`
பல கோடிச் சரீரங்களில் துன்பங்களை நீக்கி நீக்கி… அந்த வலுப்பெற்றது தான் பன்றியின் உடலை உருவாக்குகிறது. இதே உயிர் தான்.
பன்றியின் உடலாக உருவாக்கிய பின்… பன்றியோ சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து விடுகின்றது… அதில் உள்ள நல்லதை எடுத்து உட்கொள்கிறது.
நல்ல பருப்பைச் சாக்கடைக்குள் போட்டால் நாம் அதை நுகர்ந்தால் அங்கே நல்ல வாசனையா வருகின்றது…? இல்லையே…!
இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைச் சாக்கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார்,. அங்கேயே உட்காரச் சொன்னார்.
முறுக்கு நிலக்கடலை பொரிகடலை மூன்றையும் கடையில் வாங்கி வரச் சொன்னார் சாக்கடைக்குள் அதைப் போட்டுவிட்டு அந்த மூன்றையும் சாக்கடையிலிருந்து நுகர்ந்து “பிரித்து எடு…” என்று சொல்கின்றார்.
1.சாமி சாக்கடை நாற்றம் தான் வருகின்றது என்று சொன்னேன்.
2.நுகர்ந்தால் சாக்கடை வாசனை தானே வரும்…! என்று சொன்னேன்.
ஆனால் அதற்கு முன்னாடி குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குச் சென்று காபி வாங்கிக் கொண்டு வா என்றார். அவருக்கு டீ எனக்குக் காபி. நான் டீ சாப்பிட மாட்டேன்.
சாக்கடையிலிருந்து எடுத்து வெளியிலே குப்பைகளைப் போட்டிருப்பார்கள் அல்லவா. அதை எடுத்து என் காப்பியிலே போட்டு கலக்கிச் சாப்பிடுடா… ஜோராக இருக்கும் என்று சொல்கின்றார்… குருநாதர்.
எனக்கு எப்படி இருக்கும்…?
“ஜோராக இருக்கும்…” என்று அவர் சொல்கின்றார்.
இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகின்றது சாமி…! உள்ளுக்குள் எப்படிப் போகும்…? என்று நான் சொல்கின்றேன்.
நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என்று பாருடா…! போட்டேன் ரசித்தேன்… ஆகா…! என்று சாப்பிடுகின்றார்.
சாக்கடையில் அந்த வரிசையில் கக்கூஸ் எல்லாம் போயிருக்கின்றார்கள்… கழுவியது எல்லாம் தான் வருகின்றது. ஆனால் அவர் சாப்பிடுகிறார்.
அந்த நேரத்திற்குச் சரியாக பன்றியும் வருகின்றது. ஆனால் இவர் வரவழைத்தாரோ… எல்லது என்ன கிரகமோ தெரியாது…! தள்ளிக் கொண்டு முட்டிக்கொண்டு வருகின்றது.
நடந்த நிகழ்ச்சி இது..! சாக்கடை உபதேசமாக குருநாதர் எனக்குக் கொடுத்தது.
அந்தப் பக்கம் போவோர் வருவோர் அனைவரும் என்னைப் பார்த்து… நைனாவிற்கு (ஞானகுரு) நல்ல பைத்தியம் பிடித்து விட்டது…! என்று என் காது படப் பேசுகின்றார்கள்.
இவருக்கு ஏன் இந்த ஆசை…? பைத்தியத்தோடு சேர்ந்து கொண்டு சாக்கடையில் அமர்ந்து… இப்பொழுது அரைப் பைத்தியமாக இருக்கின்றது அடுத்து முக்கால் பைத்தியம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்.
காரணம்… நான் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆடுகின்றேன் அல்லவா.. நான் என்ன செய்வது…? எனக்கு வேறு வழி இல்லை.
வருவோர் போவோர் அனைவரும் என்னைக் கேலி பேசுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். நல்லய்ய நாயக்கர் மருமகனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி வந்துவிட்டது…? என்று என் மாமனாரைச் சாடி பேசுகின்றார்கள்… என்னையும் திட்டுகின்றார்கள்.
இப்படித்தான் நிகழ்ச்சி அங்கே நடக்கிறது.
பன்றி வருகிறது. முகர்ந்து கொண்டு வந்தபின் ஓடுடா…! என்று சொல்கின்றார் கடலைப்பருப்பு முறுக்கு பொட்டுக்கடலை மூன்றையும் சாக்கடையிலே போடச் சொல்கின்றார்.
முறுக்கு ஒரு பக்கமும் கடலைப்பருப்பை ஒரு பக்கமும்… பன்றி முன்னாடி வரக்கூடிய பாதையிலே பொரிகடலையைப் போட்டேன். அவர் சொன்னபடி நான் போட்டேன்.
இதை மார்க் செய்து கொள்…! என்று சொன்னார். கோட்டைப் போட்டு வைத்துக் கொண்டேன்.
முதலில் பொரிகடலை இருக்கும் பக்கம் நுகர்ந்த பின் அதை விட்டுவிட்டு இந்தப் பக்கமாக வருகின்றது… நிலக்கடலைப் பருப்பு இருக்கும் இடத்திற்கு வருகின்றது.
வேகத்தில் அந்த வாசனையை நகர்ந்து அதை முதலில் எடுத்துச் சாப்பிடுகிறது… போட்ட பருப்பு அனைத்துமே சாப்பிடுகின்றது.
அடுத்து முறுக்கை எடுக்க வருகிறது. அதில் எண்ணெய் வாசனை இருப்பதால் அதை எடுத்துச் சாப்பிடுகின்றது.
கடைசியிலே திரும்பி வந்து இதை ஏன் விடுவானேன்…! என்று பொரிகடலையையும் சாப்பிடுகின்றது. ஏனென்றால் வறுத்தது… வாசனை இல்லை. அதையும் சாப்பிடுகின்றது.
பார்த்தாயா...?
1.நான் சாக்கடையைச் சாப்பிடேன் என்றால் அதையா சாப்பிட்டேன்…?
2.நல்லது என்று நினைத்தேன்… அதாவது சாக்கடைக்குள் நல்லதை நினைத்தேன்
3.காப்பியில் இருக்கும் நல்லதை நினைத்தேன்
4.சாக்கடை வாசனை எனக்கு வரவில்லை…. அதனால் வாந்தி வரவில்லை.
5.நீ நல்லதை நினைக்கவில்லை… ஆனால் சாக்கடையை நுகருகின்றாய்…
6.அதனால் அந்த வாசனை வருகிறது… உனக்கு வாந்தி வருகிறது…! என்று
6.எனக்கு அந்த இடத்திலே உபதேசமாக்க் கொடுத்து இதைத் தெளிவாக்குகின்றார்.
உன்னுடைய உணர்வுகள் எதைச் செய்கின்றது…? எதை இயக்குகின்றது…? நீ எப்படி வாழ்கின்றாய்…? நீ எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாய்…?
நுகர்ந்து பார்த்து தான் உணர்வின் தன்மை கொண்டு இரைக்குத் தேடி வந்தது. முகர்ந்து பார்க்கும் வலுவைப் பெற்று கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை நுகர்கின்றது பன்றி.
ஏனென்றால் அந்த மாதிரி சேர்த்து ஒவ்வொன்று சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட உறுப்புகள் இப்படி விளைந்த்து… பன்றியிலிருந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.
இதை எல்லாம் நான் சாக்கடையில் அமர்ந்து தான் கேட்டேன் நீங்கள் நல்ல இடத்திலே நன்றாக அமர்ந்து கேட்கின்றீர்கள்…!
1.நான் அனுபவித்துச் சொல்கின்றேன்.
2.இலேசாக இருக்கிறது என்று அலட்சியப்படுத்திக் கேட்டீர்கள் என்றால் இந்நேரம் வரை கேட்ட உபதேசமும் வீணாகிவிடும்.
இயற்கையின் நியதிகள்… இந்த உயிர் எதைக் கவர்கின்றது…? எதன் உணர்வின் தன்மை கொண்டு வருகிறது என்று தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார்.