ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2023

எந்தப் பிள்ளையை வளர்க்கச் சொன்னார்கள் ஞானிகள்… எந்தப் பிள்ளையை நாம் வளர்த்துக் கொண்டுள்ளோம்…?

சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று நம் சஸ்திரம் கூறுவதன் பொருள் என்ன…?

ஒரு நோயாளி வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
1.அந்த உணர்வுகள் சித்திரம்… நுகரும் போது அதற்கொப்ப எண்ணங்கள் வருகின்றது
2.நம் உடலுக்குள் அது அணுவாக (புத்திரனாக) உருவாகின்றது.

அந்த வேதனை என்ற கணக்குகள் அதிகமாகும் போது உடலில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட பாம்பாக உயிர் மாற்றி விடுகின்றது.

அதாவது நோயாளி வேதனைப்படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகும் போது சித்திர புத்திரனின் கணக்காகி… அந்த எண்ணம் நமக்குள் எமனாக வருகின்றது.

என்னை இப்படிக் கோபிக்கின்றானே… பாவிப்பயல் இப்படிச் செய்கின்றானே என்ற உணர்வின் தன்மை தனக்குள் எடுத்தால்… சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம்
1.எந்த மனித உடலை உற்றுப் பார்த்து இந்த உணர்வை நுகர்ந்தோமோ அதே வேதனையை நமக்குள் எடுத்து…
2.உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அங்கேயும் வேதனையை உருவாக்கி விஷத்தினைக் கூட்டி
3.அங்கேயும் நரக வேதனையைத் தான் படும்.

அந்த உடலில் இருக்கும் மகிழ்ச்சிகள் நீங்கி அவன் உடலில் விஷத்தைத் தான் உருவாக்கும். விஷத்தை உருவாக்கிய பின் அந்த உணர்வின் வழிப்பிரகாரம் அந்த எண்ணமே எமனாக மாறி அந்த உணர்வுக்கொப்ப இதைப் போன்று மாற்று உடல்களை உருவாக்கி விடும்.

அதனால் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது அந்த எமன் யார்…? “நமது எண்ணம்தான்…!”

உதாரணமாக ரோட்டிலே ஒருவன் வேதனைப்படுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்கின்றோம். கண்ணிலே பார்க்காமல் செல்ல முடியுமா…?

பார்த்தவுடனே அந்த வேதனைப்படும் உணர்வுகள் “அது சித்திரம்” எனக்குள் வந்து அது புத்திரனாக மாறுகின்றது அதே வேதனையை உருவாக்குகின்றது. நான் அதைப் பிள்ளையாக எடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றேன்.

ரோட்டிலே கிடந்தான் வேதனைப்பட்டான் துயரப்பட்டான் என்று
1.அவனுடைய உணர்வை எடுத்துச் சாப்பாடாகக் கொடுத்து இந்த பிள்ளையை
2.அவனால் நுகர்ந்து உடலுக்குள் உருவான அணுக்களுக்கு உணவாக்க கொடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வை வளர்த்தால் இதுவே நமக்குள் “நோய்” என்ற எமனாக வருகின்றது

எந்த வேதனைப்பட்டு அவன் வேதனையால் துடித்தானோ அல்லது மடிந்தானோ அதன் வழிப்படி அதே அளவுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்…! என்பதைத்தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று கதையாக எழுதி நமக்கு இந்தப் பேருண்மையை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

எல்லாம் படிக்கிறோம் அல்லவா…! ஆனால் படித்துவிட்டுச் சித்திர புத்திரன் எங்கே இருக்கின்றான்…? என்றால் அவன் எங்கேயோ இருக்கின்றான்… நாம் செய்யும் தவறுகளைக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றான்… எங்கேயோ இருக்கின்றான் என்று எண்ணுகிறோம்
1.ஆனால் “நமக்குள்ளே தான் அவன் இருக்கின்றான்…” என்பதை மறந்து விட்டார்கள்
2.அதைத்தான் ஞானிகள் நமக்கு நினைவுபடுத்துகின்றார்கள்

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்கின்றோம் உயிரிலே பட்டபின் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் செல்வதற்கு….!

உள்ளே சென்ற பின் “ஓ… பிரணவம்” அந்த வேதனைப்பட்ட உணர்வு பிரம்மமாகின்றது. ஏனென்றால் நுகர்ந்த உணர்வு இரத்தத்தில் கருவாகின்றது. பின் அந்த உணர்வே இயக்கச் சக்தியாக மாறும்பொழுது பிரம்மம் ஆகின்றது.

அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அந்த வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகிறது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…!
1.ஐயோ… அம்மா… என்று அவன் கத்துவான்
2.அதை உணர்வு இங்கே ஆன பின் இந்த உடலிலும் ஐயோ… அம்மா… என்ற நாதங்களைச் சொல்லும்படி வைக்கும்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் பிரம்மம் ஆன பிற்பாடு அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடலுக்குள் சிவமாகின்றது. சிவமாக மாறும்பொழுது உடலில் வேதனை…!

இந்த உடலில் நல்லதை உருவாக்கும் அனைத்துமே அலறத் தொடங்குகிறது. ஐய்யய்யோ இந்திரலோகத்தில் இரணியன் புகுந்து எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றான் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்வதாக இப்படி ஒரு கதை எழுதி நமக்கு உண்மை உணர்த்துகின்றனர் நாம் புரிந்து அருள் வழி வாழ்வதற்கு.

ஆனால் இதை விளக்கம் கொடுப்பவர்கள் இந்திரலோகமும் தேவர்களும் “எங்கேயோ இருக்கின்றார்கள்…” என்று தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் உணர்வின் இயக்கம் இந்த உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்று தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் புரியாத நிலையில் எங்கெங்கோ கொண்டு போகின்றோம்..

ஆனால் இத்தனையும் ஞானிகள் காட்டிய வழியிலே குருநாதர் சொன்ன முறைப்படி இதை நான் சொல்லும் பொழுது “நான் சொல்வது புரியவில்லை” என்று சொல்கின்றார்கள்.

மற்றவர்கள் சொன்ன கதையைப் பதிவாக்கி வைத்திருக்கின்றார்கள்… அது அவர்களுக்குள் வலுவாக இருக்கின்றது. இப்பொழுது நான் சொல்லிக் கொண்டு வருவதைக் கேட்டு விட்டு
1.சாமி சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிறையப் பேர் இப்படித் தான் சொல்கின்றார்கள்
2.எனக்குப் புரியவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள்.

இந்த தத்துவங்கள் எல்லாம் இயற்கையின் நிலையில் “எண்ணங்கள் எப்படி உருவானது…?” அன்று அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட இராமாயணம்.

1.அகஸ்தியன் கண்ட உண்மைகளை அவன் உணர்த்திய உண்மையைத்தான் வான்மீகி வெளிப்படுத்தினான்
2.அந்தத் தத்துவங்களைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.