ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2023

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

சந்தர்ப்பத்தினால்… குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் நமக்கு அதிகமாக வந்து விட்டால் “எதிரி நமக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று அந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் கஷ்டம் அதிகமாகிறது. அடுத்து மந்திரவாதிகளிடம் செல்கின்றோம்.

எனக்கு இப்படியெல்லாம் இவன் கெடுதல் செய்தான் என்போம். சரி யாகத்தை வளர்க்க வேண்டும்… இதற்கு 100… அதற்கு 100… என்று இப்படி வரிசையாக நூறு நூறாகச் சொல்லி அவன் பணத்தை வாங்கிக் கொள்வான்.
1.இதைக் கொண்டு இன்ன இடத்தில் புதைத்து வைத்து விடுங்கள்… அவன் கெட்டுப் போவான் என்று சொல்வான்
2.கெட்டுப் போவதற்காக வேண்டிக் காசு கொடுத்து மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துகின்றோம்.

கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…? அலுங்காமல் இன்னும் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கும்…!

நாம் நினைக்கின்றோம்… அவன் கெட்டுப் போக வேண்டும் என்று.
1.அவனும் கெடுவான்… செய்ய நினைத்தவனும் கெடுவான்.
2.செய்வினை செய்தவர்கள் யாராவது தப்பியிருக்கின்றார்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
3.தீமையைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர நன்மையின் உணர்வுகளை நாம் பெற முடிவதில்லை

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

அதனால்தான் குருநாதர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார். அந்தச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பன்றி எப்படி தள்ளுகின்றதோ… அது போல் உனது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலமே ஒரு சாக்கடையாக இருக்கின்றது. இந்தச் சாக்கடைக்குள் இருந்து நீ நல்ல பொருளை எடுக்க வேண்டும்.
1.அதற்குத் தானப்பா இந்த உபதேசமே கொடுக்கின்றேன்…!
2.அந்த இடத்திலே அவர் சொன்ன முறைப்படி என்னை எண்ணும்படி சொல்கின்றார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது அந்த நாற்றம் மறைகிறது.

சில நேரங்களில் என்னுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் அருகில் நாற்றம் இருந்தால் எனக்குத் தெரிவதில்லை. ஞாபகப்படுத்தினால் தான் எனக்குத் தெரிய வரும். சாக்கடையாக இருக்கின்றது… சாமி இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கின்றார் என்று கூட நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் அதை நான் நினைப்பதில்லை அது என்னைத் தாக்குவதுமில்லை. ஆனால் கண்ணிலே பார்த்து விட்டால் விலகிச் சென்று விடுகின்றேன்.

சில பேர்… வந்த உடனே நுகர்ந்து பார்ப்பார்கள்… சங்கடம் சலிப்பு எல்லாம் வந்த உடனே ஐயோ நாற்றமாகின்றது என்பார்கள்.

இதுகள் எல்லாம்
1.நம்முடைய உணர்வினை எதிலே செலுத்துகின்றோமோ அதன் வழி தான்
2.இந்த உயிரும்… நம் உடலில் உள்ள காந்தப்புலனும்… கண்ணுக்கு நினைவு வரப்படும் பொழுது…
3.அந்த உணர்வு தான் ஆன்மாவில் முன்னணியில் நிற்கும்… சுவாசித்து அதுவே இயக்கும்.

முன்னிலையில் நம் ஆன்மாவில் இருப்பது எதுவோ இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக இருக்கின்றது. நம் கண்ணுக்குப் பெயரும் பரமாத்மா என்று தான் ஞானிகள் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் இணைந்தே நாம் வாழுகின்றோம்.

உணர்வுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து நம் ஆன்மாவாக அதை மாற்றி உடலாக மாற்றிவிடும். நமது கண் பரமாத்மாவுடன் கலந்து தான் இருக்கின்றது. எதை நினைவுபடுத்துகின்றோமோ உடனே அது வருகின்றது

டி.வி.க்கு ஆண்டன்னா வைத்து இணைப்பு கொடுக்கின்றார்கள். எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ… காற்றிலிருந்து பிரித்து அந்தப் படக் காட்சிகளைக் காட்டுகின்றது.

1.நமக்கு எது ஆண்டன்னா…? நமது கண் தான்…!
2.அதன் உணர்வின் வழிப்படித் தான் நுகர்ந்து உயிர் வழி உணர்த்துகின்றது.
3.இந்த ஆண்டன்னா பழுதாகிவிட்டால் எந்த ரெக்கார்டை நீங்கள் எடுக்க முடியும்…?

அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் விஷத்தின் தன்மை கருவிழி ஈர்க்கும் சக்தி குறைகின்றது அதனால் நல்ல அணுக்களுக்கு வலுவான சக்தி கிடைப்பதில்லை.

கண்ணின் தன்மையிலே விஷத்தன்மை அதிகமாக படர்ந்து விட்டால்
1.விஷத்தின் உணர்வையே மீண்டும் இழுத்துக் கவர்ந்து வேதனை என்ற உணர்வுகளை ஊட்டிக் கொண்டே தான் இருக்கும்.
2.ஏனென்றால் கண்ணின் நரம்பு மண்டலம் அவ்வளவு சீக்கிரம் பாதித்துவிடுகிறது.
3.விஷத்தைக் கவரும் சக்தி தான் வருகின்றது.

அதிகமான வேதனைப்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நலிந்த சொல்லும் நலிந்த செயலும் வரும்… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட தீமை வரப்படும் பொழுது கண் பலவீனம் ஆகிறது. அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் சாமானை ஒருவன் திருடிக் கொண்டு போவான் என்றால் அவனை எண்ண வைக்காது… யாரோ செல்கின்றார்கள்…! என்று தான் தெரியும்.

பார்வை நன்றாக இருக்கப்படும் பொழுது ஒருவர் வித்தியாசமாகச் சென்றால் கூடத் தெரிய வருகின்றது. நடையைப் பார்த்த உடனே என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்கின்றோம்.

நம் பொருள் தெரிகின்றது… அது அவன் கையில் இருக்கும். ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது பார்க்க முடியாது. மகாபாரதத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

1.கண்ணன் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகொண்டு தான் அர்ஜுனனுக்கு வலு.
2.அப்போது அர்ஜுனன் எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றான்

ஆனால் கண்ணன் பரலோகத்திற்குச் சென்று விடுகின்றான் அர்ஜுனனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடி… ஓட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை… ஆக அவனால் பார்க்க முடியவில்லை யாரோ எவரோ…! என்ற நிலையில் தான் இருக்கின்றான். எவ்வளவு தெளிவாக ஞானிகள் நமக்கு உண்மையை அறிந்து கொள்ளும்படியாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்தைப் படித்தவர்கள் இதை வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கின்றார்கள். “கண்ணன் இறந்துவிட்டான்... அதனால் அர்ஜுனனுக்குச் சக்தி இல்லை…” என்று இப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர்.

நீங்கள் வேதனையுடனும் சோர்வுடனும் இருக்கப்படும் பொழுது கண்ணின் பார்வைகள் குறைகிறது. கண்ணுக்கு முன்னாடி திருடன் சென்றாலும்… வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் சென்றாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது தூரம் சென்ற பிற்பாடு தான் யாராவது பார்த்து… என்ன…? உங்கள் வீட்டிலிருந்து பொருளை எடுத்துப் போகின்றான் திருடன்…! என்று சொல்லும் போது தான். ஆ…! என்று அப்பொழுதுதான் நினைவு வரும்.

1.நம்முடைய உணர்வுகள் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தான் தத்துவங்களும் சாஸ்திரங்களும் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.
2.அதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்