேண்டும்.
பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிரான ஈசந் தான். நாம் விரும்பியதை உருவாக்குவதும் அவனே.
1.நம் ஆறாவது அறிவால் தெளிந்த மனம் கொண்டு அருள் உணர்வினை நுகர்ந்தால் உயிர் அதை உருவாக்கி
2.அதன் வழியில் நம்மை வழிநடத்தி இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறச் செய்யும்.